Published:Updated:

`என்மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கை வீண்போகாது'- `தர்பார்' இசை விழாவில் ரஜினி!

rajini
rajini ( twitter \ lyca )

'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு பேசினர்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம், 'தர்பார்'. இப்படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் ஆரம்பமாகி பல்வேறு இடங்களில் நடைபெற்றுவந்த நிலையில், 2020 பொங்கல் அன்று வெளியாகவிருக்கிறது. படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் 'சும்மா கிழி' வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. இசைவெளியீட்டு விழாவில் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு பேசினர்.

இசைவெளியீட்டு விழா
இசைவெளியீட்டு விழா
twitter

பாடலாசிரியர் விவேக் பேசும்போது, ``40 வருடங்களுக்கு மேல் இத்தனை பேரின் அன்பை சேர்த்துவைப்பது என்பது சாதாரணமானது இல்லை. அனைவரையும் கட்டுப்படுத்தும் ஈர்ப்பை 'சும்மா கிழி' பாடலில் தந்துள்ளேன்.

நம்மை நம்பும் தன்னம்பிக்கைதான் இவரை இங்கு கொண்டு வந்துள்ளது. அதைத்தான் `சும்மா கிழி'யில் ரஜினியிஸமாகக் கொண்டுவந்துள்ளேன்" என்றார்.

நடிகர் யோகிபாபு பேசுகையில், `` 'இவர்ட்ட வேலைக்கு வந்ததுக்கு தள்ளுவண்டி தள்ளுனா நாலு காசு கல்லால போட்டுர்லாம்'ங்கற டயலாக் பேசற அளவுக்கு ரஜினி சார் ஜாலியான கேரக்டர். ரஜினி சாருக்கு தனியாக காமெடியன் தேவையில்லை. அவரே காமெடியில் கலக்குவார்" என்றார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் பேசுகையில், ``முருகதாஸ் படத்தில் கண்டிப்பாக ஏதாவது மெசேஜ் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் தலைவருடன் நீங்கள் இணைந்திருப்பதால், கண்டிப்பாக பெரிய மெசேஜாகத்தானிருக்கும். லைக்காவும் இணைந்திருப்பது 'பாட்ஷா'வைவிட மாஸாக இருக்கும் என எதிர்பார்ப்போம். அதிசயம், அற்புதம் பல காலமாக இருந்துள்ளது எனப் பலர் பேசியுள்ளனர். ஆனால், ரஜினி சார் பேசினால்தான் அந்த அதிசயம் அற்புதம் தெரியுது. ரஜினி சார் நமக்குக் கிடைத்த அற்புதம் அதிர்ஷ்டம். ரஜினி சார் எனக்கு குரு. அவர் செயல்பாடுகள்தான் நான் செய்யும் பல நல்ல காரியங்களுக்கு முக்கியக் காரணம். அவர் இதுவரை யாரையும் திட்டியதில்லை. 'விடு கண்ணா பார்த்துக்கலாம்' என்றுதான் சொல்லுவார். சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போன்ற தன்னடக்கம், பொறுமை யாருக்குமில்லை.

லாரன்ஸ்
லாரன்ஸ்

ரஜினி சார் அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்கிறார். இந்த நிலையில் அவர் எல்லாரையும் புகழ்கிறார். அது அவசியமில்லாதது. வயசாகிருச்சுனு சொல்றாங்க. அவர் நடக்கற வேகத்தையும் செயலையும் வச்சே முடிவு பண்ணிக்கோங்க.

அவருக்கு இந்த வயசுல பணம், புகழ் தேவையில்லை. அவரது படத்துக்கு பப்ளிசிட்டி செய்கிறார் என்கிறார்கள். அவர் பேரே சூப்பர் ஸ்டார். இந்த வயதில் அவர் ஏன் வருகிறார் என்றால், உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மாட்டேன் என்பதால் தான்" என்றார்.

இயக்குநர் ஷங்கர் பேசுகையில், ``முருகதாஸ் படத்தில் ஹீரோ-வில்லன் காம்போவை சூடேற்றி சண்டைக்கோழிகள் எப்போது மோதும் என எதிர்ப்பார்க்க வைப்பார். இப்போது, இதில் ரஜினி சார் சேர்ந்திருக்கும்போது, அது நிச்சயம் வேற லெவல்தான். ரஜினி சாருடன் வேலைசெய்து ஒன்றரை வருஷம் ஆச்சு. ஷூட்டிங் போகும்போது தினமும் நினைத்துக்கொள்வேன். நேரம் என்பது தயாரிப்பாளருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர் ரஜினி சார். போலீஸ் ரோலில் ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி'' என்று ரஜினியின் நேரம் தவறாமையைக் குறிப்பிட்டார்.

அனிருத்
அனிருத்
twitter \ lyca

அனிருத் பேசுகையில், ``லைஃப்ல மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ், தர்பார். என்னை அறிமுகப்படுத்திய தனுஷுக்கு நன்றி. அறிமுகமாகும்போது, தலைவருக்கு மியூசிக் பண்ணுவேன்னு எதிர்ப்பார்க்கவில்லை. ஆனா இப்போ, இது ரெண்டாவது படம். இதுதான் என் வாழ்வில் நடந்த அற்புதம் அதிசயம். நான் எப்போதும் அழமாட்டேன். ஆனால், தர்பார் மியூசிக் முடித்து என் ஸ்டூடியோவில் அழுதேன். சந்தோஷம் எல்லாம் தாண்டி நமக்கு புடிச்ச ஒருத்தருக்கு மியூசிக் பண்ண முடியும்கற ஒரு நிறைவு.

இந்த ஆல்பதை ஸ்பெஷலாக்கியது விவேக். தலைவருக்கு போடும் போது அவரது வார்த்தைகள் வெறித்தனம். 'அண்ணாமலை' தீம் மியூசிக்கை திரும்பக் கொண்டுவந்தது மகிழ்ச்சி. அதை தேவா சாரே மீண்டும் செய்தது இன்னும் மகிழ்ச்சி. எல்லாரும், தலைவருக்கு மாஸா ஆல்பம் தர்றீங்கன்னு சொன்னாங்க. தலைவருக்காக என் உயிரையும் தருவேன். ஆல்பம் தர மாட்டேனா? அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்" என நெகிழ்ந்தார்.

இயக்குநர் முருகதாஸ் பேசுகையில், ``எங்க ஊர்ல இருந்த ஒரே விஞ்ஞான வளர்ச்சி தியேட்டர் மட்டும்தான். அங்கு மட்டுமே ரஜினியைப் பார்த்து, அவர் எங்க ஊர்லதான் இருப்பார் என நம்பிய காலமெல்லாம் உண்டு. அவர் பக்கத்தில் இன்று இருப்பது மகிழ்ச்சி. ஒரு பெரிய ஆள், தன்னைவிட சின்ன ஆளிடம் எப்படி நடப்பார் என்பதை வைத்துதான் அவரின் குணத்தை நான் சொல்வேன். அந்த வகையில் ரஜினி இதில் மனிதாபிமானம் உள்ள ஒருவர்.

முருகதாஸ்
முருகதாஸ்
twitter \ lyca

மேக்கப் மேனிலிருந்து அனைவரிடமும் அவ்வளவு சகஜமாகப் பழகுவார். இவ்வளவு உயரத்திலிருக்கும்போது, அவரிடம் உள்ள தன்னடக்கம்தான் இப்போதும் அவரை உயரத்தில் வைத்துள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் கர்வமும் இல்லாமல் இருப்பவர் ரஜினி. வாழ்க்கை முழுவதும் ரஜினியைப் பின்பற்ற நினைக்கிறேன். கடைசி 15 வருஷத்தில், சூப்பர் ஸ்டார் படத்தில் பார்க்காத மாஸ் ஃபைட்டை இதில் நிச்சயம் பார்க்கலாம். குவாட்டர் சூப்பர் ஸ்டார், சைல்டு சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார் எல்லாம் இல்லை. ஒரே சூரியன் ஒரே சூப்பர் ஸ்டார்" என்றார்.

இறுதியாக, பின்னணி இசை ஒலிக்க ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார். அவர் பேசுகையில், ``தர்பார் படம் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். 'ரமணா', 'கஜினி' என முருகதாஸ் படங்கள் பார்த்து அவருடன் படம் பண்ண வேண்டும் என முடிவுசெய்து பேசினோம். நான் 'சிவாஜி'யும், அவர் ஹிந்தியில் 'கஜினி'யும் செய்தார். நான் 'லிங்கா' படத்துல நடிச்ச பிறகு, இனி இளமையான தோற்றத்துல படம் நடிக்கக்கூடாதுனு நினைச்சேன். அதன்பிறகு, நாங்க படம் பண்ணுவது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இடையில, என் வயதுக்கேற்றாற் போல 'காலா', 'கபாலி' எனப் படங்கள் பண்ணிக்கொண்டிருந்தேன். அப்போ, 90'ஸில் இருந்ததுபோல் என்னைப் பார்க்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் `பேட்ட' எடுத்தார். அவர் என்னை இளமையாகக் காண்பிக்க நினைத்து வேலைபார்த்தார். அதைப் பார்த்து முடிக்கும்முன், ஒருவாரத்தில் அதேபோல் ஒரு ஸ்கிரிப்ட்-டுடன் முருகதாஸ் வந்திருந்தார். அருமையான ஒரு படத்தை முருகதாஸ் கொடுத்திருக்கார். 'மூன்று முகம்' படத்துக்கு அப்புறம் இந்தப் படத்துல பவர் ஃபுல் கேரக்டர்ல பண்ணி இருக்கேன்.

ரஜினி
ரஜினி

150 படங்கள் பண்ணியிருந்தாலும் த்ரில்லர் சஸ்பென்ஸில் இது ஒரு திருவிழா. அவ்வளவு சிறப்பாகச் செய்துள்ளார் முருகதாஸ். 'தளபதி' படத்துக்குப் பின் சந்தோஷ் சிவனுடன் இணந்துள்ளேன். என்னுடைய ஒவ்வொரு படத்திலும் அவர் உள்ளாரா உள்ளாரா என கேப்பேன். 29 வருடங்களுக்குப் பிறகு அவருடன் இணந்துள்ளது மகிழ்ச்சி. 'சந்திரமுகி'க்குப் பிறகு நயன்தாராவுக்கு என்னுடய படத்தில் அருமையான கேரக்டர். அனிருத் நம்ம வீட்டுக் குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்கு படம் சந்தோஷம். இளையராஜாவுக்கு ஸ்டோரி சென்ஸ் இருப்பதுபோல, எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை. அந்த குவாலிட்டி அனிருத்துக்கு இப்போதே வந்துள்ளது. 'பேட்ட' ஆலபத்தைவிட 'தர்பார்' இன்னும் சிறப்பாக இருக்கும். மும்பையில் நடப்பதுபோன்ற கதை. இந்தப் பிறந்தநாள் எனக்கு மிக முக்கியமானது. ஆடம்பரமாகக் கொண்டாடாமல் தேவையானவர்களுக்கு உதவிசெய்யுங்கள். இதுபோன்ற ஆடியோ ரிலீஸுக்கு அரசு அரங்கம் தந்துள்ளது. இந்த அரசுமீது பல விமர்சனங்கள் வைத்துள்ளேன். அதையெல்லாம் மனத்தில் வைத்துக்கொள்ளாமல், அரங்கம் தந்ததில் மகிழ்ச்சி. இந்த ஆடியோ விழாவை எனது பிறந்தநாள் விழாவாகவே கருதுகிறேன்.

இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத 2 விஷயத்தை இந்த விழாவுல சொல்றேன். முதல் விஷயம், நான் சென்னைக்கு வந்ததப் பத்தி... கன்னடா மீடியத்தில் படித்த என்னை ஆங்கில மீடியத்தில் சேர்த்தார்கள். படிப்பில் பின் தங்கினேன். ஆனால், அதன்பிறகு ஒரு பணக்கார காலேஜில் சேர்த்துவிட்டனர். அங்கும் என்னைப் போல ஆர்வமில்லாதவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினேன். அண்ணா, கஷ்டப்பட்டு எனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டினார். எனக்குத் தெரியும், எக்ஸாம் எழுதினால் பாஸ் ஆக மாட்டேன் என்று. நடு இரவில் பெங்களூருவிலிருந்து டிரெயின் ஏறினேன். அது, தமிழ்நாடு மெட்ராஸுக்கு போகும் என்றார்கள். ஏறினேன். இறங்கும்போது டிக்கெட்டை தொலைத்துவிட்டேன். அப்போ, எனக்கு கன்னடம் மட்டும்தான் தெரியும். டிக்கெட் தொலைத்து விட்டேன் என்று சொல்லியும் செக்கர் நம்பவில்லை. அப்ப அங்கு வந்த கூலி ஆட்கள், எனக்காக சப்போர்ட் செய்து பேசினார்கள். அதன்பிறகுதான் செக்கர், போ என்று சொல்லி தமிழ்நாட்டு மண்ணுக்குள் விட்டார்.

`என்மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கை வீண்போகாது'- `தர்பார்' இசை விழாவில் ரஜினி!

ரஜினிகாந்த் என்ற பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு வைக்கலாம்னு பாலச்சந்தர் யோசிச்சிட்டு இருந்தப்போ, என்னைப் பாத்து அந்த நம்பிக்கையை வச்சி, அந்தப் பேரை எனக்கு வச்சாரு. இந்தப் பெயரை வைத்த பாலச்சந்தர் சாருக்கு நன்றி. என்னை ஹீரோவாக நம்பி அறிமுகம் செய்த கலைஞானம் அவர்களுக்கு நன்றி. என்மேல நீங்க வச்சிருக்குற நம்பிக்கை என்றும் வீண் போகாது.

16 வயதினிலே பரட்டை கேரக்டர்தான் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டுபோய் சேர்த்தது. அதற்குப் பிறகு ஒரு தயாரிப்பாளர், அவர் படத்தில் நடிக்க சொல்லி கேட்டார். அதுக்காக 1000 ரூபா அட்வான்ஸ் தர்றதாகவும் சொன்னார். ஆனால், அதைத் தராம என்ன அவமானப்படுத்துனார். ``சார், என் 1000 ரூபா எங்க?''ன்னு கேட்டதுக்கு... ``நீ என்ன அவ்ளோ பெரிய ஆர்ட்டிஸ்ட்டா... உனக்கு பணமும் கிடையாது; கேரக்டரும் கிடையாது... போடா..."ன்னு வெளியே அனுப்புனாரு. அப்போ, அங்க முடிவு பண்ணேன். ஒருநாள் பெரிய ஆளாகி, இதே ஏவிஎம் ஸ்டூயோவுக்கு ஃபாரின் கார்ல கால்மேல கால்போட்டு வரலைன்னா நான் ரஜினிகாந்த்தே இல்லைன்னு... அதேபோல், ஃபாரின் கார், ஃபாரின் டிரைவர் என ஃப்ரெண்ட் சீட்டில் உட்கார்ந்து, விடுறா வண்டிய என ஏவிஎம் ஸ்டூடியோ நோக்கி சென்று, 555 சிகரெட் பிடித்தேன். அங்கிருந்தவர்கள் கவர்னர்தான் வந்துவிட்டாரோ என நினைத்தார்கள்.

அதன்பிறகு பாலச்சந்தரை பார்க்கப் போனேன். 2 வருடத்தில் சாதித்தேன் என்றால், நான் மட்டும் என்று சொல்வது தப்பாகிவிடும். அந்த நேரத்தில் இயக்குநர்கள், பாத்திரம், கதை என எல்லாம் சரியாக அமைந்ததுதான் காரணம். நம்மால்தான் வெற்றி என்றால் 10% தான். வெற்றி என்பது சந்தர்ப்பம், நேரம், சாணக்கியத்தனம்தான். இப்போது, நிறைய நெகட்டிவிட்டி இருக்கிறதும், பிறரைப் புண்படுத்துவதும் சகஜமாகிவிட்டது. சினிமா, அரசியல் என எல்லாவற்றிலும் அன்பு செய்யுங்கள்" என்று கூறி, குட்டிக் கதையுடன் முடித்தார். முடித்ததும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லி, ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.

அடுத்த கட்டுரைக்கு