Published:Updated:

பாரதிராஜா பெருமிதம்... தாப்ஸி கோரிக்கை... விகடன் விருதுகள் ஹைலைட்ஸ்!

விகடன் விருதுகள்
விகடன் விருதுகள்

இந்த ஆண்டும் கொண்டாட்டத்தின் திருவிழாவாக அரங்கேறிய ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவின் துளிகள் இவை:

* விகடன் குழுமத்தின் உயரிய விருதான எஸ்.எஸ்.வாசன் விருதைத் தொகுத்து வழங்க மேடையில் தோன்றினார் ராதிகா சரத்குமார். மூத்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு விருதை வழங்க விகடன் விருது விழாவுக்கு வருகை வந்திருந்த அத்தனை இயக்குநர்களும் மேடையேறியது தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான தருணமாக அமைந்தது.

விருதைப் பெற்ற பாரதிராஜா, "இந்த விருதை இந்த பாரதிராஜா வாங்குவது பெருமையான விஷயம். இதற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. இன்றுவரை ஆனந்த விகடனின் அதிகபட்ச மதிப்பெண் பெற்றது என் முதல் படம்தான் என்பதில் எனக்குத் தனிப்பெருமை" என உருக, அரங்கத்தில் கலவையாய் உணர்ச்சிகள் ஊற்றெடுத்தன.

* சிறந்த படத்துக்கான விருதை மிஷ்கின் வழங்க, 'பேரன்பு' படத்திற்காக அதன் இயக்குநர் ராமும், தயாரிப்பாளர் தேனப்பனும் பெற்றுக்கொண்டனர். 'மம்மூட்டியும், தேனப்பனும் இல்லாமல் இந்தப்படம் நிகழ்ந்திருக்காது' என்பதைப் பதிவு செய்தார் ராம். மிஷ்கினிடமும் ராமிடமும் 'ஆனந்தவிகடன் எதுக்கு சார் எப்போ பார்த்தாலும் கம்மியாவே மார்க் போடுறாங்க?' என்று சதீஷ் கொளுத்திப்போட, 'ஆமா, என் படம் எதுவுமே அதிக மார்க் வாங்குனதில்ல' என்றார் மிஷ்கின். 'மத்த விருதுகளுக்கு நடுவர்கள் யாருன்னு தெரியும். இந்த விருதுக்குத்தான் நடுவர் யாருன்னே தெரியாது. மார்க் வேணாம்னு ஒருபடம் எடுத்தாலும் அதுக்கும் மார்க் போடுவாங்க விகடன்' எனச் சிரித்தபடி சொன்னார் ராம்.

* சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுக்கொண்ட வெற்றிமாறன். "இன்னைக்கு ஒரு படம் தியேட்டர்ல 100 நாள் ஓடுதுங்கறது பெரிய விஷயம். இந்தப் படம் அப்படி ஓடினதுக்குக் காரணம் மக்கள்தான். என்கூடவே எல்லாமுமா இருந்த என் டீமுக்கு மிகப்பெரிய நன்றி' என்றவர், தனுஷை முதன்முதலில் பாலுமகேந்திராவின் 'அது ஒரு கனாக்காலம்' படத்துக்காகச் சந்தித்ததை நினைவுகூர்ந்தார். "அடுத்து சூரியோட சேர்ந்து எல்ரெட் குமாருக்காக ஒரு படம் பண்றேன். அதை முடிச்சதும் தாணு சாருக்காக சூர்யா சாரோட சேர்ந்து ஒரு படம் பண்றேன். படத்தோட டைட்டில் 'வாடிவாசல்.' சி.சு.செல்லப்பாவோட 'வாடிவாசல்' நாவலை அடிப்படையா வெச்சு இந்தப் படம் இருக்கும்'' என எக்ஸ்க்ளூசிவ் தகவலை வெளியிட்டார்.

விகடன் விருதுகள்
விகடன் விருதுகள்

* சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக்கொண்ட தனுஷ், "போன வருஷம் 'வடசென்னை'க்காக இதே விருதை வாங்கறப்ப, அடுத்த வருஷம் அசுரனா உங்களைச் சந்திக்கறேன்னு சொல்லிருந்தேன். ஆனா, அசுரனுக்கும் இப்படியொரு வரவேற்பு கொடுப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. தொடர்ந்து இரண்டாவது முறையாக விகடன் விருதை வாங்குறது பெருமையா இருக்கு. விகடனுக்கு நன்றி! நிறைய இடத்துல சிவசாமி எங்களை விட்டுப்போகலைன்னு சொல்றாங்க. சிவசாமி இன்னமும் என்னையுமே விட்டுட்டுப் போகல. அவர் எனக்குள்ளயும் இருக்கிறார். போன வருஷம் அன்பு, இந்த வருஷம் சிவசாமி. அன்பே சிவம்! அவ்ளோதான்! ஒரு நடிகனுக்கு அவனோட கரியர்ல ஒரு சில தடவை மட்டுமே கிடைக்கற இப்படியொரு கேரக்டரைக் கொடுத்த வெற்றி மாறனுக்கு நன்றி!" என்று நெகிழ்ந்தார்.

- இந்த விழாத் துளிகளை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > இது கொண்டாட்டத்தின் திருவிழா..! - ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019 https://cinema.vikatan.com/celebrity/ananda-vikatan-cinema-awards-2019-jan-22

* தமிழில் மீண்டும் தன் இன்னிங்ஸை ஒரு சிக்ஸரோடு ஆரம்பித்திருக்கும் தாப்ஸிக்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கினார் 'அசுரன் ' தனுஷ். ஆடுகளம் ஐரினையும், கே.பி.கருப்பையும் ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் மேடையேற்றி அழகு பார்த்தது விகடன், அதுவும் ஆடுகளம் ரிலீஸான அதே தேதியில்! "ஆடுகளத்தின் போது எனக்கு நடிக்கவே தெரியாது. ஆனால் இப்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் சிறந்த நடிகை விருது கிடைத்திருக்கிறது. என்னை சினிமாவுக்குள் அழைத்து வந்ததற்கும், நடிப்பு சொல்லிக்கொடுத்ததற்கும் வெற்றி மாறனுக்கு நன்றி. அப்போது புதுமுகமாய் அறிமுகமான என்னோடு பொறுமையாய் நடித்த தனுஷுக்கும் நன்றி. நாம மூணு பேரும் சேர்ந்து இன்னொரு படம் பண்ணலாம் சார்' என வெற்றி மாறனுக்குக் கோரிக்கை வைத்தார் தாப்ஸி.

* விழாவின் முக்கிய அம்சமாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'லாபம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. "சக மனிதனை எப்படி மதிக்க வேண்டும் என்பதை ஜனநாதனைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன்" என்றார் விஜய் சேதுபதி.

விகடன் விருதுகள்
விகடன் விருதுகள்

* சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுக்கொண்ட மிஷ்கின், "தியாகராஜன் குமாரராஜா அவருக்கு வேண்டியது வர்றவரை விடமாட்டார். முதல்ல என் மனைவி ரோல்ல நடிச்ச நதியா என்னை அறையுற காட்சில 80 முறை ரீடேக் போனோம். அதுக்கு அப்புறம் அவங்களுக்குப் பதிலா ரம்யா கிருஷ்ணன் வந்தாங்க. அவங்களும் தன் பங்குக்கு அறைய நூத்துக்கணக்குல அறை வாங்கினேன் சார்'' என ஷுட்டிங் ஸ்பாட் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். நீலன் கே.சேகர் விருதைத் தன் அப்பாவுக்கு சமர்ப்பிப்பதாய் சொன்னது நெகிழ்ச்சி.

- இந்த விழாத் துளிகளை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > இது கொண்டாட்டத்தின் திருவிழா..! - ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2019 https://cinema.vikatan.com/celebrity/ananda-vikatan-cinema-awards-2019-jan-22

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு