Published:Updated:

மும்பைத் திரைப்பட விழாவில்  முன்னாள் சப்-கலெக்டரின் குறும்படத்துக்கு விருது!

கேரளாவைச் சேர்ந்த முன்னாள் துணை ஆட்சியரின் குறும்படத்துக்கு மும்பைத் திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது. 

மும்பைத் திரைப்பட விழா
மும்பைத் திரைப்பட விழா

மும்பையில் ‘ஷார்ட்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ நடைபெற்று முடிந்திருக்கிறது. 8-வது ஆண்டாக நடந்த இந்த விழாவில், சிறந்த குறும்படம், சிறந்த அனிமேஷன் படம், சிறந்த டாக்குமென்டரி படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து படைப்பாளர்கள் பங்கேற்றனர். 

மிர் முகமது அலி
மிர் முகமது அலி

இதில், கேரள மாநில அரசின் முன்னாள் துணை ஆட்சியராகவும் துப்புரவுப் பணிகளுக்கான இயக்குநருமாகப் பணியாற்றியவரான மிர் முகமது அலி, தான் இயக்கிய `என்டே நாடு கண்டிட்டுண்டோ’ என்ற குறும்படத்தைப் போட்டிக்காக அனுப்பியிருந்தார். தற்போது துபாயில் பணியாற்றி வரும் அவர், இயக்கிய அந்தக் குறும்படத்துக்கு 8-வது மும்பை ஷார்ட்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த விளம்பரப் படத்துக்கான விருது கிடைத்திருக்கிறது.

Vikatan

மாவட்ட சுற்றுலாத் துறை தயாரித்திருந்த இந்தக் குறும்படம், கண்ணூர் மாவட்டத்தின் பாரம்பர்யச் சின்னங்கள் குறித்தும் கண்ணுக்கு விருந்து படைக்கும் கலை நயம் மிகுந்த இடங்கள் பற்றியும் விவரிக்கின்றது. கண்ணூர் மாவட்டத்தின் அழகு நிறைந்த கடற்கரை, மலைப் பகுதிகள், ஆறுகள் கடலில் கலக்கும் கழிமுகப் பகுதிகள் ஆகியவை பற்றி இந்தப்படம் பேசுகிறது. இரண்டு நிமிடங்கள் மட்டும் ஓடக்கூடிய இந்தக் குறும்படம், இந்தி, ஆங்கிலம், அராபிக், ஸ்பானிஷ் உள்ளிட்ட 8 மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. 

மிர் முகமது அலி
மிர் முகமது அலி

சிறந்த குறும்படமாக `தி டான்’ என்ற ஆஸ்திரேலியக் குறும்படமும், `பில்டிங் பிரிட்ஜஸ்’ என்ற ஜெர்மனிய குறும்படமும் தேர்வுபெற்றுள்ளன. இதுபற்றிப் பேசிய மிர் முகமது அலி, ``கண்ணூர் மாவட்டத்தில் நான் பணியாற்றியபோது, நான் கண்ட இயற்கைக் காட்சிகளையும் அழகையும் இதில் இடம்பெறச் செய்தேன். இந்தப் படத்தில் நடித்த சிவா என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் நடிப்பும் சூர்யா என்ற சிறுவனின் பின்னணிக் குரலுமே இந்த விருதுக்குக் காரணமாக அமைந்தது’’ என்றார்.