ராஜமௌலி இயக்கத்தில் 5 மொழிகளில் வெளியான திரைப்படம் ‘RRR’. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உட்படப் பலர் நடித்திருந்த இத்திரைப்படம் சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராமராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்துக்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்திருந்தார். பாக்ஸ் ஆபீஸிலும் இப்படம் சாதனை படைத்தது.
சமீபத்தில் இத்திரைப்படம் கோல்டன் குளோப் விருதில் ஆங்கிலம் அல்லாத பிற மொழிக்கான 'சிறந்த திரைப்படம்' மற்றும் 'சிறந்த பாடல்' என்னும் இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. உலகெங்கும் வைரலான டான்ஸ் சென்சேஷனான 'நாட்டு நாட்டு' பாடல்தான் இந்தப் பரிந்துரையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்து மிகப்பெரிய விருதாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதை 'சிறந்த பாடல்' (Best Original Song) அந்தப் பாடல் வென்றுள்ளது. இதற்கான விருதைப் படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றுக்கொண்டார்.
இது தொடர்பாக விழா மேடையில் பேசிய கீரவாணி, "இந்த விருதை வழங்கியதற்கு நன்றி. பொதுவாக விருதுகளைப் பெறும்போது, இந்த விருது எனக்கு உரியது அல்ல என்று எல்லோரும் சொல்வது வழக்கம். நானும் அதைத்தான் சொல்லப்போகிறேன். இவ்விருது எனது சகோதரரும் இயக்குநருமான ராஜமௌலிக்கு உரியது. என் உழைப்பின் மீது அவர் வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
சிறந்த படத்துக்கான விருதை ‘RRR’ திரைப்படம் தவறவிட்ட நிலையில், அந்த விருது 'அர்ஜெண்டினா 1985' என்கிற படத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.