Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செம்ம ஜாலி சூப்பர் தோழர் இந்த தோர்! #Thor:Ragnarok படம் எப்படி

வேற்றுக் கிரகத்தில் சிக்கிக்கொள்ளும் தோர் , எப்படி தன் சகோதரி ஹெலாவை வீழ்த்தி  தன் உலகமான ஆஸ்கார்டை மீட்டெடுக்கிறான் என்பதை நக்கல் நையாண்டியுடன் சொல்லியிருக்கிறது தோர்:ரக்னராக்

 Thor:Ragnarok


மல்ட்டி ஹீரோ கான்செப்ட், தங்களுக்குள்ளேயே கலாய்த்துக் கொள்ளுதல் போன்றவற்றில் மார்வெல்லும், டிசி காமிக்ஸும் போட்டி போட்டு படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்தே, தோர் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்) , லோகி (டாம் ஹிட்டில்டன்), ஹல்க் ( மார்க் ரஃபலோ) போன்றவர்கள் ட்ரோல் செய்யப்படுகிறார்கள். தோரின் உலகமான ஆஸ்கார்டையும் விட்டு வைக்கவில்லை கதைக்குழு. குட்டிக்குட்டியாக பல கதைகளை கொண்டிருக்கிறது தோர்:ரக்னராக். தோருக்கும் சர்தருக்குமான சண்டை சில நிமிடம்; தன் தந்தையைத் தேடி தோரும், லோகியும் பயணிக்க அவர்களுக்கு உதவும் சூப்பர் ஹீரோ கதை சில நிமிடம் ; சகார் கிரகத்தில் நடக்கும் காட்சிகள் சில நிமிடம். தோர், ஹெலா (கேட் பிளாங்கெட்) , லோகி சண்டை சில நிமிடம் எனக் குட்டிக்குட்டியாய் சுவாரஸ்ய கதைகள். ஒவ்வொன்றிலும் வெடித்துச் சிரிக்க அத்தனை காட்சிகள், வசனங்கள். கொஞ்சம் கதை, நிறைய காமெடி. இதுதான் தோர் : ரக்னராக். இதுபோக, கார்டியன்ஸ் ஆஃப் காலெக்ஸியில் வரும் க்ரூட் போல, வித்தியாச உருவங்களில் இருக்கும் கிளாடியேட்டர்ஸ் வேறு. அதிலும் கல் மனிதன் கார்க் அடிக்கும் ஒன் லைனர்கள் அல்ட்டி. 

 Thor:Ragnarok

படத்திற்குள்ளேயே படத்தின் நாயகர்கள் குறித்த நாடகம் போன்ற காட்சிகளும் செம்ம. கேம் ஆஃப் த்ரோன்ஸ், இந்திய இதிகாசங்கள் என பலவற்றில் இத்தகைய காட்சிகள் ஏற்கெனவே வந்திருந்தாலும், வரலாற்று திரிபுகளால் நிஜம் எப்படி மாறுபடுகிறது என்பதை சட்டென பதிய வைக்கிறது இந்தக் காட்சி. மார்வெல்லின் படங்களில் சம்பிரதாயமாக வரும் 'ஸ்டான் லீ'க்கும் ஒரு காட்சி வைத்திருக்கிறார்கள். படம் முழுக்கவே நகைச்சுவை தான் பிரதானம் என்பதால், யாதொரு கதாபாத்திரத்தின் மீதும் ஒரு ஈர்ப்பு ஏற்படாமல், ஜாலியாகக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. தோரின் ஆஸ்தான ஆயுதம் ஆரம்பித்து, அவன் பலமாகத் தாக்கப்படும் வரை எந்தக் காட்சியிலும் ரசிகர்கள் ஃபீல் எல்லாம் செய்யவில்லை. பாப்கார்னோடு ஜாலியாகவே கடக்கிறார்கள் ரசிகர்கள். இந்தப் புதுவகையான சூப்பர் ஹீரோ படங்களை ரசிகர்கள் தாராளமாய் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இனியும் பேன், பேட்மேனின் முதுகை உடைத்து மூலையில் போடுவதற்கு எல்லாம் ரசிகர்கள் ஃபீல் செய்வார்களா என்பது சந்தேகமே.

தோர் : ரக்னராக்

மார்வெல் சினிமேட்டிக் யுனிவெர்ஸிற்கு, இது கலக்கல் சீசன். கடந்த ஆண்டு மல்ட்டி ஹீரோ காம்போவில், அவர்கள் வெளியிட்ட கேப்டன் அமெரிக்கா : சிவில் வார் ஆகட்டும், பெனெடிக்ட் கம்பெர்பேட்ச் நடித்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஆகட்டும் மார்வெல்லுக்கு செம்ம கலெக்ஷன் அள்ளியது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங்கும் ஹிட்தான். அமேசிங் ஸ்பைடர் மேன் வகையறாக்களைப் பார்த்து கடுப்பாகிப்போன ரசிகர்கள் டாம் ஹோலாண்டு, ராபர்ட் டௌனி ஜூனியர், மைக்கல் கீட்டன் காம்போவில் வெளியான ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங்கை கொண்டாடவே செய்தார்கள்.   வடிடி Taika Waititi இயக்கிய தோர்:ரக்னராக்கும் கொண்டாட்ட மனநிலையில் எடுக்கப்பட்ட ஒரு படம்தான். 

தோர் : ரக்னராக்

டெட்பூல், சூசைட் ஸ்குவாட் வெற்றிகள்தான் இரு பெரும் காமிக்ஸ் நிறுவனங்களையும் இத்தகைய முடிவிற்கு தள்ளிவிட்டிருக்கும் போல. சூப்பர்ஹீரோக்கள் மீது உருவாக்கப்பட்ட பிம்பத்தை கைத்தட்டல்களுக்காக அடித்து நொறுக்க அவர்கள் தயாராகிவிட்டார்கள். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் தோரை நக்கலடிக்கிறார். சகார் கிரக ராஜா கிராண்ட்மாஸ்டர் ஆஸ்கார்டை நக்கலடிக்கிறார். தோர் ஹல்க்கை; என படம் நெடுகிலும் நக்கல்கள்தான். அரும்பாடுபட்டு ப்ரூஸ் வெய்ன் வளர்த்த கோதம் சிட்டியும், சூப்பர்மேனின்  மெட்ரோபோலீஸும் நக்கல் வளையத்துக்குள் சிக்குமா என்பது இன்னும் சில நாள்களில் ஜஸ்டிஸ் லீகில் தெரிந்துவிடும்.

மத்தபடி, ஒரு செம்ம ஜாலியான என்டர்டெய்னர்  தோர்:ரக்னராக். படம் முடிந்ததும், வெளியே வராமல், பொறுமையாக அமர்ந்து இரண்டு போஸ்ட் கிரெடிட் காட்சிகளையும் பார்த்துவிட்டு வரவும். அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் அவெஞ்சர்ஸ்:இன்ஃபினிட்டி வாருக்கான குட்டி லீடும் வைத்திருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான படங்களில் தோர்:ரக்னராக் காமெடி கலாட்டா. டோன்ட் மிஸ். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்