அரசியல்
சமூகம்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

விஜய்யை வம்பிழுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார்; அதன்பின் சித்தார்த் பக்கம் போய் சில்லறையைச் சிதறவிட்டு ஓடிவந்தார்;

இப்போது சூர்யாவைக் குறிவைத்து கபடி ஆடிக்கொண்டிருக்கிறார், ஹெச்.ராஜா. அட்மின் அக்கவுன்ட்டில் இருந்து ஸ்டேட்டஸ் போடுவது, பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டு அறிக்கைவிடுவது என அன்னாருக்கு எக்கச்சக்க வேலைகள். அதனால், அடுத்து அவர் அட்டாக் செய்யவேண்டிய ஸ்கிரிப்ட்டை நாங்களே தயாரித்துவிட்டோம்.

விமல்: ‘வாகை சூட வா’ படத்தில் தமிழில் பாடம் எடுக்கும் கிராமத்து வாத்தியாராக நடித்திருந்தார் விமல். இது மத்திய அரசு கொண்டுவரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானது. மேலும், படத்தில் அவர் பெயர் வேலுத்தம்பி. இதுவும் யாரையோ நினைவுபடுத்துவதுபோல உள்ளது. இத்தகைய ஆன்டி இந்திய செய்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

விஜய் தேவரகொண்டா: இவர் தொடர்ந்து தன் படங்களில் கலாசாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் நடித்துவருகிறார். இப்போது உச்சகட்டமாக ‘டியர் காம்ரேட்’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படி அப்பட்டமாக கம்யூனிஸ்ட் பிரசாரப் படத்தில் நடிக்கும் இவரைப் போன்ற அர்பன் நக்சல்களைக் காலம் தாழ்த்தாது கண்டிக்கவேண்டும்.

ஜி.வி. பிரகாஷ்: ஜானி, புரூஸ் லீ எனத் தொடர்ந்து இவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் ஆபத்தான அறிகுறியாகத் தோன்று கின்றன. ‘சர்வம் தாளமயம்’ படத்தில் பீட்டர் ஜாக்சன் என்ற பெயரில் வேறு நடித்திருக்கிறார். ‘குப்பத்து ராஜா’ படத்தில் ‘ராக்கெட்’ என்ற கேரக்டர். அது என்ன ரகம் என்றே தெரியவில்லை. எனவே, இவரது ஆதார் கார்டை செக் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஹிப்ஹாப் ஆதி: இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதே சவுண்டு விட்டு, பின்பு எங்களின் கவனிப்பு தாங்காமல் பின்வாங்கினார். தேசிய விளையாட்டான ஹாக்கியை மையமாக வைத்து ‘நட்பே துணை’ என்ற படம் எடுத்தார். இது தேசத்துரோகச் செயல். எனவே, அந்தப் படத்தை உடனே எனக்கு ஃப்ரீயாகப் போட்டுக்காட்ட ஆவன செய்யவேண்டும் என அரசுக்கு நிபந்தனை விதிக்கிறேன்.

மனோஜ் கே.பாரதி: முகலாயர்கள் நம் நாட்டை ஆண்டதற்குச் சாட்சியாக இருக்கும் கட்டடம் தாஜ்மஹால். அந்தப் பெயரில் ஒரு படம் நடிப்பதற்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? ‘அது வந்து 20 ஆண்டுகளாச்சே...’ என நீங்கள் கேட்கலாம். 20 ஆண்டுகளுக்கு முன்னால் நான் யாரென்றே யாருக்கும் தெரியாது. அதேபோல, வேற வேலை எதுவுமில்லாததால் கே டிவி, ராஜ் டிஜிட்டல் போன்ற சேனல்களைப் பார்த்து வருகி றேன். அதனால், இப்போதுதான் இதைச் சொல்லமுடிகிறது.

-இதெல்லாம் கற்பனைன்னு நினைக்காதீங்க. நாளைக்கே நிஜமாகலாம். அதுதான் ஹெச்.ராஜா ஸ்பெஷல்!