Published:Updated:

இது வலுவான ஃபோர்ஸ்தான்... #StarWars #TheLastJedi படம் எப்படி?

ர.சீனிவாசன்
இது வலுவான ஃபோர்ஸ்தான்... #StarWars #TheLastJedi படம் எப்படி?
இது வலுவான ஃபோர்ஸ்தான்... #StarWars #TheLastJedi படம் எப்படி?

வலுவிழந்த ஸ்டார் வார்ஸ் படத் தொடரை மீண்டும் புது இரத்தம் பாய்ச்சி புத்துயிர் கொடுத்திருக்கின்றனர். ஸ்டார் வார்ஸ் படத் தொடரின், sequel trilogyயின் இரண்டாம் பாகமான இந்தப் படத்தின் மூலம் பழைய ஸ்டார் வார்ஸ் நடிகர்கள் இல்லாமலும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்திருக்கிறார் படத்தை எழுதி, இயக்கிய ரியன் ஜான்சன். எப்படி இருக்கிறது StarWarsTheLastJedi . 

 ஸ்டார் வார்ஸ் படங்களில் நம்மை மயிர்க்கூசச் செய்யும் காட்சி ஒன்றுண்டு. அதுதான் படத்தின் ஆரம்பத்தில் மஞ்சள் எழுத்துகளில் விண்ணில் நகரும் அந்த தொடக்க காட்சி தான் ஸ்டார் வார்ஸ் படங்களின் உயிர்நாடி.. இத்தனை ஆண்டுகளைக் கடந்து ரசிகர்களை அந்தக் காட்சியிலிருஃது கட்டிப்போடுவது தான் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல்.(ஐமேக்ஸ் திரையரங்குகள் எனில் இன்னும் சிறப்பு). ஸ்டார் வார்ஸ் என்றவுடன் அதன் விண்வெளி சாகசங்களை விடவும் நினைவில் வருவது ஜெடாய்களும் அவர்களின் சாகசங்களும் தான். இந்தப் படத்திலும் ஜெடாய் சாகசங்கள் நிறைய கைதட்டல்களை அள்ளுகிறது. லூக் ஸ்கைவாக்கராக மீண்டும் தோன்றும் மூத்த நடிகர் மார்க் ஹாமில்லுக்கு இறுதி வரை அமைதியாக இருந்து பின்பு அதகளம் செய்யும் கேரக்டர். மனிதர் வழக்கம் போல அதிர வைக்கிறார். 
எப்போதும் போல், இந்த முறையும், மக்களை ஒடுக்க நினைக்கும் எம்பயர்யின் ஃபர்ஸ்ட் ஆர்டருக்கும், ரெசிஸ்டன்ஸ் குரூப்பிற்கும் (நம்மூர் புரட்சிப்படை தான்) இடையே நடக்கும் போராட்டம் தான் ஒன்லைன். ஆனால், ஸ்டார் வார்ஸ் தொடரிலேயே முதன் முதலாக "எது சரி? எது தவறு?" "யார் சரி? யார் தவறு?" என்ற கோட்பாட்டை தொட்டிருக்கிறார்கள். "சரி, தவறு என்பது நாம் உருவாக்கிக் கொண்ட பிம்பம் தான்!" என்ற வசனமே அதற்குச் சான்று. 

மார்வெல், டிசி காமிக்ஸ் படங்களில் வரும் போஸ்ட் கிரெடிட் காட்சி போல், இதிலும் நடிகை கேரி ஃபிஷருக்கு படத்தின் இறுதியில் ஒன்று செய்திருக்கிறார்கள். ஸ்டார் வார்ஸின் பிரின்செஸ் லியாவுக்கு ஸ்டார் வார்ஸ் செய்திருக்கும் சின்ன பரிசு அது.

படத்தின் மற்றுமொரு பிளஸ் முந்தைய பாகங்களைப் பார்க்காமல், ரெசிஸ்டன்ஸ்... ஃபர்ஸ்ட் ஆர்டர் ... என்றால் என்ன ? போன்றவை தெரிந்தால் போதும் என்கிற அளவுக்கு மிகவும் எளிமையாக இருக்கும் கதையமைப்பு. அதனால், பல ஆண்டுகளாக வெளியாகும் முந்தைய பாகங்கள் பற்றிய பயம் இல்லாமல் நம்பிக்கையுடன் டிக்கெட் எடுக்கலாம். 

இந்த முறை ரெசிஸ்டன்ஸ் அணிக்குள்லேயே குழப்பம் ஏற்படுகிறது. துடிப்புடன் திரியும் இளைஞர் படை, முதிர்ச்சி நிறைந்த அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடக்க மறுக்கிறது. அதனால் ஏற்படும் விளைவுகள், யார் சரி, யார் தவறு என்ற கண்ணாமூச்சியை ஆடியவாறே திரைக்கதை நகர்வது சுவாரசியம். அதிலும் படத்தின் இறுதிக் கட்டத்தில், கதை நடக்கும் மூன்று இடத்திலும், இருக்கை நுனிக்குக் கொண்டு செல்லும் சஸ்பென்ஸ் காட்சிகள் வர, மூன்று இடங்களின் அடுத்தடுத்த சம்பவங்களையும் இன்டர் கட் முறையில் காட்டுவது இதயத்துடிப்பை எகிற வைக்கிறது. அதே போல், காதல் , துரோகம், கடமை என பல விஷயங்களுக்கான களங்களை அமைத்து கதைக்கு வலுசேர்த்திருப்பது ஸ்பெஷல். 

'ரே'வாக தோன்றும் டெய்சி ரிட்லி அவ்வளவு அழகு. மிக முக்கியக் கதாப்பாத்திரம். திறம்படவும் செய்திருக்கிறார். முக்கியமாக லூக் ஸ்கைவாக்கரிடமும் பயமில்லாமல் சீறும்போதும், இறுதிக் காட்சிகளில் பாறைகளை வைத்து சாகசம் செய்யும் போதும் அப்லாஸ் அள்ளுகிறார். 

இறுதிக் காட்சியில், லாயத்தில் வேலை செய்யும் அடிமை சிறுவன் ஒருவன், ரெசிஸ்டன்ஸ் அணியின் மோதிரம் ஒன்றை அணிந்து சந்தோசமாக நம்பிக்கையுடன் காத்திருப்பதாக முடிகிறது.  ஸ்டார் வார்ஸ் ரசிகர்களும் படம் முடியும்போது அந்தச் சிறுவனின் மனநிலையில் தான் வெளியே வருகின்றனர். அந்த வகையில் ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடாய் ஜெயித்திருக்கிறாள்.ஸ்டார் வார்ஸ் தொடரில் சிறந்த படம் என்றால் 'தி எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக்' என்று உடனே பதில் வரும். அந்த பதில் இனி மாறினாலும் மாறலாம்.
 

ர.சீனிவாசன்

Creative Writer | Movie Observer | Science Enthusiast | Still Human