Published:Updated:

"தியேட்டர் திறக்கலைன்னாலும் ஐஸ்க்ரீம் விற்பனை செய்யுங்க!" - என்ன ஸ்பெஷல் `மேலூர் ஐஸ்க்ரீம்'ல்?

ஆர்வமாக 'மேலூர் ஐஸ்க்ரீம்' வாங்கும் சிறுவன்

"எங்கள் ஐஸ்க்ரீமுக்குச் சுத்தியுள்ள கிராம மக்கள் அனைவரும் ரசிகர்கள். சில நேரங்களில் சுமாரான படம் என்றாலும்கூட, இந்த ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்காகவே தியேட்டருக்கு வருபவர்கள் பலர்."

"தியேட்டர் திறக்கலைன்னாலும் ஐஸ்க்ரீம் விற்பனை செய்யுங்க!" - என்ன ஸ்பெஷல் `மேலூர் ஐஸ்க்ரீம்'ல்?

"எங்கள் ஐஸ்க்ரீமுக்குச் சுத்தியுள்ள கிராம மக்கள் அனைவரும் ரசிகர்கள். சில நேரங்களில் சுமாரான படம் என்றாலும்கூட, இந்த ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்காகவே தியேட்டருக்கு வருபவர்கள் பலர்."

Published:Updated:
ஆர்வமாக 'மேலூர் ஐஸ்க்ரீம்' வாங்கும் சிறுவன்

மதுரை மாவட்டம் மேலூரைச் சுற்றிப் பல கிராமங்கள் உள்ளன. 18 பட்டி, வெள்ளலூர் நாடு எனப் பல்வேறு பாரம்பர்ய, கலாசாரக் கோட்பாடுகளைக் கொண்டவை மேலூர் கிராமங்கள். அந்த கிராமங்களுக்குப் பெரிய அளவில் போக்குவரத்து வசதி இல்லாததால், மேலூர் கணேஷ் தியேட்டர்தான் அப்பகுதி மக்களுக்குப் பெரிய பொழுதுபோக்கு.

கணேஷ் தியேட்டர்
கணேஷ் தியேட்டர்

கணேஷ் தியேட்டர் காம்ப்ளெக்ஸ் மூன்று திரையரங்குகளைக்கொண்டு, மேலூர் மக்களின் வரவேற்பைப் பெற்றது. படம் பார்க்கும் பொழுதுபோக்கு ஒருபக்கம் இருக்க, இந்தத் தியேட்டரில் விற்கப்படும் ஐஸ்க்ரீமுக்காகவே இங்கு படம் பார்க்க வரும் மக்கள் பலர் உள்ளனர். உள்ளூர் மக்களால் 'மேலூர் ஐஸ்கிரீம்' என்று அழைக்கப்படும் இந்தத் தியேட்டரின் ஐஸ்க்ரீம், அந்தளவுக்குப் புகழ்பெற்றது. இந்நிலையில் ஊரடங்குக் காலத்தில் எல்லா இடங்களிலும் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்க, கணேஷ் தியேட்டரும் களையிழந்து கிடக்கிறது.

'அட, படம் போடலைன்னாலும் பரவாயில்ல... ஐஸ்கிரீமாவது விற்கலாம்ல...' என்று 'மேலூர் ஐஸ்க்ரீம்' ரசிகர்கள் ஏக்கத்தில் கேட்க, தியேட்டர் நிர்வாகம் காட்சிகளே இல்லாத திரையரங்கில் ஐஸ்க்ரீம் விற்க முன்வந்தது. அதையடுத்து குளுகுளு 'மேலூர் ஐஸ்க்ரீம்' விற்பனை ஜோராக நடக்கிறது.

இது குறித்து விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சுக்காம்பட்டி தினகரன் கூறும்போது, "மேலூரில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யானு எல்லா ஸ்டார்கள் படங்களையும் ஃபேன்ஸ் நாங்க திருவிழாவாக் கொண்டாடுவோம். அரசியல் கட்சிகளுக்கு டஃப் கொடுக்கிற அளவுக்கு பேனர்கள் மிரட்டும்.

ஐஸ்க்ரீம் செல்ஃபி
ஐஸ்க்ரீம் செல்ஃபி

சில நேரம் தமிழகத்துல படம் வெளியிடத் தாமதம் ஏற்படும்போது கேரளாவரை போய்கூடப் படம் பார்த்திருக்கேன். ஆனா, எங்க ஊரு தியேட்டர்ல நாங்க கொண்டாடிப் படம் பார்க்கிற திருப்தி கிடைக்காது. எங்க ஊரு தியேட்டரு ஐஸ்க்ரீமும் பன்னும் சாப்பிட்டுக்கிட்டே படம் பார்க்கிறதுக்கு ஈடுஇணையே இல்ல. குறிப்பா, இந்த ஐஸ்க்ரீம். அதுல அப்படியொரு பால் வாசனை வரும். இந்த மாதிரி ஒரு ஐஸ்க்ரீமை வேற எங்கயும் பார்க்கமுடியாது.

படம் பார்க்க வர்ற கூட்டம் ஒருபக்கம்னா, இந்த ஐஸ்க்ரீம் சாப்புடுறதுக்காகவே தியேட்டருக்கு வர்ற கூட்டம் நிறைய இருக்கு. புதுப்படம் போட்டா, ஐஸ்க்ரீம் கார்னர்ல கூட்டம் அள்ளும். ஆனாலும் மக்கள் சளைக்கமாட்டாங்க. இடைவேளையே முடிஞ்சாலும் ஐஸ்க்ரீம் வாங்காம தியேட்டருக்குள்ள போக மாட்டாங்க.

இப்போ லாக்டௌனால தியேட்டர்ல சினிமா பார்க்குறதே மறந்துபோச்சு. அதைக்கூட, டிவியில போடுற படங்கள், OTT படங்கள்னு ஏதோ பார்த்துக்கிட்டிருக்கோம். ஆனா, இந்த மேலூர் ஐஸ்க்ரீமை மட்டும் ரொம்ப மிஸ் பண்ணினோம். அதுக்காகவே, எப்போடா தியேட்டர் திறக்கும்னு காத்துட்டிருந்தோம். இப்படி எல்லாரும் கேக்க ஆரம்பிச்சதால, இப்போ தியேட்டருக்கு வெளியே ஐஸ்க்ரீம் விற்க ஆரம்பிச்சிருக்காங்க. செம்ம...'' என்றார்.

'மேலூர் ஐஸ்க்ரீம்'
'மேலூர் ஐஸ்க்ரீம்'

மேலூர் கணேஷ் தியேட்டர் உரிமையாளர் முருகனிடம் பேசினோம். "மேலூரில் 1976-ம் வருடத்திலிருந்து கணேஷ் தியேட்டர் இயங்கி வருகிறது. 1986க்கு முன்வரை வெளிநபர்கள்தான் கேன்டீனைப் பார்த்துக்கொண்டனர். சுவையில் திருப்தி இல்லாததால், பின்னர் நாங்களே கேன்டீனைக் கையில் எடுத்தோம்.

அப்போதுதான் முதன்முறையாக '1 ரூபாய் ஐஸ்க்ரீமை' அறிமுகம் செய்தோம். மதுரை, சினிப்பிரியா தியேட்டரில் வேலைசெய்த என் நண்பர், ஐஸ்க்ரீம் செயல்முறையை ஒரு நாள் எனக்கு விளக்கினார். எங்கள் வீட்டுப் பசுமாடுகளின் கலப்படமற்ற சுத்தமான பாலைக்கொண்டு ஐஸ்க்ரீம் செய்ய ஆரம்பித்தோம்.

மேலூர் ஐஸ்க்ரீம்
மேலூர் ஐஸ்க்ரீம்

இதனால் ஐஸ்கிரீமில் சுவை மெருகேறியது. கால மாற்றத்தால் 1 ரூபாயிலிருந்து ஐஸ்கிரீமை இப்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். வெளியில் இதையொத்த ஐஸ்க்ரீம்கள் 50 ரூபாய்வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எங்கள் ஐஸ்க்ரீமுக்குச் சுத்தியுள்ள கிராம மக்கள் அனைவரும் ரசிகர்கள். சில நேரங்களில் சுமாரான படம் என்றாலும்கூட, இந்த ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்காகவே தியேட்டருக்கு வருபவர்கள் பலர்.

ஆனால், தற்போது ஊரடங்கால் தியேட்டர் திறக்கப்படவில்லை. தியேட்டரில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் கொடுத்தோம். பிறகு பாதிச் சம்பளம்தான் கொடுக்க முடிந்தது. இந்நிலையில், 'ஐஸ்க்ரீம் மட்டுமாச்சும் விற்கலாமே' என்று பலரும் கேட்டார்கள். இதனால், தியேட்டர் வெளியே டிக்கெட் கவுன்டரில் இப்போது ஐஸ்க்ரீம் விற்றுவருகிறோம். சொந்த மாடுகளின் பாலைத்தான் பயன்படுத்துகிறோம் என்பதால், அதே ருசிதான்.

தியேட்டர் முன்பு
தியேட்டர் முன்பு

20 ரூபாய் ஐஸ்க்ரீமை 5 ரூபாய் விலை குறைத்து 15 ரூபாய் என விற்பனை செய்கிறோம். ஐஸ்க்ரீம் பார்சலுக்கு, அரை கிலோ ஐஸ்க்ரீம் 100 ரூபாய் என்று வழங்குகிறோம். இதனால் தியேட்டர் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஐஸ்க்ரீம் விரும்பிகளுக்குக் குறைந்த விலையில் அதே சுவையில் ஐஸ்க்ரீம் கிடைப்பது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.