சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வெரி வெறித்தனம்!

மேரியேன்
பிரீமியம் ஸ்டோரி
News
மேரியேன்

இருட்டில் தனியாக அமர்ந்து பாருங்கள் என சவாலுக்கு அழைக்கிறார்கள் மேரியேன் டீம். நாம் வெளிச்சத்தில் பார்ப்பதே நலம்.

பேய் இருக்கோ இல்லையோ, ஆனா பயம் இருக்கு.

- புதுமைப்பித்தன்

சீனர்களுக்கு ராசியில்லாத எண் 4. அதேபோல், 13-ம் தேதி வெள்ளிக்கிழமை என்பது பல நாடுகளில் ராசியில்லாத ஒரு நாள். அப்படியான ஒரு `சுபயோக சுபதினத்தில்’ (செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை) நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது பிரெஞ்சு பேய்த்தொடரான ‘மேரியேன்.’ ஹாரர், பேய்ப்பட விரும்பிகளைத் தவிர மற்றவர்கள் தவிர்க்க வேண்டிய தொடர்.

வெரி வெறித்தனம்!

LIZZIE LARCK என்னும் பெயரில் பேய் நாவல் ஒன்றை எழுதுகிறார் எம்மா லார்ஸிமோன் என்னும் பெண் எழுத்தாளர். தான் பயந்த விஷயங்களை வைத்துப் புனைவாக அந்தப் புத்தகத்தில் கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். எல்லாமே அதிரிபுதிரி ஹிட். போதும் என முடிவு செய்யும் எம்மா, லிஸ்ஸி லார்க்குக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். ஆனால், அதற்குப் பின்தான் கதை ஆரம்பிக்கிறது. எம்மாவின் சொந்த ஊரான எல்டனில் அசம்பாவிதங்கள் நிகழத் தொடங்குகின்றன. சிலர் காணாமற்போகிறார்கள். எம்மா இன்றி ஓர் அணுவும் அசையாது எனக் கொக்கரிக்கிறாள் மேரியேன். நாவலைச் சிறப்பாக முடித்துவிட்டால் மேரியேனுக்கு குட்பை சொல்லிவிடலாம். ஆனால் எம்மாவுக்கோ அது முடியவில்லை.

ஊரிலிருந்து வரும் ஒரு தோழி, தொடர்ந்து எழுது என மன்றாடி, பின் அச்சுறுத்தி, இறந்தும்போகிறாள். மேரியேனின் கதை விரிவடைகிறது. புத்தகத்தில் இருக்கும் அனைத்துமே உண்மையாக நடக்க ஆரம்பிக்கிறது. எம்மா எழுத, மேரியேன் அதை நிறைவேற்றுகிறாளா, அல்லது, மேரியேனின் விருப்பத்தைத்தான் எம்மா லார்ஸிமோன் எழுதுகிறாளா என்னும் கேள்வியை இறுதிவரை கச்சிதமாக எடுத்திருக்கிறார்கள்.

வெரி வெறித்தனம்!

யாரும் இல்லாத அறையில் சட்டெனத் திரும்பிப் பார்த்தால் பேய் இருப்பது, கண்ணாடியில் மட்டும் தெரிவது, பெட்ஷீட்டுக்குள் கிச்சுக்கிச்சு மூட்டுவது, காரில் பின்பக்கம் அமர்ந்திருப்பது போன்ற சம்பிரதாய பேய்க் காட்சிகளுக்கு குட்பை சொல்லிவிட்டு, ‘இங்கு திகில் காட்சிகள் விற்கப்படும்’ என கெத்தாக கோதாவுக்குள் இறங்கியிருக்கிறது மேரியேனின் டெக்னிக்கல் டீம். நம் சீட்டிலும் ஏதும் இருக்குமோ எனத் தேடும் அளவுக்குத் தொடர் முழுக்க சூன்யம் வைத்த பொருள்கள்தான்.

எம்மாவாக Victoire Du Bois நடித்திருக்கிறார். ஆனால், பார்ப்பவர்களை திகிலூட்டி ஜெர்க் கொடுக்க வைப்பது டௌகெரோன் கதாபாத்திரத்தில் வரும் பாட்டிம்மாதான். சிரித்துக்கொண்டே தன் கையை அறுத்துக்கொள்வது, நீ எழுது பேபி எனச் சொல்வது என ஒவ்வொரு பிரேமிலும் பேய்த்தன மேனரிசங்கள். தொடரின் இன்னொரு முக்கிய ஹீரோ லைட்ஹவுஸ். அதன் சுழற்சிக்கேற்ப சம்பவங்கள் இடம் மாறுகின்றன.

வெரி வெறித்தனம்!

நாவலை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர் என்பதால், அதன் பக்கங்கள் திருப்புவதை வைத்தே கதையின் போக்கைத் தீர்மானித்திருப்பது செம்ம. ஃபிளாஷ்பேக் காட்சிகள் போன்று தொடரிலும் வரும் ஃபிளாஷ்ஃபார்வேர்டு காட்சிகளும் பக்கங்களாகக் கடக்கின்றன. சீரியஸில் இருந்து டக்கென காமெடிக்கு மாறுவது, பின் அதற்கேற்ப இசைக்கும் பின்னணி இசை எனப் பேய் வேகத்தில் செல்கிறது திரைக்கதை. இந்த திகில் தொடரை எழுதி இயக்கியிருக்கிறார் சாமுவேல் போடின்.

மேரியேன் ஏன் பேய் ஆச்சு தெரியுமா என்னும் அரதப் பழைய ஃபிளாஷ்பேக், பேய் இருக்குற ஊர்ல ஒரு சர்ச் ஃபாதர் இருப்பாரு போன்ற சில விஷயங்கள் இந்தப் பேயிலும் தொடர்வதுதான் மைனஸ்.

இருட்டில் தனியாக அமர்ந்து பாருங்கள் என சவாலுக்கு அழைக்கிறார்கள் மேரியேன் டீம். நாம் வெளிச்சத்தில் பார்ப்பதே நலம்.