லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

நிறைய குட்டி சுதாக்களை உருவாக்கியிருக்கேன்!

சுதா ரகுநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
சுதா ரகுநாதன்

சுதா ரகுநாதன்

நீண்டகாலத்துக்குப் பிறகு மீடியாவில் மவுனம் கலைத்தார் சுதா ரகுநாதன். கடந்த இதழில் நிறைய பேசினார். வெற்றிகள் வரும்போது கூடவே கிளம்பும் விமர்சனங்கள்... இடையில் எடுத்த ஒரு வருட பிரேக்...ஆண் கலைஞர்களுக்கும் பெண் கலைஞர்களுக்கும் கிடைக்கும் அங்கீகார பேதம்... மகளின் திருமணம் ஏற்படுத்திய சர்ச்சை... இப்படி இன்னும் நிறைய விஷயங்களைப் பற்றி இந்த இதழில் தொடர்கிறார்...

நிறைய குட்டி சுதாக்களை உருவாக்கியிருக்கேன்!

2013-ல் சங்கீத கலாநிதி வாங்கினபோது ரொம்ப சீக்கிரம் அது உங்களுக்குக் கிடைச்சதா பேசினாங்க. பத்மபூஷண் வாங்கினபோதும் நீங்க லாபி பண்ணியதா சொன்னாங்க. உங்க வெற்றிகளும் அங்கீகாரங்களும் விமர்சனங்களுக்குள்ளாகும்போது எப்படி இருக்கும்?

பெண்களுக்கு ஏதாவது நல்ல விஷயங்கள் நடந்தாலோ, அவங்க ஏதாவது சாதிச்சாலோ, விருதுகள் வாங்கினாலோ ஈஸியா கமென்ட் அடிக்கிறது காலங்காலமா தொடருது. இன்னிக்கு மியூசிக் அகாடமி 91-வது வருஷத்தைக் கொண்டாடிக்கிட்டிருக்கு. இத்தனை வருஷங்களில் 13 பெண்கள்தாம் சங்கீத கலாநிதி விருது வாங்கியிருக்காங்க. அதுவும் சமீபகாலங்களில்தான் சாத்தியமாயிருக்கு. நான் வாங்கினபோது அகாடமியின் தலைவர் முரளி சார், `எப்போதும் 70, 80 வயசுலதான் இந்த விருதை வாங்கி பார்த்திருக்கோம். அணுகுமுறை மாறியிருக்கு. இளம் தலைமுறைக்கும் இந்த அங்கீகாரத்தைக் கொடுக்கணும்னு முடிவு பண்ணியிருக்கோம். அதுல முதல் ஆளா வாங்கப்போறவர் சுதா'ன்னு அறிவிச்சார். இப்போ இளம்தலைமுறையினர் வாங்கறதைப் பார்க்கும்போது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. இந்த வருஷம் சௌமியா அந்த விருதை வாங்கறாங்க. ரொம்பவே தகுதியுள்ளவங்க. நான் பத்மபூஷண் வாங்கினபோது எனக்கு டெல்லியில செல்வாக்கு இருக்கிறதாகவும், லாபி பண்ணி வாங்கினதாகவும் பேசினாங்க. எனக்கு அப்படி யாரையும் தெரியாது. அது எனக்குத் தேவையுமில்லை.

நடுவில் ஒரு வருஷம் சீசனில் நீங்க பாடலையே... அந்த ஒரு வருஷம் எப்படியிருந்தது? என்ன நடந்தது?

அந்த ஒரு வருஷம் என் ரசிகர்களை மிஸ் பண்ணினேன். பாடறதுக்கு குரல் என்பது முக்கியமான கருவி. அந்தக் கருவிக்கு ஒரு ரெஸ்ட் கொடுக்கணும். நம்ம உடம்பே ஒரு மெஷின்தான். ஒருகட்டத்துல ஏதோ ஒரு பாகம் தேய்மானமடையும், அதை நாம கவனிக்கணும். அதுக்கு ஒரு தாலாட்டு பாடிப் பார்த்துகிட்டா அது நாம சொன்னபடி கேட்கும். அதுக்காக ஒரு வருஷம் பிரேக் எடுத்தேன். `லண்டன்ல போய் ட்ரீட்மென்ட் எடுக்கப் போறாங்க, இவங்களுக்குப் பெரிய நோய் வந்திருச்சு'ன்னெல்லாம் ஏதேதோ பேசினாங்க. வழக்கம்போல நான் எதையும் கண்டுக்கலை. சீசன்ல பாடறதுக்கு கடினமான உழைப்பு தேவை. ஸ்ட்ரெஸ்ஸும் அதிகமா இருக்கும். குரலுக்கு அதிக ஸ்ட்ரெயின் இருக்கும். அதனால ஒரு வருஷம் பிரேக் எடுக்கலாம்னு முடிவெடுத்தேன். அந்த வருஷம் வெளியில நிறைய கச்சேரிகள் கேட்கப் போனேன். நான் எடுத்த அந்த முடிவால் நிறைய கலைஞர்கள் பலனடைஞ்சாங்க. இப்படியொரு விஷயமிருக்கான்னு யோசிக்க ஆரம்பிச்சாங்க. அந்த ஒரு வருஷ இடைவெளி எனக்கும் பலன் தந்தது. திரும்ப வந்தேன். முதல்லேருந்து ஆரம்பிச்சதுபோல புத்துணர்வோடு பாட ஆரம்பிச்சேன். மறுபடி பாட வந்தபோது வெறும் கண்ணாடியில்லை, பூதக்கண்ணாடி வெச்சுக்கிட்டு கவனிச்சாங்க. அதுக்கும் நான் தயாரா இருந்தேன். அதுக்கான மன தைரியம் என்கிட்ட இருந்தது.

சுதா ரகுநாதன்
சுதா ரகுநாதன்
நான் வாழ்க்கையில யாரையும் காதலிச்சதில்லை, என் சங்கீதத்தைத் தவிர. காதலுக்கான அர்த்தத்தை எனக்குச் சொல்லிக்கொடுத்தது என் குரு, சங்கீதம், என் கணவர், என் இசை, நான் வேண்டும் கடவுள்...

பாடற ஆண்களுக்குக் கிடைக்கிற பாராட்டும் பெண்களுக்குக் கிடைக்கிற பாராட்டும் ஒரே மாதிரி இருக்கா?

ரெண்டும் சமமில்லை. பெண்ணின் சங்கீதமும் வெற்றியும் வேறு மாதிரிதான் பார்க்கப்படுது. பெண்கள்னா `தளுக்கா பாடிட்டுப் போறவங்க' என்பது சிலரின் விமர்சனம். ஒரே ராகத்தை ஓர் ஆண் பாடறதுக்கும், ஒரு பெண் பாடறதுக்கும் வித்தியாசம் இருக்கிறதா அவங்க சொல்வாங்க. கண்டிப்பா வித்தியாசம் இருக்கும். ஆனா, அது அவங்க சொல்ற வித்தியாசமில்லை. பெண்ணுக்குண்டான நளினம், அணுகுமுறை, மெலடி, பாவம், உணர்வுகள் எல்லாம் இருக்கத்தானே செய்யும்? ஆணுக்குண்டான கம்பீரம், பாடுவதில் ஒரு முரட்டுத்தனம்... அதெல்லாம் இயற்கையா இருந்துதானே ஆகணும்? பெண்ணையும் ஆணையும் நிற்கவெச்சா தோற்றத்தில் எப்படி வித்தியாசம் இருக்குமோ அது பாட்டுலயும் இருக்கும். இருக்கணும். இந்த விஷயத்திலும் விமர்சனங்களை நான் பொருட்படுத்தறதே இல்லை. 50 பேர் என் பாட்டைக் கேட்டா, 30 பேர் பிரமாதம்னு சொல்வாங்க. 20 பேர் வேற ஏதோ சொல்வாங்க. கடந்துதான் போயாகணும்...

சுதா ரகுநாதன்
சுதா ரகுநாதன்

பெண் பாடகர்களுக்கு அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு, அழகா இருக்க வேண்டிய அழுத்தமும் சேர்ந்திருக்கிறதா ஃபீல் பண்ணியிருக்கீங்களா... மேடையில குரல் எடுபட்டா போதாதா... பட்டுப்புடவையும் நகையும்தாம் உங்க பெருமை பேசணுமா...

அதுவும் நான் என் குருவிடமிருந்து எடுத்துக்கிட்ட விஷயம்தான். 60 -70கள்லயே எம்.எல்.வி அம்மா அவ்வளவு பளிச்னு இருப்பாங்க. பூவெச்சுக்கிட்டு, அழுத்தமான கலர்ல பட்டுப் புடவை உடுத்திக்கிட்டு, தாம்பூலம் போட்ட இதழ்களோடு அவங்க வந்தாலே ஒரு கம்பீரம் தெரியும். `ஒரு மேடையில் ரெண்டு மணி நேரம் உட்கார்ந்திருக்கப் போறோம்.வெறும் குரலைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்க்கணும். அப்போ பளிச்னு ஏன் இருக்கக் கூடாது... ஏன் அழுது வடியணும்... ஏன் சோர்ந்து தெரியணும்'னு அவங்க கேட்பாங்க. அந்தக் கருத்தைதான் நானும் எடுத்துக் கிட்டேன். அதுல ஜிமிக்கி, புடவைக்கு மேட்ச்சிங் நகைகள்னு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் சேர்த்துக்கிட்டேன். பாட்டுல கிரியேட்டிவிட்டியைப் புகுத்தற மாதிரி டிரஸ்லயும் பண்றதுல தப்பில்லையே... அதுக்காக முகம் சுளிக்கவைக்கிற அளவுக்கு ஆடம்பரம் அவசியமில்லை. அளவோடு இருக்கலாம். இந்த விஷயத்துல நான் ஒரு டிரெண்டு செட்டர் என்பதில் சந்தேகமே இல்லை. அதை நான் ஆரம்பிச்சபோது நிறைய விமர்சனங்களை சந்திச்சேன். `எதுக்கு இவ்வளவு ஆடம்பரமான புடவை...இவ்வளவு நகை'ன்னு கேட்ட பலரும் இன்னிக்கு அதே மாதிரி ஃபாலோ பண்றாங்க. எனக்கு நானே சிரிச்சுக்கறேன். நான் நிறைய குட்டி சுதாக்களை உருவாக்கியிருக்கேன்றதுல எனக்கு சந்தோஷம்தான்!

நடிகைகளுக்கு இணையான பராமரிப்பு உங்களுக்கும் தேவைப்படுதா... எடை போட்டா குரல் பாதிக்கும்னு ஒருமுறை சொல்லியிருந்தீங்க... உங்களுக்கு அப்படி நடந்திருக்கா...

இது நல்ல விஷயம்தானே... வெயிட் போட்டிருக்கிறது குரல் மூலமா தெரியறதே ஒரு சிக்னல்தானே? உட்கார்ந்து எழுந்திருக்கும்போது சிரமமா ஃபீல் பண்ணீங்கன்னா நீங்க வெயிட் போட்டிருக்கீங்க.... அக்கறை எடுத்துக்கணும்னு அர்த்தம். அதனால என் குரல் எனக்கு சிக்னல் கொடுத்தா நான் உடனே அலர்ட் ஆயிடுவேன். உடனடியா வாக்கிங்கையும் எக்சர்சைஸையும் ஆரம்பிச்சு பழையபடி கொண்டு வந்துடுவேன்.

சுதா ரகுநாதன்
சுதா ரகுநாதன்

கர்னாடக சங்கீதக் கலைஞர்கள் பலரும் தமிழில் பாட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனாலும், அந்த இசை மட்டும் இன்னும் மேல்தட்டு மக்களுக்கானதாகவே தொடர்ந்திட்டிருக்கே... அடித்தட்டு மக்களுக்கு அந்தக் கலை எப்போ சாத்தியம்?

அடித்தட்டு மக்களுக்கு எடுத்துட்டுப் போகக்கூடிய சங்கீதமில்லை இது. இதுல ஒரு சயின்ஸ் இருக்கு. எல்லாரும் பி.எஸ்ஸி மேத்ஸும் பி.எஸ்ஸி பிசிக்ஸும் படிக்க விருப்பப்படற தில்லை. அதே மாதிரிதான் கர்னாடக சங்கீதமும். பொதுவான பாடல்கள், கீர்த்தனைகள் பாடினா எல்லாராலும் ரசிக்க முடியும். அலை

பாயுதே, கண்டநாள் முதலாய், சின்னஞ்சிறு கிளியே மாதிரி பாடல்களைப் பாடி எல்லா பிரிவு மக்களையும் திருப்திபடுத்தலாம். ஆனா, கர்னாடக சங்கீதத்துக்கு ஒரு சயின்ஸ் இருக்கு. அதுக்கு ராகம், ஸ்வரம், நிரவல்னு சில அம்சங்கள் முக்கியம். இல்லாட்டா அது சிதைஞ்சு போயிடும்.

இந்த சயின்ஸ் அவங்களுக்குப் புரியாதுன்னு சொல்றீங்களா?

புரியாதுன்னு சொல்லலை. புரிஞ்சுக்கறதுக் கான முயற்சிகளை அவங்கதான் எடுக்கணும். நாம போய் ஒவ்வொருத்தருக்கா இதுதான் ராகம், சதுஸ்ருதி ரிசபம், அந்தர காந்தாரம், பிரதி மத்யமம், பஞ்சமம்னு சொல்லிட்டிருக்க முடியாதில்லையா?

கர்னாடக இசையை பாமரர்களுக்கும் வசதியில்லாத வர்களுக்கும் எடுத்துட்டுப் போக ஒரு டி.எம்.கிருஷ்ணா மட்டும் போதுமா?

டி.எம் கிருஷ்ணா மாதிரி ஒவ்வொரு கலைஞரும் அவங்கவங்க எல்லைக்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தால் அந்த மனிதச் சங்கிலி நீண்டுகிட்டே போகும். பாம்பே ஜெயஸ்ரீ கிராமங்களுக்குப் போய் சொல்லிக்கொடுக்கறாங்க. அனில் ஸ்ரீனிவாசன், சில கார்ப்பரேஷன் பள்ளி களுக்குப் போய் ராப்சோடி என்ற குழுவை உருவாக்கிட்டிருக்கார். நானும் கார்ப்பரேஷன் பள்ளிகளுக்குப் போய் சொல்லித் தரேன்.

ஒவ்வொருத்தருக்கும் ஒருவித அணுகுமுறை இருக்கு. வெறும் பத்து பேர் செய்தால் போதாது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் செய்யணும். பள்ளிக்கூட நிர்வாகிகளை இதுல இணைக்கணும். இந்த வருஷம், இந்த வகுப்பில் சிறப்பா பாடற குழந்தைக்கு ஸ்காலர்ஷிப் என்கிற மாதிரியான விஷயங்களைச் செய்யலாம். அப்போ அந்தக் குழந்தை ஓர் ஆர்வத்தோடு பாட்டு கத்துக்கும். அப்புறம் எனக்கு பாட்டு நல்லா வருதேன்னு நம்பும். ரியாலிட்டி ஷோக்கள்ல எத்தனையோ குழந்தைகள் எந்தப் பயிற்சியும் பின்னணியும் இல்லாம ஃபைனல்ஸ் வரைக்கும் வர்றதைப் பார்க்கறோம். அதுக்குண்டான சூழலை நாம உருவாக்கித் தரணும். எல்.கே.ஜி குழந்தையிலேருந்து சின்ன பஜன், நாமாவளின்னு ஆரம்பிச்சா, அந்தப் பாட்டில் உள்ள ருசி அவங்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும். வாரம் ஒரு நாளோ, ரெண்டு நாளோ சங்கீத வகுப்பு ஆரம்பிச்சா, பள்ளி இறுதி முடிக்கிறதுக்குள்ள அவங்களுக்கு ஒரு முதிர்ச்சி, வளர்ச்சி வரும். சங்கீதம் கேட்கற ஆர்வம் வரும்.

உங்க மகளோ, மகனோ இசையில் உங்க பேர் சொல்ல வாரிசாக வராமல் போனதில் வருத்தம் உண்டா?

என் பிள்ளைகளை சங்கீதத்தை புரொஃபஷனா எடுத்துக்கச் சொல்லி நான் வற்புறுத்தலை. என்கூட 20 வருஷங்கள் இருந்திருக்காங்க. நான் அனுபவிக்கிற பிரஷரைப் பார்த்திருக்காங்க. வீட்டு விசேஷமோ, பள்ளி நிகழ்ச்சியோ நான் இருப்பேன்னு சொல்ல முடியாது. அதையெல்லாம் பார்த்துட்டு அவங்களே இது புரொஃபஷனா இருக்க வேண்டாம்னு ஒதுக்கிவெச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். என் பையன் பிசிக்ஸ் புரொஃபசர். பேப்பர் எழுதும்போதெல்லாம் சூஃபி மியூசிக்கோ, ரஹ்மான் மியூசிக்கோ, கோக் ஸ்டூடியோ மியூசிக்கோ கேட்டுக்கிட்டே இருப்பான். என் மகளும் அப்படித்தான். ரெண்டு பேரும் எல்லாவிதமான இசையையும் கேட்பாங்க. ஒருவேளை அவங்க கர்னாடக சங்கீதத்தை புரொஃபஷன்னா எடுத்திருந்தா, அதுக்குள்ளேயே ரெஸ்ட்ரிக்ட் ஆயிருப்பாங்களோ என்னவோ... அவங் களால எனக்கும் எல்லா இசையும் தெரியுது. ஆனாலும், இசையில் நேரடி வாரிசில்லையேங்கிற வருத்தம் நிச்சயம் எனக்கு உண்டு. அங்கேயும் என் குருவைத்தான் நினைச்சுப்பேன். அவ்வளவு பெரிய வித்வானான அவங்களுக்கே அப்படியொரு வாரிசு இல்லை. நாங்க எல்லாம்தான் அந்தக் குறையைப் போக்கிட்டிருக்கோம். எனக்கும் அந்தப் பிராப்தம் இல்லை போல... ஒருவேளை என் பேரன், பேத்திக்கு வருமோ, என்னமோ!

உங்க மகளின் திருமணம்... ஆப்பிரிக்க மாப்பிள்ளை மைக்கேல்.... அந்த விஷயங்கள் ஏற்படுத்திய சர்ச்சை...

அந்தச் சர்ச்சை எங்களை பாதிக்கவே இல்லை. நாங்க எங்களுக்குள்ளேயே ஒரு வட்டத்தைப் போட்டுக்கிட்டோம். இதைப் பத்தி வெளியில சொல்றதில்லை, சொல்ல வேண்டிய அவசியமும் இல்லைன்னு நினைச்சோம். குழந்தையின் சந்தோஷம் மட்டும்தான் முக்கியம். அவ ஆசைப்பட்டுட்டா. அவளுக்கு அவர்கிட்ட எந்த விஷயம் ஈர்த்ததுன்னு எனக்குத் தெரியாது. நான் வாழ்க்கையில யாரையும் காதலிச்சதில்லை, என் சங்கீதத்தைத் தவிர. காதலுக்கான அர்த்தத்தை எனக்குச் சொல்லிக்கொடுத்தது என் குரு, சங்கீதம், என் கணவர், என் இசை, நான் வேண்டும் கடவுள்...

என் மகள் இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தீர்மானமா இருந்தாள். அவளுக்கு எது நல்லதுன்னு தெரியும். அவ விருப்பத்தை நிறைவேற்றணும் என்பது மட்டும்தான் எனக்கும் என் கணவருக்கும் முக்கியமா இருந்தது. பையனோடு நாங்களும் பழகினோம். எங்களை அம்மா அப்பான்னு வாஞ்சையோடு கூப்பிட ஆரம்பிச்சார். நாங்க பார்த்து கல்யாணம் பண்ணியிருந்தால்கூட அந்த மாப்பிள்ளை அம்மான்னு கூப்பிட்டிருப்பாரான்னு தெரியலை. இங்கே நடந்த விஷயங்களைப் பார்த்து எங்களைவிட அவருக்குத்தான் பெரிய ஷாக். `நான் 40 வருஷத்துல சம்பாதிச்ச புகழை நீங்க ஒரே மாசத்துல சம்பாதிச்சிட்டீங்க'ன்னு அவர்கிட்ட சொன்னேன். சர்ச்சையைக் கிளப்பினவங்க சொன்ன மாதிரி கிறிஸ்தவரா மதம் மாற வேண்டிய அவசியம் எங்க மகளுக்கும் இல்லை. மாப்பிள்ளையும் தான் ஒரு கிறிஸ்தவர் என்ற முத்திரையைக் குத்திக்கிட்டு அலையலை. அவர் பிறப்பு அப்படி. இவ பிறப்பு இப்படி. அவ்வளவுதான். நாங்ககூட கோயில்ல கல்யாணம் பண்ணிட்டு, சிம்பிளா ரிசப்ஷன் வெச்சிடலாம்னு சொன்னோம். ஆனா, அவங்க ஆசைப்படியே எதுலயும் குறைவைக்காம ஊஞ்சல்லேருந்து, நலங்கு, காசி யாத்திரை, மெஹந்தி, சங்கீத்னு எல்லாமே செய்தோம். நாங்க நல்லா இருக்கணும்னு உண்மையிலேயே நினைக்கிற நல்ல நண்பர் களோடு எல்லாத்தையும் சந்தோஷமா என்ஜாய் பண்ணினோம்.

சினிமாவில் பாடறது பற்றி... இதுவரை பாடினதில் உங்க ஃபேவரைட் எது?

சமீபத்தில் `காளிதாஸ்' படத்துல `மழை'னு ஒரு பாட்டு பாடியிருக்கேன். நிறைய புதுமைகள் செய்ய விரும்புகிறவள் நான். சினிமாவில் எனக்குப் பொருத்தமான பாடல்களைப் பாடறதை நல்ல விஷயமா பார்க்கறேன். ஒரே பாட்டு பெரிய ஹிட்டாகி, லட்சக்கணக்கான மக்களை அடையுது. எனக்கும் ஓர் அடையாளத்தைத் தருது. `இவன்'ல `என்னை என்ன செய்தாய்', `வாரணம் ஆயிரம்'ல `அனல்மேலே பனித்துளி'... இப்படி நான் பாடினதுல ஒவ்வொண்ணும் ஒவ்வொருவிதமான எமோஷனைத் தந்திருக்கு.

தியாகராஜர் ஆராதனை..?

35 வருஷங்களா தவறாமல் போயிட்டி ருக்கேன். அதை நான் செலுத்தற நன்றி உணர்வா பார்க்கறேன். தியாகராஜர் கீர்த்தனைகளை ஒவ்வொரு கச்சேரியிலும் பாடறோம். புகழ், பணத்தைவிடவும் வாழ்க்கையை சம்பாதிச்சிருக்கோம். ஒவ்வொரு வித்வானும் தான் அதுல கலந்துக்கணும்னு நினைச்சாதான் அந்த விழா நடக்கும். அப்படியொரு தீர்மானம் எடுத்தேன். கடவுள் எத்தனை வருஷங்களுக்கு அழைச்சிட்டுப் போறாரோ பார்ப்போம்...

`சமுதாயா' ஃபவுண்டேஷன் எப்படிப் போயிட்டிருக்கு?

சமுதாயா ஆரம்பிச்சு 20 வருஷங்கள் ஆகுது. நிறைய நல்ல விஷயங்களைச் செய்திருக்கோம். மனசுக்கு நிறைவா இருக்கு. இதயநோய், புற்றுநோய் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சைகள், கட்டடம் கட்டிக்கொடுக்கிறது, கழிவிடங்கள் கட்டிக்கொடுக்கிறது, கேலிப்பர் கொடுக்கிறதுன்னு நிறைய பண்ணியிருக்கோம். இன்னும் நிறைய பண்ணணும். நம்மால பலனடைஞ்சவங்க காட்டற அந்த நன்றியும் அவங்களுடைய ஆனந்தக் கண்ணீரும் நிச்சயம் எங்களை வாழவைக்கிறதா நம்பறேன்.

மியூசிகல் டீடூர் (Musical Detour) பற்றி... ஏன் இந்த முயற்சி?

கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பீங்களான்னு கேட்டீங்க... திரும்பிப் பார்த்தேன். அது ஒரு நிறைவைத் தந்தது. அதை எல்லார்கூடவும் பகிர்ந்துக்கணும்னு நினைச்சேன். என்னுடைய போட்டோஸ், ஆல்பம்னு எல்லா கலெக்‌ஷனும் இருந்தது முயற்சி செய்து பார்க்கலாம்னு ஆரம்பிச்சேன். என்னவெல்லாம் பண்ணியிருக்கேன்னு யூடியூப்ல இசையோடு சேர்த்துப் பேச ஆரம்பிச்சேன். `இவ்ளோ பண்ணியிருக்கியா'ன்னு எல்லாரும் ஆச்சர்யப்பட்டாங்க. முயற்சி தொடர்ந்திட்டிருக்கு!