Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரை டஜன் சூப்பர் ஹீரோ பிடிச்சீங்களே... ஒரு கதை பிடிச்சீங்களா! #JusticeLeague படம் எப்படி?

பூமியில் இருக்கும் மூன்று மதர் பெட்டிகளைத் தேடி வரும் ஸ்டெப்பன்வொல்ஃப், அவனிடமிருந்து பூமியைக் காப்பாற்ற ஒன்று சேரும் சூப்பர்ஹீரோஸ். இதுதான் ஜஸ்டிஸ் லீக் படம். 

JusticeLeague

கடந்த ஆண்டு வெளியான பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் படத்திலேயே சூப்பர்மேன் கொல்லப்பட, அடுத்து நிகழவிருக்கும் உலகைக் காக்க ஆட்கள் தேவை என்பதால், ஒவ்வோர் இடமாக சூப்பர்ஹீரோ தேடிச் செல்கிறார் பேட்மேன் (பென் அப்ஃலெக்). கல்லூரி மாணவன் பேரி ஆலன், வொண்டர் வுமன் இருவரும் அணியில் சேர, சைபோர்கும், அக்வாமேனும் முரண்டு பிடிக்கிறார்கள். அதற்குள் ஸ்டெப்பன்வொல்ஃப் அமேசான், அட்லான்டிஸ் என மதர் பெட்டிகளைக் கைப்பற்ற ஆரம்பிக்க, இறுதியில் நம் எல்லோருக்கும் தெரிந்த அந்த 'என்ன நடக்கும்' என்பதை 120 நிமிடப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜேக் ஸ்நைடர். 

பல காட்சிகள் அவசர கதியில் எடுக்கப்பட்டது போல் இருக்கிறது. அக்வாமேன் (2018), சைபோர்க் (2020) போன்ற படங்களை மனதில் வைத்திருக்கும் டிசி, ஜஸ்டிஸ் லீகை சற்றுத் தள்ளிப்போட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. சைபோர்க், அக்வாமேன், பேரி ஆலன் கதாபாத்திரங்கள் அரைவேக்காட்டுத்தனமாக கையாளப்பட்டிருக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக படத்திலிருந்து ஜேக் ஸ்நைடர் விலக, சில காட்சிகளையும் திரைக்கதையையும் எழுதும் பொறுப்பு, ஜோஸ் வீடனுக்குத் தரப்பட்டது. சீரியஸாக செல்லும் காட்சிகளில் கூட, காமெடிக் காட்சிகளை நுழைத்து இருக்கிறார்கள்.முகத்தை விறைப்பாகவே வைத்திருக்கும் ப்ரூஸ் வெய்ன்கூட அடிபட்டபின் காமெடி செய்வதெல்லாம். டூ மச்! 

JusticeLeague

சூசைட் ஸ்குவாட் , டெத்பூல் வகையறாக்களுக்குப் பின், சூப்பர்ஹீரோ படங்களில் காமெடி சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான மார்வெல்லின் தோரில் அது எடுபடவும் செய்து, மெகா ஹிட் அடித்திருக்கிறது. ஆனால், அது ஏனோ ஜஸ்டிஸ் லீகில் பல சமயங்களில் எடுபடவில்லை. காமிக்ஸில் பேரி ஆலனின் கதாபாத்திரம் இவ்வளவு நகைச்சுவையானதா தெரியவில்லை. ஆனால், தொலைக்காட்சித் தொடரில் தடவியல் நிபுணராக வரும் பேரியின் கதாபாத்திரத்துக்கும், இதில் வரும் டீனேஜ் பேரிக்கும் அவ்வளவு வித்தியாசம். கேப்டன் அமெரிக்க சிவில் வாரிலும், ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்கிலும் பீட்டர் பார்க்கரின் கதாபாத்திரம் ஜாலியாக இருப்பதற்காகவே, பேரியின் கதாபாத்திரத்தையும் அதே அளவு காமெடியன் ஆக்கியிருக்கிறார்களா தெரியவில்லை. பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் படத்திலேயே அக்வாமேன், பிளாஷ், சைபோர்க் போன்ற கதாபாத்திரங்களின் ஒரு நொடி காட்சி வந்தாலும், அது எந்த வகையிலும் படத்திற்கு துணைபோகவில்லை. படத்திலும், போஸ்ட் கிரெடிஸிலும் காமெடியில் கலக்குவது ஒரே நபர்தான். ஆனால், அது ஸ்பாய்லர் என்பதால், வாட்ச் இன் தியேட்டர். 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொலைக்காட்சித் தொடரின் முதல் சீசனில் வரும் கால் த்ரோகாதான் அக்வாமேனாக நடித்திருக்கிறார். மனிதரை வில்லனாகப் போட்டிருக்கலாம். அப்படித்தான் இருக்கிறார். அவரையும் வைத்து நகைச்சுவை காட்சிதான் எடுத்திருக்கிறது ஜேக் குழு. சிங்கமாகவே இருந்தாலும் பிச்சைதான் எடுக்க வைக்க வேண்டுமென முடிவோடு இருக்கிறார்கள் போலும். 
வில்லன் ஸ்டெப்பன்வொல்ஃப் ஏனோ பழைய படமான விஷ்மாஸ்டரில் வரும் பிசாசு கெட்டப்பில் பாவமாக இருக்கிறார். இதுக்கு எதுக்குடா இத்தனை சூப்பர்ஹீரோ என்பதுபோல் இருக்கிறது, அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பாகத்தான் இருக்கிறது. அவெஞ்சர்ஸ் போல் ஒரு டீமை உருவாக்க முயற்சி செய்து #JusticeLeague கான்செப்ட்டை கையில் எடுத்திருக்கிறது டிசி காமிக்ஸ். சாரி, டிசி ஜஸ்டிஸ் சுத்தமாக இல்லை.  

JusticeLeague

இசையமைப்பாளர் வில்லியம்ஸின் வொண்டர் வுமனில் அசரடித்த இசை அளவுக்குக்கூட இல்லை டேனி எல்ஃப்மேனின் இசை. டிசியின் போதாத காலத்தை மீட்டெடுக்க வந்த திரைப்படம்தான் வொண்டர் வுமன். ஜஸ்டிஸ் லீக் மீண்டும் அதைப் பழைய குருடி எனப் பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறது. விமர்சனங்கள் தாறுமாறாக வந்தாலும் பரவாயில்லை என சூசைட் ஸ்குவாட் மாதிரி படங்களோ அல்லது பெட்டி ஜென்கின்ஸ் இயக்கியது போல், பக்கவான வொண்டர் வுமன் போன்ற படங்களோ எடுப்பது நல்லது. மீதி இருக்கும் டிசி காமிக்ஸ் படங்களை அமைதியாக பெட்டி ஜென்கின்ஸிடமோ அல்லது வேறு நல்ல நபர்களிடமோ தருவது வார்னர் பிராஸிற்கு நல்லது. இல்லை ஜேக் ஸ்நைடர்தான் என்றால், சாரி டிசி.

படத்தில் நல்ல விஷயங்களே இல்லையா என்றால் இருக்கிறது. சூப்பர்ஹீரோக்கள் அவர்களுக்காகவே சண்டை போடும் காட்சி, வொண்டர் வுமன் (கல் கடோட்) பேசும் நம்பிக்கை வார்த்தைகள், சண்டைகள், ஃபிளாஷ் செய்யும் சில சேட்டைகள், இது எல்லாவற்றையும் விட முக்கியமாக 120 நிமிடங்கள். இப்படிச் சில பாசிட்டிவ் அம்சங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஜஸ்டிஸ் லீக் ஏனோ ஃபிளாஷ், அக்வாமேன், சைபோர்க் போன்ற தனி படங்களுக்கு ஒரு டிரெய்லர் போல் அமைந்திருக்கிறது அவ்வளவே!

போஸ்ட் க்ரெடிட். இறுதி வரை அமர்ந்து பொறுமையாகப் பார்த்தால், அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் போல், பெரிய வில்லன் படையை உருவாக்க சதித் திட்டத்தை டிசி ஆரம்பிப்பது போல் தெரிகிறது. எப்படியும் 2020க்குப் பிறகுதான் வெளியாகும் என்பதால், அடுத்த சூப்பர் ஹீரோ படத்துக்குக் காத்திருப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்