Published:Updated:

`அண்ணாமலை' முதல் `சிவா' வரை... ஒரே பாடலில் கோடீஸ்வரர் ஆனவர்கள்!

என்னதான், 'இதெல்லாம் நிஜத்துல நடக்குமா பாஸ்' எனப் பலர் விமர்சனம் செய்தாலும், இந்தத் தொகுப்பில் வரும் பாடல்கள் ஒருநாளும் நமக்குத் தன்னம்பிக்கையை விதைக்கத் தவறியதில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அந்தக் காலமோ, இந்தக் காலமோ.. எந்தக் காலமாக இருந்தாலும், எவ்வளவுதான் உழைத்தாலும், சுழியத்திலிருந்து தொடங்கி மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்குச் சில காலம், தாராளமாக ஆகும். ஆனால், அந்தக் காலக் கணக்கையெல்லாம் தலைக்குமேல் தூக்கி அடித்துவிட்டு தமிழ் சினிமாவில் ஒரே பாடலில், சில நிமிடங்களில் பணக்காரர்கள் ஆனவர்களின் தொகுப்பு இது.

2
Annamalai

அண்ணாமலை - 'வெற்றி நிச்சயம்'

``மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம். பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம். பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே! ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே! எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே."

`ஒரே பாடலில் பணக்காரன் ஆகும்' டிரெண்டைத் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய பாடல், இதுவாகத்தான் இருக்கும். நண்பன் அஷோக், தனது வீட்டை இடித்துத் தனக்கு துரோகம் செய்துவிட, அவனுக்கு எதிராகச் சவால்விட்டு அவனை வெல்ல அயராது உழைக்க ஆரம்பிக்கிறார், அண்ணாமலை.

முதலில் மாட்டுப் பண்ணை வைக்கிறார். பிறகு, ஹோட்டல் கட்டி, அதை தனக்கு தக்க சமயத்தில் உதவி செய்த மந்திரி கைகளால் திறக்க வைக்கிறார். இதற்கிடையில், தனது தங்கைக்குத் திருமணம் செய்து வைக்கிறார். காலங்கள் மாறுகிறது. அண்ணாமலைக்கு வயதாகிறது. பாடலின் இறுதியில், மிகப்பெரிய பங்களாவிற்குக் குடும்பத்துடன் குடிபெயர்கிறார். இப்படி, அவர் 'படிப்படியாக' முன்னுக்கு வரும்போது, ஒலிப்பதுதான் இந்த`வெற்றி நிச்சயம்' பாடல். தேவாவின் இசையில், வைரமுத்துவின் வரியில் உருவானது, இப்பாடல்.

3
Suryavamsam

நந்தினியும் சின்ராசுவும்! - 'நட்சத்திர ஜன்னலில்'

``சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்தந்ததாரடி... மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ... மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம்! மின்னலில் கூரை பின்னி போடலாமா? ஓங்கும் உந்தன் கைகளால் வானைப் புரட்டிப்போடு, புது வாழ்வின் கீதம் பாடு."

குடும்பங்களின் எதிர்ப்பை மீறி சின்ராசும், நந்தினியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் அவர்கள், மிலிட்டரி மாமாவின் உதவியால் ஒரு பழைய பேருந்தை வாங்கிப் புதுப்பிக்கிறார்கள். படம் பார்த்துக்கொண்டே பயணம் செய்யலாம், தினமும் ஒரு பயணிக்குக் குலுக்கல் முறையில் பரிசு என்று அறிவிப்பு செய்ய, தினமு‌ம் பேருந்தில் கூட்டம் அலைமோதத் தொடங்குகிறது. சின்ராசுவே அந்தப் பேருந்துக்கு ஓட்டுநராகப் பணிபுரிய ஆரம்பிக்கிறார். நாள்கள் செல்லச் செல்ல, ஒரு பேருந்து பல பேருந்துகள் ஆகிறது. தனது அப்பா சக்திவேல் பெயரில் காட்டன் மில்லைத் தொடங்குகிறார். தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த முறைப்பெண் கௌரி வியக்கும் அளவுக்கு சமுதாயத்தில் பெரிய ஆளாக மாறுகிறார், சின்ராசு. இதற்கிடையில், தனது மனைவி நந்தினியைப் படிக்க வைத்து கலெக்டரும் ஆக்குகிறார்.

இப்படி சின்ராசும், நந்தினியும் மெல்ல மெல்ல தங்களது உழைப்பால் எப்படி உயர்கிறார்கள் என்பதைச் சொன்ன படம், `சூர்ய வம்சம்'. 'நட்சத்திர ஜன்னலில்' கவிஞர் மு.மேத்தாவின் வரிகளில், எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் உருவான பாடல்.

4
Padayappa

`படையப்பா' - 'வெற்றிக் கொடி கட்டு'

"இன்னோர் உயிரைக் கொன்று புசிப்பது மிருகமடா... இன்னோர் உயிரைக் கொன்று ரசிப்பவன் அரக்கனடா... யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்! ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்!"

தனது சித்தப்பாவுக்குச் சொத்துகள் அனைத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டு தந்தை இறந்துவிட, அதைத் தொடர்ந்து ஏழ்மைக்குச் சென்றுவிடுகிறார் ஆறுபடையப்பன்.

பிறகு, தன் அப்பாவை வணங்கிவிட்டு, அம்மாவின் ஆசீர்வாதத்துடன் தனக்குச் சொந்தமான கிரானைட் மலைகளை வெட்ட ஆரம்பிக்கிறார். அதில் வரும் பணத்தைக் கொண்டு ஆறுபடையப்பன் முதியோர் இல்லம், ஆரம்பப் பள்ளி, இலவச மருத்துவமனைகளைக் கட்டி, தனது பெயரில் டிரஸ்ட் ஒன்றையும் ஆரம்பிக்கிறார், ஆறுபடையப்பன். பிறகு, பாடலின் இறுதியில், சாதாரணக் கூரை வீட்டில் இருந்த ஆறுபடையப்பன், மிகப்பெரிய பங்களாவிற்குக் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் குடிபெயர்கிறார். ஆறுபடையப்பன் எப்படி தனது உழைப்பால் உயர்கிறார் என்பதை `வெற்றிக்கொடி கட்டு' பாடலில் சொல்லியிருப்பார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினியின் மாஸை சிட்டியிலிருந்து பட்டிதொட்டிவரை கொண்டு சேர்த்த `படையப்பா'வில் இடம்பெற்ற இப்பாடலை வைரமுத்து எழுத, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

5
Thamizh Padam

சிவா - 'ஒரு சூறாவளி கிளம்பியதே'

``இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது லட்சிய வெறி... எடுத்த சபதங்களை முடிக்கின்றவரை தூங்காது விழி! தலை தெறிக்கும் வேகத்தினால் தலைவிதி மாறுது இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது சிவா சிவா சிவா சிவா சிவா!"

சாதாரண ஏழையான சிவாவிற்கு, தனது மகள் பிரியாவைத் திருமணம் செய்துவைக்க முடியாது என மறுக்கிறார், பிரியாவின் தந்தை கோடீஸ்வரர். அவரிடம், 'தான் ஒரு மிகப்பெரிய பணக்காரனான பிறகுதான் பிரியாவைத் திருமணம் செய்துகொள்வேன்' என்று சவால் விடும் சிவா, அந்தச் சவாலை நிறைவேற்றுவதற்காகப் பால் பாக்கெட் போட்டு, சுண்டல் விற்று, போஸ்டர் ஒட்டிப் பணத்தைச் சேர்க்கிறார். தெருவோரங்களில் திருஷ்டி கிழிக்கப்பட்டுக் கிடக்கும் ஒரு ரூபாயைக்கூட வீணாக்காமல், சேமிக்கிறார். அந்தச் சேமிப்பின் விளைவாக, பெரும்பணம் ஈட்டி விமான நிலையம், இரயில் நிலையம், ஏன் பிணக்கிடங்குகூட கட்டுகிறார். பாடலின் இறுதியில், அனைத்து வர்த்தக நாளிதழ்களிலும் சிவாவே தலைப்புச் செய்தியாகிறார்.

'அண்ணாமலை' மற்றும் 'படையப்பா' படங்களை பகடி செய்யும் விதத்தில் உருவான இப்பாடல், ஆதியிலிருந்து அந்தம்வரை தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த க்ளிஷே காட்சிகளையும் பகடி செய்த 'தமிழ்ப்படம்' படத்தில் இடம்பெற்றது. இப்பாடலை சந்துரு எழுத, அறிமுக இசையமைப்பாளர் கண்ணன் இசையமைத்திருந்தார்.

மேற்குறிப்பிட்ட நபர்கள் மட்டுமல்லாது, பல 'விக்ரமன்' பட மாந்தர்கள் இந்தத் தொகுப்பில் உலாவுவார்கள். என்னதான், 'இதெல்லாம் நிஜத்துல நடக்குமா பாஸ்' எனப் பலர் விமர்சனம் செய்தாலும், இந்தத் தொகுப்பில் வரும் பாடல்கள் ஒருநாளும் நமக்குத் தன்னம்பிக்கையை விதைக்கத் தவறியதில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இதுபோல உங்களுக்குத் தெரிந்து, ஒரே பாடலில் பணக்காரர்கள் ஆனவர்களைக் கமென்ட் செய்யுங்கள் ஃப்ரெண்ட்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு