சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

“நாங்க ட்ரெண்டிங் பெண்கள்!”

ஸ்ரீஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீஜா

இணையம்

யூடியூப் உலகில் கலை வளர்த்து, கலாய் வளர்த்து, கலகலப்பாக கர்ஜித்துக்கொண்டிருக்கும் சிங்கப் பெண்களின் சின்னஞ்சிறு பயோகிராபி இங்கே...

`ஃபைனலி’தர்ஷினி

வித்தியாசமான கான்செப்ட்டுகள், ஜாலியான டீம் என யூடியூப் களத்தை அழகாகப் பயன்படுத்திவரும் சேனல் `ஃபைனலி.’ இந்த டீமிலிருக்கும் ஒரே பெண், தர்ஷினி. என்னதான் காமெடியை மையமாக வைத்து இவர்கள் வீடியோக்கள் உருவாக்கினாலும், தர்ஷினி கண்களை உருட்டி உருட்டிக் கொடுக்கும் ரியாக்‌ஷன் க்யூட் ரகம்.

“நாங்க ட்ரெண்டிங் பெண்கள்!”

``எனக்குச் சொந்த ஊர் பேராவூரணி. படிச்சது பி.எஸ்ஸி இயற்பியல். `பொண்ணுங்கல்லாம் மீடியாப் பக்கம் போகக் கூடாதுப்பே. அந்தச் சோலியே நமக்கு ஆகாதுப்பே’ன்னு ஊரே ஸ்ட்ரிக்டா இருக்கும். ஆனா, நமக்கு மீடியாவுல வேலைக்குச் சேரணும்ங்கிறதுதான் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே. வீட்ல யாரும் என் கனவை ஏத்துக்கலை, தூக்கத்துலகூட இந்தக் கனவெல்லாம் வந்துடக் கூடாதுன்னு தண்ணி ஊத்தி எழுப்பிவிட்ருவாய்ங்க. இதுல எங்க குடும்பம், கூட்டுக் குடும்பம்ங்கிறதால இன்னும் போராட்டமாப்போச்சு. `ஒரு பொண்ணோட மனசு, இன்னொரு பொண்ணுக்குத்தான் புரியும்’னு சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அம்மாதான் முழு சப்போர்ட் பண்ணினாங்க. `மீடியாவுல வேலை பார்க்குற புள்ளையை யாரும்மா கல்யாணம் பண்ணிப்பா’ன்னு அப்பா உட்பட குடும்பமே கலவரம் பண்ணிச்சு. எல்லாத்தையும் மீறி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒண்ணுல தொகுப்பாளினியா சேர்ந்தேன். அங்கிருந்து ஒரு தோழி மூலமா, `ஃபைனலி’ யூடியூப் சேனலுக்கான ஆடிஷன்ல கலந்துக்கிட்டுத் தேர்வானேன். முதன்முறையா, `சீரியல் ஸ்பூஃப்’னு ஒரு சீரிஸ் பண்ணி ஃபேஸ்புக்ல ரிலீஸ் பண்ணினோம். சிலபல லைக்குகளும் ஷேர்களும் வந்தன. பிறகுதான் யூடியூப் சேனல்லேயே நேரடியா வீடியோ போட ஆரம்பிச்சோம். அப்படி, `சிங்கிள்ஸ்’ பற்றிப் போட்ட வீடியோ தாறுமாறா ஹிட்டடிச்சது. `ஃபைனலி’ தர்ஷினின்னு என் பெயர் கொஞ்சமா வெளியே தெரிய ஆரம்பிச்சது. எனக்கு ஸ்க்ரிப்ட் பண்ணணும், டெக்னிக்கல் பக்கம் வேலை பார்க்கணும்ங்கிற ஆசையும் இருக்கு. நமக்கு வருமானம்லாம் பெருசா வர்றது இல்லை. வெகுமானங்கள்தான் வருது. சர்வைவ் பண்றதே கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும், நம்ம வீடியோவைப் பார்த்துப் பல பேர் கவலை மறந்து சிரிக்கிறாங்கல்ல... இதுபோதும்! சமீபத்தில், ஒரு மேடையேறினேன். கூட்டமே `தர்ஷினி... தர்ஷினி...’ன்னு சந்தோஷத்துல அலறுச்சு. நான் நெகிழ்ந்துட்டேன். நடிக்க ஆரம்பிச்சு ஒரு வருஷம்தான் ஆவுது. அதுக்குள்ளே இந்த ரீச் கிடைச்சிருக்கு. வீட்டின் நிலவரம் இன்னும் அதே கலவரமாத்தான் இருக்கு. என்னை நினைச்சு வருத்தப்படுற என் குடும்பம், சீக்கிரமே என்னை நினைச்சு சந்தோஷப்படும்னு நம்புறேன்.”

`பொரி உருண்டை’ஹரிஜா

முழுக்க முழுக்கப் பெண்களே நடத்தும் முதல் தமிழ் யூடியூப் சேனல், பொரி உருண்டை. இந்தச் சேனலை கெத்தாக வழிநடத்துபவர் ராஜமாதா ஹரிஜா. கொஞ்ச நேரம் இவருடன் பேசினாலே போதும்... இவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

“நாங்க ட்ரெண்டிங் பெண்கள்!”

“எல்லாப்புகழும் என் கணவருக்கே! `ஏன் நீ சும்மாவே இருக்கே... ஏதாவது பண்ணு’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். அவர்தான் கேமரா வாங்கிக் கொடுத்து, எடிட் பண்ணவும் கத்துக்கொடுத்தார். அப்புறம் என் கல்லூரித் தோழிகளோட சேர்ந்து `பொரி உருண்டை’ யூடியூப் சேனலை ஆரம்பிச்சேன். அது இந்த அளவுக்கு நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. `பொரி உருண்டை’க்கு எப்பவுமே பாசிட்டிவ் கமென்ட்ஸ்தான் வருது. இந்த விஷயம்தான் எங்களை உற்சாகமா வேலை பார்க்க வைக்குது. எங்களைச் சுத்தி நடக்குற விஷயங்களைத்தான் கான்செப்ட்டா மாத்துவோம். கூட சின்னதா ஒரு மெசேஜும் சொல்லுவோம். சமீபத்துல என் அம்மா என் வீட்டுக்கு வந்திருந்தபோது, போன் பத்தின சந்தேகங்களா கேட்டு டார்ச்சர் பண்ணிட்டிருந்தாங்க. அதையே கான்செப்டாக்கி வீடியோ பண்ணினோம். பயங்கரமா ஹிட் அடிச்சது அந்த வீடியோ. தண்ணீர்ப் பிரச்னை பத்தி ஒரு வீடியோ லைவ் லொகேஷன் போய் ஷூட் பண்ணும்போது, அங்கிருந்த மக்களே நிறைய ஐடியாஸ் கொடுத்தாங்க. அங்கே குடத்தோடு காத்திருந்த பெண்களையும் வீடியோவில் நடிக்கவெச்சோம். அப்போஅங்கிருந்த ஒரு பாட்டி, `எங்க காலத்துல இந்த மாதிரியெல்லாம் இருந்திருந்தா நிறைய பிரச்னைகள் பத்தி தைரியமாப் பேசியிருப்போம். பரவாயில்லை... பொண்ணுங்கல்லாம் சேர்ந்து நல்ல விஷயம் பண்றீங்க’ன்னு பாராட்டினாங்க. `டீ வேணுமா பன்னு வேணுமா?’ன்னு கேட்டுப் பாசத்தைப் பொழிஞ்சாங்க. அவங்க அன்புல நாங்க உருகிப் போயிட்டோம். பெண்கள், அதிலும் டீனேஜ் பெண்கள்தான் எங்களோட அதிகமான பார்வையாளர்கள்ங்கிறதாலே, ரொம்பப் பொறுப்புடனும் கவனத்துடனும் வீடியோ பண்ணிட்டிருக்கோம். எங்க சேனலுக்கு வரும் விளம்பரங்களைக்கூட கவனமாத்தான் தேர்வு செய்யறோம். எவ்வளவு காசு கொடுத்தாலும் டேட்டிங் ஆப் விளம்பரங்கல்லாம் போடவே மாட்டோம். பெண்கள்தான் `பொரி உருண்டை’யின் கண்கள். குமுதாஸ் செம ஹேப்பி போங்க.’’

`நக்கலைட்ஸ்’தனம்

யூடியூப்பில் ஆண்கள் மட்டுமே காமெடி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், ஒட்டுமொத்த டிரெண்டையும் மாற்றியமைத்தவர் தனம். கொங்குத் தமிழ், இயல்பான நடிப்பு இவைதான் இவரின் பலம்.

“நாங்க ட்ரெண்டிங் பெண்கள்!”

``மனித உரிமை, சமூகம் சார்ந்த போராட்டங்கள், சேவைகள்னு தொடர்ந்து பண்ணிட்டிருக்கறேன் கண்ணு. சில வருஷங்களுக்கு முன்னாடி, பெருமாள் முருகன் எழுதின `மாதொருபாகன்’ புத்தகம் சர்ச்சையாச்சுல்ல... அந்த நேரத்துல அவருக்காகச் சில கூட்டங்கள்ல கலந்துகிட்டேன். அப்போ, அந்தப் புத்தகத்தை மையமா வெச்சு, தோழர் பிரசன்னா குறும்படம் ஒண்ணு தயாரிச்சார். அரசியல், நையாண்டின்னு படம் ரவுசா இருக்கும். அந்தப் படத்துல சின்ன கேரக்டர்ல நடிச்சேன். அப்புறம் டீமானிட்டைசேஷன் வந்துபோச்சு. அதைப் பத்தின `நக்கலைட்ஸ்’ சேனலோட வீடியோ ஒண்ணுலயும் நடிச்சேன். அப்புறம், அம்மா அலப்பறைகள் ஆரம்பிச்சாங்க. நான் அம்மாவா நடிச்சேன்; இல்லை இல்லை வாழ்ந்தேன்னு சொல்லிக்கோணும். நக்கலைட்ஸ் கொஞ்சம் கொஞ்சமா பிரபலமாச்சு. அதுகூடவே நானும். சினிமா வாய்ப்பெல்லாம் வந்தது. ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துல நடிச்சிருக்கேன். டீச்சருக்குப் படிச்ச எனக்கு டீச்சராவுறதுக்கான வாய்ப்பு அமையலை. ஆனா, 58 வயசுக்குப் பொறவு, பல பேருக்கு என்னைத் தெரிஞ்சிருக்கு. இதுபோதும்! சாதிக்க வயசு தடை கிடையாது. நம்ம திறமை என்னன்னு கண்டுபிடிச்சாலே போதும், இந்த ஆன்லைன் உலகத்துல ஈஸியா ஃபேமஸாகிடலாம். திருமணமும் சமையலும் மட்டுமே பெண்களுக்கானது கிடையாது. அவங்களுக்குப் பிடிச்ச எல்லா விஷயங்களையும் செய்ய அவங்களுக்கு உரிமை இருக்குது.”

`நக்கலைட்ஸ்’ஸ்ரீஜா

த்தனையோ ஜொலிக்கும் வைரங்கள் இருந்தாலும், ஸ்ரீஜா கொஞ்சம் யுனிக். இவரின் அலப்பறையும் அட்டகாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எடுக்கும் கான்செப்ட்டுகளில் துணிச்சலாக நடிப்பவர். நக்கலைட்ஸின் சிங்கப் பெண்.

“நாங்க ட்ரெண்டிங் பெண்கள்!”

“காலேஜ் படிச்சுட்டிருக்கும்போது அந்த வரலாற்றுச் சம்பவம் நடந்தது. காலேஜ்ல நிறைய நாடகங்கள் பண்ணுவோம். தனம் அம்மா எங்க நாடகங்களைப் பார்க்க வருவாங்க. அவங்கதான் என்னை ‘நக்கலைட்ஸ்’ ஆடிஷன்ல கலந்துக்கச் சொன்னாங்க. கலந்துகிட்டேன், தேர்வானேன். தொடர்ந்து வீடியோக்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிக்குறதுல எங்க வீட்ல உள்ளவங்களுக்கு உடன்பாடு இல்லாம இருந்தது. இதனாலேயே, வீட்ல அடிக்கடி பிரச்னைகள் வரும். பிறகு, நான் வீட்ல பேசிப் புரியவெச்சேன். ஆனா, இப்போவரை, நான் நடிச்ச வீடியோக்களை முழுசாகப் பார்த்ததே இல்லை. அம்மா மட்டும் பார்த்துட்டு அப்பப்போ பாராட்டுவாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்ச வீடியோன்னா ‘க்ரஷ் அலப்பறைகள் 2’தான். ஏன்னா, நடிச்சது மட்டுமல்லாம, ஸ்க்ரிப்ட்லயும் வொர்க் பண்ணியிருந்தேன். பெருசா வருமானம்லாம் இல்லைங்க. ஆனாலும், நடிப்புதான் எல்லாம்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ, நடிப்புப் பயிற்சியும் எடுத்துக்கிட்டிருக்கேன். முன்னாடியெல்லாம் `ரேவதி பொண்ணு ஸ்ரீஜா’ன்னு சொல்லுவாங்க. இப்போ “ஸ்ரீஜா அம்மாதானே நீங்க”ன்னு எங்க அம்மாவைப் பார்த்துக் கேட்குறாங்க. வேற என்னங்க வேணும்! உங்களுக்கு மட்டும் ஒரு சீக்ரெட் சொல்றேன், நான் சினிமாவுலயும் ஒரு படம் நடிச்சிட்டேன். `கயல்’ ஆனந்தியோட நடிச்சிருக்கேன். சீக்கிரமே பெரிய ஸ்க்ரீன்லயும் மீட் பண்ணுவோம்.”