Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்பி சகோதரிகள் தேடிச்செல்லும் புதையல்! #BarbieAndHerSistersInTheGreatPuppyAdventure #MovieRewind

 Barbie and Her Sisters in the Great Puppy Adventure

‘பார்பி’ வரிசையில் முக்கியமான வீடியோ திரைப்படம்  Barbie and Her Sisters in the Great Puppy Adventure. அழகுக்கு இலக்கணமாக உள்ள பார்பியும் அவளின் சகோதரிகளும், அவர்களது நாய்க்குட்டிகளும் இணைந்து ஒரு புதையலைத் தேடிக் கண்டுபிடிக்கும் படைப்பு. ஒற்றுமையாகவும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால், எந்தவொரு கடினமான செயலையும் சாதிக்கலாம் என்பதை மனதில் அழுத்தமாகப் பதிக்கும் திரைக்கதை. 

பார்பியும் அவளது சகோதரிகளும் கோடை விடுமுறையில் பாட்டியின் ஊருக்குச் செல்கிறார்கள். தனது சிறுவயதில் பார்பி இங்கு வந்தவள், மிக நீண்ட காலத்துக்குப் பிறகு சகோதரிகளுடன் வந்திருக்கிறாள். எனவே, பாட்டியைக் காண அனைவருமே ஆவலாக இருக்கிறார்கள். ‘செல்லங்களா.. நல்லா வளர்ந்துட்டீங்களே’ என்று பிரியத்துடன் இவர்களை வரவேற்கிறார் பாட்டி. 

பாட்டி வீட்டின் வளர்ப்பு நாய், நான்கு குட்டிகளை ஈன்றிருக்கிறது. நான்கு சகோதரிகளும் அவற்றுக்குப் பெயர்களை வைக்கிறார்கள். இசை கேட்கும் விருப்பமுள்ள ஒரு நாய்க்குட்டிக்கு ‘டிஜே’ என்று பெயர் வைக்கப்படுகிறது. பார்பி தனது நாய்க்குட்டிக்கு ‘டாஃபி’ என வைக்கிறாள். குட்டிகள், இவர்களிடம் அன்புடன் ஒட்டிக்கொள்கின்றன. அந்தச் சகோதரிகள் ஊரில் நிகழும் கோடை திருவிழாவில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்கள். அங்கிருக்கும் தன் தோழியைக் காணவும் பார்பி ஆவலாக இருக்கிறாள். அதேநேரம், அந்த நகரின் வருமானம் குறைந்துவருவதால், திருவிழாவை வேண்டுமா என்று நகர மேயர் யோசித்துக்கொண்டிருக்கும் தகவலை பாட்டி கூறுகிறாள். 

இந்நிலையில், பாட்டி வீட்டில் தற்செயலாக ஒரு பழைய மேப் கிடைக்கிறது. அதுபற்றிய விவரத்தைப் பாட்டியிடம் கேட்கிறார்கள். இவர்களின் தாத்தா, முன்பு ஒரு புதையலைத் தேடி, இயலாமல் கைவிட்ட கதையைக் கூறுகிறார். பலரும் முயன்று கண்டடைய முடியாத புதையல் அது. இப்போது அதுபற்றி மறந்தேவிட்டார்கள். அதைத் தேடிக் கண்டுபிடிக்க பார்பியின் சகோதரிகள் முடிவெடுக்கிறார்கள். மிகச் சிக்கலான புதிர்கள் ஒவ்வொன்றையும் கடக்கிறார்கள். தன் பிரியமான தோழியுடன் பொழுதைக் கழிக்கத் திட்டமிட்டிருந்த பார்பியும் பிறகு இவர்களுக்கு உதவுகிறாள். 

Barbie & Her Sisters in the Great Puppy Adventure

ஒவ்வொரு கட்டமாக முன்னேறும் இவர்களின் பின்னால் ஓர் ஆபத்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. லாரல் மற்றும் ஹார்டியை நினைவுபடுத்தும் தோற்றத்தில், குண்டு மற்றும் ஒல்லியான இடண்டு பேர், புதையலை எளிதாகக் கைப்பற்றும் நோக்கத்துடன் இவர்களைப் பின்தொடர்கிறார்கள். பார்பி சகோதரிகளால் புதையலைக் கண்டுபிடிக்க முடிந்ததா? பின்தொடரும் நபர்கள் தரும் இடைஞ்சலை சமாளித்தார்களா? புதையல் என்னவானது என்பது சுவாரஸ்யமான காட்சிகளாக விரிகிறது. 

பார்பி பொம்மையையும் அதன் ஒயிலான தோற்றத்தையும் விரும்பாத குழந்தைகளே இல்லை. பெண் குழந்தைகள் அதிகம் நேசிக்கும் இந்த அசையாத பொம்மையே, உலகம் முழுக்க இத்தனை பேரைக் கவர்ந்திருக்கும்போது, அது தொடர்பான திரைப்படம் வெற்றிபெறுவதில் ஆச்சரியமேயில்லை. பார்பி மட்டுமின்றி, சகோதரிகளின் தோற்றமும் வசீகரமாக இருக்கிறது. அவர்களோடு இணைந்து நம்மைக் கவர்வது, நாய்க்குட்டிகள். அவற்றின் அசைவும் குரலும் மிகத் துல்லியமாக, குறும்புத்தனங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்பியின் ‘டாஃபி’ நாய், பயந்தாங்கொள்ளியாகவும் எல்லாவற்றுக்கும் தயங்குவதாகவும் இருக்கிறது. ஆனால், இறுதிக் காட்சியில் துணிச்சலாகச் செயல்பட்டு ஆபத்தில் இருக்கும் அனைவரையும் காப்பாற்றுவது இதுதான். 

புதையலைக் குறுக்கு வழியில் கைப்பற்றுவதற்காக பின்தொடரும் நபர்களின் கோணங்கித்தனங்கள் சிரிக்கவைக்கின்றன. ஒல்லியான நபர் செய்யும் நகைச்சுவையான தவறுகளால், குண்டு நபர் அவதிப்படுவது ரசிக்கவைக்கிறது. 

நவீன வசதிகளைவிடவும் பாரம்பரியமான முறையே நம்பகத்தன்மை மிகுந்தது என்கிற நீதி, காட்சிகளின் இடையே உறுத்தாமல் சொல்லப்படுகிறது. படத்தின் ஆரம்பத்தில், பாட்டியின் வீட்டுக்கு வாகனத்தில் செல்லும் பார்பியை ‘தவறான வழியில் செல்கிறீர்கள்’ என்று எச்சரிக்கிறது ஜி.பி.எஸ் கருவி. ஆனால், இளமையில் தான் கண்ட மரம், கடிகாரக் கூண்டு ஆகிய அடையாளங்களைவைத்தே சரியாக வந்துசேர்கிறாள். இதுபோல இன்னொரு காட்சியில், புதையல் தொடர்பாக இவர்கள் சேமித்துவைத்த விவரங்கள் அடங்கிய கணினி திருடுபோகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்கள். அப்போது பழைய மேப்பும் டாலரும் பயணத்தைத் தொடர உதவியாக இருக்கிறது. 

Barbie & Her Sisters in the Great Puppy Adventure

Amy Wolfram கதையை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் Andrew Tan மற்றும் Michael Goguen. தனது அபாரமான இசையால் இதற்குத் துணை நின்றிருக்கிறார் Christopher Willis. பார்பி பாத்திரத்துக்கு அற்புதமாகக் குரல் தந்திருப்பவர் Kelly Sheridan. இதர நடிகர்களும் பிற பாத்திரங்களை தங்களின் குரல்களின் மூலம் உயிர்பெறச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, நாய்க்குட்டிகளின் குரல்கள் மிகப் பொருத்தமாகவும் சுவாரசியமாகவும் அமைந்திருக்கிறது. வசீகரமும் வண்ணங்களும்கொண்ட பின்னணிக் காட்சிகள், பாத்திரங்களின் துல்லியமான அசைவுகள், காட்சிகளின் கற்பனை வளம் என எல்லாமே நம்மை மகிழ்விக்கின்றன. 

பார்பி சகோதரிகள் கண்டுபிடிக்கும் புதையல், போதுமான நிதி இல்லாமல் சிரமப்படும் நகர நிர்வாகத்துக்கு உதவவுதும், நின்றுபோகவிருந்த திருவிழா தொடர்ந்து நடைபெறும் மகிழ்வான செய்தியோடும் படம் நிறைவது சிறப்பு. பார்பி சகோதரிகள் இதற்காகப் பாராட்டப்படுகிறார்கள். அவர்களது நாய்க்குட்டிகளும்தான். 

 

 

விடாமுயற்சியோடு ஒன்றுபட்டு உழைத்தால் எந்தக் கடின இலக்கையும் அடையலாம் என்பதை அழுத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்கிறது குழந்தைகளுக்கான இந்தத் திரைப்படம்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்