
ரேஸ்: ஃபார்முலா 1

2022 முடிந்துவிட்டது. ஓர் அற்புதமான ஃபார்முலா 1 சீசனும் முடிந்துவிட்டது. டிராமாக்களோடு ஆரம்பித்த டைட்டில் ரேஸ், கடைசியில் ஒருதலைப்பட்சமாக முடிவுக்கு வந்தது. இருந்தாலும் மிட்ஃபீல்டில், அணியின் அடுத்த சீசன் பிளான்களில் பல்வேறு எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறியிருக்கின்றன. அனைத்து வகைகளிலும் இன்னொரு அட்டகாசமான சீசனாகவே அமைந்திருக்கிறது 2022!
பெரும் தாக்கம் ஏற்படுத்திய புதிய விதிமுறைகள்!
2022 சீசன் பல்வேறு புதிய மாற்றங்களோடு தொடங்கியது. கார்களின் ஏரோடைனமிக்ஸில் தொடங்கி, டயர்கள் வரை பல ரெகுலேஷன்கள் மாற்றப்பட்டன. ஒரு சில அணிகள் அதற்கு செட் ஆகியிருந்தாலும், சில அணிகள் ஆரம்பத்தில் பெரிதாகத் தடுமாறின. அதனால், ஒரு சில அணிகள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தின. 2021 சீசனில் 6 வெவ்வேறு அணிகள் போடியம் ஏறியிருந்த நிலையில், இந்த சீசனில் 4 அணிகள் மட்டுமே போடியம் ஏறின. அதிலும் நான்காவது அணியான மெக்லரன், ஒரேயொரு முறை மட்டுமே டாப் 3 இடங்களுக்குள் வந்தது.
எதிர்பாராத அளவுக்குத் தடுமாறிய ஒரு அணி எனில், அது நடப்பு சாம்பியனாக களமிறங்கிய மெர்சிடீதான்! 'Porpoising effect' அந்த அணியின் செயல்பாட்டைப் பெரிதாகப் பாதித்தது. சீசன் கடைசியில்தான் அந்த அணியால் ரெட்புல், ஃபெராரி அணிகளுக்குப் போட்டியாக இருக்க முடிந்தது. விளைவாக, 22 ரேஸ்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது மெர்சிடீஸ். அதேபோல், மெக்லரன் அணியும் தொடக்கத்தில் புள்ளிகள் எடுக்க முடியாமல் திணறியது. மொத்த சீசனிலும் ஒரேயொரு போடியம் மட்டுமே பதிவு செய்த அந்த அணி, போடியமே ஏறாத ஆல்பைனிடம் நான்காவது இடத்தையும் இழந்தது. கடந்த சீசனில் 142 புள்ளிகளுடன் ஆறாவது இடம் பிடித்திருந்த ஆல்ஃபா டௌரி, இம்முறை வெறும் 35 புள்ளிகள் மட்டுமே எடுத்து ஒன்பதாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது!



வெர்ஸ்டப்பனின் ஆதிக்கம்!
2021 சீசனின் கடைசி லேப்பில் உலக சாம்பியன் ஆன மேக்ஸ் வெர்ஸ்டப்பன், இந்த சீசனை ஃபேவரிட்டாகத் தொடங்கினார். மெர்சிடீஸ் அணி ஆரம்பத்திலேயே தடுமாற, ஃபெராரி நல்ல வேகம் காட்ட, இது வெர்ஸ்டப்பன் vs சார்ல் லெக்லர்க் யுத்தமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றது போலவே பஹ்ரைனில் இருவரும் கடுமையாகப் போட்டியிட்டனர். மாறி மாறி முதலிடத்துக்கு முன்னேறினர். இருந்தாலும் கடைசி நேரத்தில் வெர்ஸ்டப்பனின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு, அவர் ரேஸிலிருந்து வெளியேறினார். அவர் டீம் மேட் செர்ஜியொ பெரஸுக்கும் அதே பிரச்னை ஏற்பட்டதால், RBPT பவர் யூனிட் நம்பத்தகுந்த வகையில் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
சவுதி அரேபியாவில் நடந்த இரண்டாவது ரேஸை மேக்ஸ் வென்றிருந்தாலும், மூன்றாவது ரேஸில் மீண்டும் அந்த பிரச்னை ஏற்பட்டது. மீண்டும் அவர் ரேஸிலிருந்து வெளியேறினார். அதேசமயம் பஹ்ரைன், ஆஸ்திரேலியா கிராண்ட் ப்ரீக்களில் வெற்றியும், சவுதியில் இரண்டாவது இடமும் பெற்ற லெக்லர்க், மூன்று ரேஸ்கள் முடிவிலேயே வெர்ஸ்டப்பனை விட 46 புள்ளிகள் முன்னிலை பெற்றார். அதனால், இது 2021 போலவே மிகவும் பரபரப்பான சீசனாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதன்பிறகு விஸ்வரூபம் எடுத்தார் மேக்ஸ்!
நான்காவது ரேஸான எமிலியா ரோம்கனாவில் தொடங்கிய அவர், அடுத்த 6 கிராண்ட் ப்ரீக்களில் 5 வெற்றிகளைப் பதிவு செய்தார். மற்றொரு ரேஸில் மூன்றாவது இடமும் பிடித்தார். அதேசமயம் ஃபெராரி, லெக்லர்க் கூட்டணி சொதப்பத் தொடங்க, ஒன்பதாவது ரேஸான கனடா கிராண்ட் ப்ரீயின் முடிவில் லெக்லர்க்கை விட 49 புள்ளிகள் அதிகம் பெற்றார் வெர்ஸ்டப்பன். கிரேட் பிரிட்டன் கிராண்ட் ப்ரீயில் ஏழாவது இடமே பிடித்திருந்தாலும், அடுத்த 6 ரேஸ்களில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார். முன்பைப் போலவே அந்த 6 ரேஸ்களில், 5 வெற்றிகள், 1 போடியம். இத்தாலியின் கிராண்ட் ப்ரீ முடிவில் , லெக்லர்க்கை விட 116 புள்ளிகள் அதிகம் பெற்றிருந்தார். அதன்பிறகும் கூட 4 வெற்றிகள். 15 வெற்றிகள் பெற்று, ஒரு ஃபார்முலா 1 சீசனில் அதிக வெற்றிகள் பெற்றவர் என்ற சாதனையும் படைத்தார்.
2021 சீசனை விட அவரிடம் பல மாற்றங்கள் தெரிந்தது. மிகவும் நிதானமாக இருந்தார். ரெட்புல் அணியின் திட்டங்களும் மிகச் சிறப்பாக இருக்க, சாம்பியன்ஷிப்பை மிக எளிதாக வென்றார் மேக்ஸ்.

தடுமாறிய ஃபெராரி, பட்டையைக் கிளப்பிய ரெட்புல்!
இந்த சீசனை மிகச் சிறப்பாகத் தொடங்கிய ஃபெராரி, எப்படியெல்லாம் சொதப்ப முடியும் என்று உலகுக்குக் காட்டியது. பிரான்ஸில் சைன்ஸை சரியாக ரிலீஸ் செய்யாமல் விட, அவருக்கு `Unsafe Release' காரணமாக 5 நொடிகள் பெனால்டி வழங்கப்பட்டது. 5 இடங்கள் பின்தங்கிய அவரால், கடைசி வரை போராடியும் ஐந்தாவது இடமே பிடிக்க முடிந்தது. ஹங்கேரியில் இன்னும் பெரிய தவறிழைத்தனர். மீடியம் டயரோடு தொடங்கிய லெக்லர்க்குக்கு, பிட் ஸ்டாப்புக்குப் பிறகும் மீடியம் டயரையே மாட்டி அனுப்பினர். FIA விதிப்படி, ஒரு டிரைவர் இரண்டு வேறு டயர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதால், மூன்றாவதாக ஒருமுறை அவரை பிட்டுக்கு வரவழைத்தனர். அதனால், வெற்றி பெற வேண்டிய அவர் ஆறாவது இடமே பிடித்தார்.
பெல்ஜியத்தில், சைன்ஸ் பிட்டுக்கு வரும்போது டயரே தயாராக இலை. இன்னொரு முறை Unsafe Release காரணமாக 5 நொடிகள் பெனால்ட்டி பெற்றார் சைன்ஸ். அதனால் அவர் ரேஸில் 3 இடங்களை இழக்க நேரிட்டது. இப்படி சீசன் முழுக்க பஞ்சாயத்துகளாகவே பார்த்துக் கொண்டிருந்த ஃபெராரி, இரண்டாவது இடத்தையே மெர்சிடீஸிடம் இழக்க வேண்டிய நிலை வந்திருக்கும். கடைசி ரேஸில் வெர்ஸ்டப்பன் ஒத்துழைக்காத காரணத்தால், டிரைவர்கள் ரேஸில் இரண்டாவது இடத்தை இழந்தார் செர்ஜியோ பெரஸ். இல்லாவிட்டால் லெக்லர்க் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பார்.
அதேசமயம் ரெட்புல் ஒவ்வொரு முடிவுகளையும் சரியாக எடுத்தது. அந்த அணியின் Strategy இன்ஜினீயர் ஹானா ஸ்மிட்ஸ், தான் எடுத்த முடிவுகளுக்காக வெகுவாகப் பாராட்டப்படார். இந்த சீசனில் ஒரு சில ரேஸ்களை மிகவும் பின்னால் இருந்து தொடங்கினார் வெர்ஸ்டப்பன். ஏழாவது, பத்தாவது, 14-வது இடங்களில் இருந்து தொடங்கிய ரேஸ்களையெல்லாம் அடுத்தடுத்து வென்றார் அவர்! வெர்ஸ்டப்பன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், ரெட்புல் அணியின் முடிவுகள் அவருடைய அபார வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

மெர்சிடீஸ் - நம்பர் 3, ஜார்ஜ் ரஸல் - நம்பர் 5
ஆரம்பத்தில் `Porpoising effect' காரணமாக அதிகம் தடுமாறிய மெர்சிடீஸ், முதல் 7 ரேஸ்களில் மூன்று முறை மட்டுமே போடியம் ஏறியது. சீசன் போகப் போக, அந்த அணியின் செயல்பாடு முன்னேற்றம் கண்டது. பெரிதாகத் தடுமாறிய லூயிஸ் ஹாமில்ட்டனும் சிறப்பாகச் செயல்படத் தொடங்க, தொடர்ந்து போடியம் ஏறிக் கொண்டே இருந்தனர். பிரான்ஸ், ஹங்கேரி என அடுத்தடுத்த ரேஸ்களில் இருவருமே போடியம் ஏறினர். அந்த அணியின் ஃபேவரிட் கிராண்ட் ப்ரீக்களில் ஒன்றான சா பாலோவில் 1-2 வந்து அசத்தியது மெர்சிடீஸ். 22 ரேஸ்களில், மொத்தம் 10 முறை அந்த அணி மூன்றாவது இடம் பிடித்தது.
மெர்சிடீஸ் டிரைவராக தன் முதல் சீசனை மிகச் சிறப்பாகத் தொடங்கிய ஜார்ஜ் ரஸல், ஆரம்பத்தில் ஹாமில்ட்டனை விடவுமே சிறப்பாகச் செயல்பட்டார். 22 ரேஸ்களில், மூன்றைத் தவிர மற்ற 19 ரேஸ்களில் டாப் 5 இடங்களுக்குள் வந்தார் அவர். 8 முறை போடியம் ஏறிய அவர், சா பாலோவில் தன் முதல் ஃபார்முலா 1 வெற்றியைப் பதிவு செய்தார். கார்லோஸ் சைன்ஸைப் பின்னுக்குத் தள்ளி டிரைவர்கள் ரேஸிலும் நான்காவது இடம் பிடித்தார்.

பிரிவுகளும், மாற்றங்களும்!
இந்த சீசனோடு ஃபார்முலா 1 பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான செபாஸ்டியன் வெட்டல். தன் கடைசி சீசனில் 37 புள்ளிகள் பெற்று 12-வது இடத்தில் முடித்தார் வெட்டல். தன் கடைசி ரேஸில் பத்தாவது இடம் பிடித்து புள்ளியோடு முடித்தார். இதுவரை 300 ரேஸ்களில் பங்கேற்ற அவர், 53 வெற்றிகள் உள்பட 3,098 புள்ளிகள் பெற்றிருக்கிறார். 122 முறை போடியம் ஏறியிருக்கிறார். தொடர்ந்து 4 முறை உலக சாம்பியன் ஆன வெட்டல், தன் மகத்தான பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த சீசன், வில்லியம்ஸின் நிகோலஸ் லடிஃபிக்கும் கடைசியாக அமைந்திருக்கிறது. தன் கடைசி சீசனில் வெறும் 2 புள்ளிகள் மட்டுமே எடுத்தார் அவர். அடுத்த சீசன் அவருக்குப் பதிலாக லோகன் ஷார்ஜன்ட் அந்த அணிக்காகப் பங்கேற்ப்பார்.
8 ரேஸ்களில் வெற்றி பெற்றவரான டேனியல் ரிக்கார்டோவுக்குப் பதில் ஆஸ்கர் பியாஸ்ட்ரியை ஒப்பந்தம் செய்திருக்கிறது மெக்லரன். வேறு எந்த அணியுடனும் பேச்சுவார்த்தை நடத்தாத ரிக்கார்டோ, ரெட்புல் அணியின் மூன்றாவது டிரைவராக ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதேபோல், ஹாஸ் அணியின் மிக் ஷூமேக்கர், மெர்சிடீஸின் மூன்றாவது டிரைவராகக் கையெழுத்திட்டிருக்கிறார். அவருக்குப் பதில் சீனியர் வீரர் நிகோ ஹல்கென்பெர்க், ஹாஸ் அணிக்காகப் பங்கேற்பார்.
வெட்டல் விட்டுச் சென்ற இடத்தை இன்னொரு முன்னாள் உலக சாம்பியன் ஃபெர்னாண்டோ அலோன்சோவை வைத்து நிரப்புகிறது ஆஸ்டன் மார்டின். அலோன்சோவின் இடத்தை பியர் கேஸ்லி மூலம் ஆல்பைன் பூர்த்தி செய்ய, கேஸ்லியின் இடத்துக்கு நிக் டி ஃப்ரைஸை ஒப்பந்தம் செய்திருக்கிறது ஆல்ஃபா டௌரி.
ஃபெராரியின் தொடர் சொதப்பல்கள் காரணமாக, அந்த அணியின் தலைமை நிர்வாகிப் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார் மடியோ பினோடோ. அவருக்குப் பதில் ஆல்ஃபா ரோமியோவின் தலைமை அதிகாரியாக இருந்த ஃபிரெட்ரிக் வசூர், ஃபெராரியின் தலைமைப் பொறுப்பில் அமர்வார்.
முதல்கள்..!
இந்த் சீசனில் கார்லோஸ் சைன்ஸ், ஜார்ஜ் ரஸல் இருவருமே தங்களின் முதல் ஃபார்முலா 1 வெற்றியைப் பதிவு செய்தனர். கிரேட் பிரிட்டன் கிராண்ட் ப்ரீயில் சைன்ஸ் வெற்றி பெற, சா பாலோவில் முதலிடம் பிடித்தார் ஜார்ஜ் ரஸல். அதேபோல், தன் முதல் போல் பொசிஷனை சா பாலோவில் பதிவு செய்தார் ஹாஸ் வீரர் கெவின் மேக்னசன். மழை காரணமாக மூன்றாவது தகுதிச் சுற்று பாதியில் தடைபட, வேகமான லேப்பை முதலிலேயே பதிவு செய்து போல் பொசிஷனைத் தனதாக்கினார் மேக்னசன்.