இவர்கள் அற்புதத் துகள்கள்! #Wonder படம்... ஒரு பார்வை! | A view on the recently released Wonder movie

வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (21/12/2017)

கடைசி தொடர்பு:12:58 (24/12/2017)

இவர்கள் அற்புதத் துகள்கள்! #Wonder படம்... ஒரு பார்வை!

தன் முதல் பத்தாண்டுகளை வீட்டுக்குள்ளேயே கழித்த ஒரு சிறுவன், முதல் முறையாக பள்ளிக்கு செல்கிறான். அவனை அந்த பள்ளி சூழல் எப்படி அணுகுகிறது என்பதை சொல்கிறது வொண்டர் திரைப்படம். 

Wonder

ஒரு சிறு திருத்தம். அவன் சாதாரண சிறுவன் அல்ல.  ட்ரீச்சர் காலின்ஸ் சிண்ட்ரோம் ( Treacher Collins syndrome ) என்னும் மரபணுக்கோளாறால் தன் முகம் முழுவதும் சிதைந்து பிறக்கிறது அக்குழந்தை. சமூகத்தின் சொற்களில் சொல்வதாயின் அவலட்சணக்குழந்தை. விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் ஒரு ஹெல்மெட்டை அணிந்தபடி எங்கும் செல்லும் அந்தச் சிறுவன், முதல் முறையாக பள்ளி செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறான். பள்ளியில் அவனிடம் நன்கு  பழக சிலரைக் கட்டளையிடுகிறது பள்ளி நிர்வாகம்.  அவர்கள் அவனிடம் எப்படி பழகுகிறார்கள். சிறுவன் இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்கிறான்; உலகம் தன்னை அணுகும் விதத்தை எப்படி சமாளிக்கிறான் போன்றவற்றை உணர்வுப்பூர்வமாக அணுகுகிறது வொண்டர் திரைப்படம்.  

இந்த உலகம் ஏன் தங்களை இப்படி நடத்துகிறது? மாற்றுத்திறனாளிகள் , மரபணுக்கோளாறு உடையவர்கள் சந்திக்கும் முதல் கேள்வி இது தான். படத்தில் வரும் சிறுவனான ஆகஸ்ட் தன் குரலில், " ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் எனது முகத்தை அறுவை சிகிச்சை செய்துகொண்டே இருந்தார்கள். சில சமயங்களில் எனது முகத்தை மருத்துவர்கள் மேம்படுத்திக்கூட காட்ட முயன்றிருக்கிறார்கள். ஆனால், ஒருமுறை கூட அவர்களால் என் முகத்தை இயல்பான ஒரு மனிதரின் முகம் போல் மாற்ற  முடியவில்லை. சமூகத்தில் இருக்கும் பிற குழந்தைகளைப் போல் தான் நானும் சைக்கிள் ஓட்டுகிறேன்; ஐஸ்கிரீம் சாப்பிடுகிறேன்;விளையாடுகிறேன். எனக்குள் நான் இயல்பான குழந்தையாகவே உணர்கிறேன். ஆனால், என்னை யாரும் அப்படி பார்ப்பதில்லை. உங்களிடம் நான் எப்படி இருப்பேன் என விளக்கப்போவதில்லை. நீங்கள் நினைப்பதைவிட என் முகம் மோசமாக இருக்கும்" சொல்கிறான். 

Wonder

ஒரு விபத்தால், உடல் முழுவதும் செயலற்ற நிலைக்கு தள்ளப்படும் ஒருவரின் வாழ்க்கையை சொல்லும் 'மீ பிஃபோர் யூ' Me Before You திரைப்படம்; போலியோவால் பாதிக்கப்பட்டு தன் கழுத்திற்கு கீழ் செயலற்று இருக்கும் ஒருவரது வாழ்க்கையை சொல்லும் 'தி செஷ்ஷன்ஸ்' The sessions திரைப்படம் என உடல் பாதிப்பு ஏற்பட்டவர்களின் வாழ்க்கையை சொல்லும் படங்கள் சில இதற்கு முன்னர் வந்திருக்கின்றன.  ஆனால், முகம் சிதைந்த குழந்தை, அவனை சுற்றி நடக்கும் கதை அவற்றைப்பற்றி கதை சொல்லப்பட்ட விதம் போன்றவற்றால் தனித்து நிற்கிறது வொண்டர். 

பெரும்பாலும் , இத்தகைய படங்களில் , முழுக்கதையும் இந்தச் சிறுவனை சுற்றியே நிகழும். நாவலாக வெளிவந்த போதே, வொண்டர் பலரை ஈர்த்து ஹிட் அடித்ததற்குக் காரணம் உண்டு. அது ஆகஸ்ட் புல்மேன் என்னும் 10 வயது 'ஆகி'யின் வழி மட்டும் சொல்லப்பட்ட கதை Wonder அல்ல. ஆகஸ்ட்டின் அக்கா 'வியா'; எந்த எதிர்பார்ப்புமின்றி ஆகஸ்ட்டுடன் பழகும் சிறுமி ' சம்மர்' ;  ஸ்காலர்ஷிப்பிற்காக ஆகஸ்ட்டுடன் பொய்யாக பழகி, பின்னர் க்ளோஸ் ஃபிரெண்டாகும் 'ஜாக்'; வியாவின் காதலன் ஜஸ்டின்; வியாவின்  பள்ளி தோழி மிரண்டா என பலரின் பார்வையில் கதை எழுதப்பட்டிருக்கும். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பிறரது புத்தகங்களுக்கு கிராஃபிக் டிசைனராக இருந்த ஆர்.ஜே.பலேசியோ, இந்தக் குறைபாடு இருக்கும் ஒரு குழந்தையை ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் காண்கிறார். அதுதான் அவரை இந்த கதையை எழுதத் தூண்டுகிறது. நாவல் முழுக்க அவ்வளவு 'பாசிட்டிவிட்டி'. 

Wonder

இது போன்ற குடும்பங்களில் மற்ற ஒரு குழந்தையைப் பற்றி யாரும் பெரிதாய் கண்டுகொள்வதில்லை. அந்தக்குழந்தை பெரும்பாலும் தனித்தே தான் இருக்கும். அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சி என்பது பெரும்பாலும், யாரும் கண்டுகொள்ளாமல் தனிமையில் வாடும் இந்தக் குழந்தையை பொறுத்துத்தான் அமையும். ஒட்டுமொத்த குடும்பமும், ஆகஸ்ட் கதாப்பாத்திரத்தை சுற்றியே இருக்க, அதை வியா எதிர்கொள்ளும் விதம் அழகு. " என் அம்மாவின் உலகத்தில் ஆகஸ்ட் தான் சூரியன். நாங்கள் அனைவருமே கிரகங்கள்" என்பாள் வியா.ஆம், ஆகஸ்ட் போன்ற குழந்தைகளுக்கு தாங்கள் விரும்பும் குடும்பம் என்னும் உலகம் எப்போதுமே, அவர்களை சுற்றியே  நகர வேண்டும். 

படம் முழுக்க யதார்த்த வரிகளாலும், படத்தை இயக்கிய விதத்திலும் அனைவரது கைதட்டலையும் பெறுகிறார் ஸ்டீபன் சோபஸ்கி. 'தி பெர்க்ஸ் ஆஃப் பீயிங் ஏ வால்ஃபிளவர்' The Perks of Being a Wallflower என்னும் திரைப்படத்தில் பதின்ம வயது சிறார்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதி இயக்கியவர், இந்தமுறை குழந்தைகள் பக்கம் திரும்பியிருக்கிறார். அதீத நகைச்சுவையில் செல்லும் நாவலை கடிவாளமிட்டு பல இடங்களில் சிறந்த படமாக மாற்றியதில் சோபஸ்கியின் பங்கு அதிகம். 

Wonder

படத்தில் ஆகஸ்ட்டாக நடித்திருக்கும் ஜேகப் டிரெம்பிளேவுக்கு ஆயிரம் முத்தங்கள். 2015ம் ஆண்டு வெளியான 'ரூம்' படத்தில் ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் சிறுவனாக நடித்தபோதே பலரது கைத்தட்டலையும் பெற்றவனுக்கு, இந்தப் படம் மற்றுமொரு மைல்கல். " நீ ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சுக்கக் கூடாது" என அப்பாவியாய் கேட்கும் ஜாக்கிடம். " உனக்கு ஒன்னு சொல்லவா, பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சு வந்த முகம் தான் இது" என சொல்லிவிட்டு தலையை ஸ்டைலாக கோதி விட்டுக்கொள்வான் 'ஆகி'. பதினோரு வயதில், இந்த சிறுவன் காட்டும் திரைமொழி அபாரம். ஜேகப் 'ஆகஸ்ட்'டாக மாற இரண்டு மணி நேரம் பிராஸ்தட்டிக் மேக்கப்பில் ஈடுபட வேண்டும். காது, மூக்கு, வாய் என எல்லா இடங்களிலும் பிராஸ்தட்டிக்ஸ், அதுமட்டுமல்லாமல், கண்ணின் கீழ் இமைகள் இன்னும் கீழ் நோக்கி இருப்பது போல், ஒரு செட் செய்து அதை இழுத்திருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் கடந்து அந்த முகத்தில் நடிப்பை கொட்டுகிறான் அச்சிறுவன். " என்னால் ஏன் பிறரைப் போல் இயல்பாக இருக்க முடியவில்லை " என சொல்லிவிட்டு வெடித்து அழும் இடத்தில் பிராஸ்தெட்டிக்ஸைக் கடந்து தெறிக்கிறது அவனது நடிப்பு.  "பிராஸ்தெட்டிக்ஸ் கடினமாகத்தான் இருந்தது, ஆனால், அதைப்பற்றி நான் பெரிதாய் கவலைப்படவில்லை " என்கிறான் ஜேகப். இயக்குநர் ஸ்டீபன் சோபஸ்கி, ஜேகபை, பதின்ம வயது டிகாப்ரியோவிற்கு நிகரானவர் என பாராட்டுகிறார். 2015ம் ஆண்டு Room ரூம் படத்துக்காக பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஜேகபிற்கு, இந்த ஆண்டும் விருதுகள் தான்.  

பள்ளியின் தாளாளராக இருக்கும் துஷ்மேன் ஆகஸ்ட்டை சீண்டும் ஒரு சிறுவனின் தாயாரிடம் இவ்வாறாக சொல்வார். " ஆகஸ்ட்டால், அவனது உருவத்தை மாற்ற முடியாது. நாம் தான் நம் பார்வையை திருத்திக்கொள்ள வேண்டும்" . ஆம். நாம் பார்வையைத் திருத்திக்கொள்ள வேண்டிய தருணமிது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close