சர்க்கஸ் உலகில் சரித்திரம் படைத்த ஜெமினி சங்கரன் தனது 99-வது வயதில் மரணித்தார்.
ஜம்போ ஜெமினி சர்க்கஸின் உரிமையாளராக இருந்தார் அவர். வயது முப்பால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கண்ணுரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கண்ணூர் மாவட்டம் தலச்சேரி கவளச்சேரி ராமன் - கல்யாணி ஆகியோரது ஏழு பிள்ளைகளில் ஐந்தாவதாக பிறந்தவர் சங்கரன். இரண்டாம் உலகப்போரில் கண்ணூர் ராணுவ மைதானத்தில் நடந்த ஆர்மி ஆள்சேர்ப்பின்போது தேர்வாகி மெட்ராஸ் ரெஜிமெண்டின் ஒயர்லெஸ் அப்ஸர்வராக பணிபுரிந்தார். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சர்க்கஸ் உலகின் குலகுரு என போற்றப்படும் கிலேரி குஞ்ஞி கண்ணனின் சீடனான ராமனிடம் களரி பயின்றார். கல்க்கத்தா போஸ் லயன் சர்க்கஸில் பால் பிளேயராக சர்க்கஸ் துறையில் அடியெடுத்து வைத்தார். அடுத்ததாக தலச்சேரியைச் சேர்ந்த ரயமெண்ட் சர்க்கஸிலும் பணியாற்றினார்.

பின்னர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாமூ என்பவரின் கிழிந்த சர்க்கஸ் கூடாரம், ஒரு யானை, இரண்டு சிங்கம் ஆகியவற்றை சொந்தமாக வாங்கினார். நேஷனல் சர்க்கஸ் கம்பெனி மேலாளராக இருந்த சகாதேவனை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு 1951-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ஜெமினி சர்க்கஸ் கம்பெனியைத் தொடங்கினார். பிறந்த நட்சத்திரத்தை மையமாகக்கொண்டு ஜெமினி என்ற பெயரில் சர்க்கஸ் தொடங்கியதை அடுத்து அவரது பெயர் ஜெமினி சங்கரன் என ஆனது. பார்வையாளர்களை கவர சர்க்கஸில் புதுமைகளை புகுத்தினார். ஐந்து வருடத்துக்கு பின்னர் `ஜம்போ சர்க்கஸ்' கம்பெனியை வாங்கினார். ஈரான், இராக், இலங்கை, வளைகுடா நாடுகள், ரஷ்யா, இத்தாலி, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சர்க்கஸ் ஷோக்கள் நடத்தினார்.
1957-ம் ஆண்டு சர்க்கஸில் ஜீப் ஜம்பிங் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990-ம் ஆண்டுக்குப் பிறகு சர்க்கஸில் இருந்து ஓய்வு பெற்றார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெமினி சங்கரனின் மனைவி ஷோபனா இறந்தார். ஜெமினி சங்கரனுக்கு மூன்று மகன்கள். அஜய் சங்கர் ஜம்போ சர்க்கஸை கவனித்து வருகிறார். அசோக் சங்கர் பெங்களூரில் பிசினஸ் செய்து வருகிறார். ரேணு ஆஸ்திரேலியாவில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

ஜெமினி சங்கரன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது, "இந்தியன் சர்க்கஸை உலக பிரசித்திபெறச் செய்ததில் முக்கிய பங்குவகித்தவர் ஜெமினி சங்கரன். சொந்தமாக சர்க்கஸ் நடத்திவந்த அவர் இந்தியாவுக்கு வெளியேயும் சர்க்கஸ் சம்பந்தமாக செயல்பட்டார். இந்தியாவின் பல பிரதமர்கள், ஜனாதிபதிகள், உலகத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். சர்க்கஸில் முக்கியமான பல மாற்றங்களை ஏற்படுத்தியதில் அவரின் பங்கு அதிகம்.
வெளிநாட்டு சர்க்கஸ் கலைஞர்களையும், வெளிநாட்டு சர்க்கஸ் கலைகளையும் இந்தியன் சர்க்கஸில் அறிமுகப்படுத்தி முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார். அவரது 99-வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்துவிட்டு மரணம் அடைந்துள்ளார். ஜெமினி சங்கரனுடன் தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பராக இருந்தேன். முன்னேற்றத்துக்கான அரசியலுக்கு அவர் முக்கியத்துவம் அளித்திருந்தார். ஜெமினி சங்கரனின் மறைவு சர்க்கஸ் கலைக்கு மிகப்பெரிய நஷ்டமாகும். அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.