கோல்டன் குளோப் மேடையில் விருது வென்ற 'தமிழன்' அஜீஸ் அன்சாரி - #GoldenGlobe

கோல்டன் குளோப் விருதுகள் என்றதுமே நம் நினைவிற்கு வருபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்! 2009-ல் நடைபெற்ற 66-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக சிறந்த இசைக்கான விருதை வென்று கோல்டன் குளோப் விருதினை நமக்கு அறிமுகப்படுத்தினார் ரஹ்மான். ஆஸ்கர் விருதுக்குப் பிறகு அதிகம் மதிக்கப்படும் கோல்டன் குளோப் விருதானது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும். 75-வது கோல்டன் குளோப் விருதுகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இன்று வழங்கப்பட்டன.

அமெரிக்காவில் தொலைக்காட்சித் தொடருக்கான சிறந்த நடிகர் நகைச்சுவை என்ற பிரிவில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 'அஜீஸ் அன்சாரி'க்கு விருது வழங்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் 'மாஸ்டர் ஆஃப் நன்' என்ற நகைச்சுவைத் தொடரை அலன் யாங் என்பவரோடு சேர்ந்து உருவாக்கி, அதில் நடிக்கவும் செய்திருக்கிறார் அஜீஸ் அன்சாரி. இவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும், பிறந்தது, படித்தது எல்லாம் அமெரிக்காவில்தான். 2004-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கத்தொடங்கிய அன்சாரி, இதுவரை 28 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். 'ஸ்டாண்ட் அப் காமெடிய'னாக தன் பணியைத் தொடங்கிய அன்சாரி  டப்பிங் கலைஞர் மற்றும் நடிகராக சுமார் 14 ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். 

                              அஜீஸ் அன்சாரி

அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக பிரத்யேகமாக வழங்கப்படுவது எம்மி விருதுகள் (Emmy awards). அந்த எம்மி விருதினையும் இரண்டு முறை பெற்றுள்ளார் அன்சாரி. Modern Romance : An Investigation என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் அன்சாரி. உலகம் முழுவதும் சுமார் 100 அறிஞர்களிடம் ஆலோசித்து, ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட இந்தப் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

'This Is US' என்ற தொலைக்காட்சித் தொடருக்காக சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார் ஸ்டெர்லிங் கே ஃப்ரெளன். 75 ஆண்டுகளில் இந்த விருதைப் பெறும் முதல் கறுப்பு இனத்தை சேர்ந்தவர் என்ற பெருமை ஸ்டெர்லிங்கையே சாரும்! இதுவரை 25-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள ஸ்டெர்லிங், 13 ஹாலிவுட் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். NBC-ல் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றதும், இதற்கான இரண்டாவது சீசனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒளிபரப்பத் தொடங்கியது NBC. இதே தொடருக்காக எம்மி விருதையும் வென்றுள்ளார் ஸ்டெர்லிங். 19 ஆண்டுகளுக்குப் பின் எம்மி விருதுபெறும் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர் என்ற ரெக்கார்டையும் தன்வசம் வைத்துள்ளர் இவர்.  

                                       ஸ்டீஃபன் கே ஃப்ரெளவுன் - கோல்டன் க்ளோப்

விருதுபெற்ற பின் ஸ்டெர்லிங், "நான் எதிலும் முதலாவதாக இருந்ததில்லை. நான், என் பள்ளி மாணவர் சபையின் நான்காவது ஆஃப்ரோ-அமெரிக்காவைச் சேர்ந்த தலைவர். இராண்டவது கறுப்பினத்தைச் சேர்ந்த கூடைப்பந்து அணித் தலைவர். கடைசியாக ஒரு விஷயத்தில் முதலாமவனாக இருப்பது சுவாரஸ்யமாகத்தான் உள்ளது." என்று கூறினார். பின் தன் மனைவி, குழந்தைகள் மற்றும் 'This Is US' தொடரில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த தனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்த டான் ஃபோகல்மேன் (Dan Fogelman) ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக 'த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங், மிசோரி', 'லேடி பேர்டு' (இசை & நகைச்சுவைப்பிரிவு) ஆகியவை தேர்வு செய்யப்பட்டன. சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது 'கோகோ'வுக்கு வழங்கப்பட்டது. விழாவை அமெரிக்க நகைச்சுவை நடிகர் சேத் மெயர்ஸ் தொகுத்து வழங்கினார். நடிகைகள் பலர் ஹாலிவுட் திரைப்பட உலகில் நிலவும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து வந்திருந்தினர்.

விருதுகளின் விவரம் :

திரைப்படங்கள்

சிறந்த திரைப்படம்: த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி

சிறந்த நடிகை: பிரான்சஸ் மெக்டோர்மண்ட் (த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி)

சிறந்த நடிகர்: கேர்ரி ஒல்டுமென் (டார்க்கஸ்ட் அவர்)

சிறந்த திரைப்படம் (இசை & நகைச்சுவை பிரிவில்): லேடி பேர்டு 

சிறந்த நடிகை (இசை & நகைச்சுவை படப்பிரிவில்): சாய்ரஸ் ரோனன் (லேடி பேர்டு)

சிறந்த நடிகர் (இசை & நகைச்சுவை படப்பிரிவில்): ஜேம்ஸ் பிரான்கோ (தி டையாஸ்டர் ஹாடிஸ்ட்)

சிறந்த துணை நடிகை : அலிசன் ஜான்னே, சிறந்த துணை நடிகை (ஐ டோனியா)

சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல்  (த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி)

சிறந்த இசையமைப்பு: தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த பாடல்: தி இஸ் மீ ( தி கிரேடஸ்ட் ஷோமென்)

சிறந்த திரைக்கதை: த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி

சிறந்த பிறமொழி திரைப்படம்: இன் தி ஃபேர்ட்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: கோகோ

தொலைக்காட்சி

சிறந்த தொலைக்காட்சித் தொடர்:  தி ஹேன்மெய்ட்ஸ் டேல்

சிறந்த நடிகை (தொலைக்காட்சித் தொடர்) : எலிசபெத் மோஸ்  (தி ஹேன்மெய்ட்ஸ் டேல்)

சிறந்த நடிகர் (தொலைக்காட்சித் தொடர்): ஸ்டெர்லிங் கே.ப்ரவுன் (தி இஸ் அஸ்)

சிறந்த தொலைக்காட்சித் தொடர் (இசை & நகைச்சுவைப்பிரிவு):  தி மார்வெல்லஸ் மிஸ் மைசல்

சிறந்த நடிகை (இசை & நகைச்சுவைப்பிரிவு): ரேச்சல் புரோஸ்னகன் (தி மார்வெல்லஸ் மிஸ் மைசல்)

சிறந்த நடிகர் (இசை & நகைச்சுவைப்பிரிவு):  அசிஸ் அன்சாரி (மாஸ்டர் ஆப் நோன்)

வரையறுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள் பிரிவு

சிறந்த நாடகம்: பிக்  லிட்டில் லைஸ்

சிறந்த  நடிகர்:  இவான் மெக்ரிகர் (ஃபார்கோ)

சிறந்த நடிகை:  நிக்கோலா நிக்மன் (பிக்  லிட்டில் லைஸ்)

சிறந்த துணை  நடிகர்: அலெக்ஸ்சாண்டர் ஸ்கேர்ஸ்கார்ட் (பிக்  லிட்டில் லைஸ்)

சிறந்த துணை நடிகை: லாரா டெர்ன் (பிக்  லிட்டில் லைஸ்)

கோல்டன் குளோப் விருதுகளில் கெளரவ விருதாக வழங்கப்படும் 'சிசில் பி. டிமெய்ல்' விருது இவ்வருடம் அமெரிக்க நடிகையும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமான ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு வழங்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!