Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறுதி அத்தியாயத்தில் கிளேடரஸ் காப்பாற்றப்படுகிறார்களா ? #TheMazeRunnerTheDeathCure படம் எப்படி?

உலகம் முழுக்க வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்கு குறிப்பிட்ட வயதுடைய இளைஞர்களைப் பலி கொடுத்து பரிசோதிக்கும் நிறுவனம். அதே நிறுவனத்தின் பிடியிலிருந்து தப்பித்து, மாட்டிக்கொண்டிருக்கும் மற்றவர்களைக் காப்பாற்றுதற்காகப் போராடும் இன்னொரு கூட்டம். இதுதான் `மேஸ் ரன்னர் :  டெத் கியூர்' படத்தின் ஒன் லைன். 

`தி மேஸ் ரன்னர் : டெத் கியூர்'

அமெரிக்காவின் நாவல் ஒன்றை மையமாக வைத்து எடுத்த இந்தப் படத்தின் விமர்சனத்தைக் காண்பதற்கு முன், முதல் இரு பகுதிகளின் கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம். `தி விக்கட்' (WICKED) என்ற நிறுவனம், குறிப்பிட்ட வயதுடைய இளைஞர்களின் நினைவுகளை அழித்து, அவர்களை `க்ளேட்' எனும் மேஸில் (பொறி) சிக்கவைத்து, அவர்களின் தைரியத்தைப் பரிசோதித்துக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும். காரணம், உலகம் முழுக்கப் பரவிக்கிடக்கும் வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்கான மருந்து, இவர்களின் ரத்தத்தில்தான் இருக்கும். அந்த இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் `ஏன் இங்கு இருக்கிறோம்' என்று தெரியாமலேயே சில வருடங்களாக வாழ்ந்துவருவார்கள். தன் அடையாளத்தை மறந்து வாழும் இளைஞர்ளுக்கு, `அங்கிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் ஆபத்து நிறைந்த அந்த மேஸைக் கடந்தால் மட்டும்தான் முடியும்' என்பது மட்டும் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால், நான்கு பக்கமும் இருக்கும் அந்த சவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் திறக்கும், குறிப்பிட்ட நேரத்தில் மூடும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வழி. இப்படிப் பல சிக்கல்கள் இருக்கும். இரவில் உள்ளே செல்பவர்கள் யாரும் மறுநாள் உயிருடன் வரமாட்டார்கள். காரணம், அங்கிருக்கும் `கிரீவர்ஸ்' எனும் கொடிய மிருகங்கள். தங்களுக்கென விதிமுறைகளை உருவாக்கி, சீனியாரிட்டி படி வேலைகளைப் பிரித்துக்கொள்வார்கள்.

அப்படியொரு நாள், மேஸின் கதவுகள் மூடப்போகும் நேரத்தில் ஆல்பியையும் (அமல் அமீன்) மின்ஹோவையும் (கி ஹாங் லீ) காப்பாற்றும் முயற்சியில் தாமஸும் (டைலான் ஓ பிரெயின்) ஈடுபட, அவர்களும் உள்ளேயே மாட்டிக்கொள்வார்கள். உயிர் பிழைக்கமாட்டார்கள் என்று நினைத்த நேரத்தில், உள்ளே க்ரீவர்ஸையும் கொன்று, சிக்கியர்களையும் காப்பாற்றி வெளியே கூட்டிக்கொண்டு வருவார் தாமஸ். அதற்குப் பின் சுவருக்குள் சென்று தப்பிக்கும் வழியைத் தேடத்தொடங்குவார். `இந்த மேஸின் கடைசி ஆள் இவர்தான்' என்ற குறிப்புடன் தெரசா (கயா ஸ்கோலாரியோ) இவர்களுடன் இணைவார். தெரசாவைக் கண்டதும் தன் கடந்தகால நினைவுகள் மெள்ள மெள்ள வர ஆரம்பிக்கும். முடிவில் தாமஸும் விக்கட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்தான் என்பது தெரியவரும். இருப்பினும் தலைமைப் பொறுப்பைத் தாமஸிடம் கொடுத்துக் காப்பாற்றும்படி கேட்பார்கள். இறுதியாக, கிடைக்கும் சில துப்புகளை வைத்து மேஸிலிருந்து சிலர் வெளியே வந்துவிடுவார்கள். வெளியே வந்தபிறகுதான் மக்களுக்குப் பரவும் நோய் பற்றியும், இவர்களுக்கு நடக்கும் பரிசோதனைகள் பற்றியும், இவர்களைப்போல பல இளைஞர்கள் பரிசோதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவரும். வெளியே வந்தபின்பும் மீண்டும் `விக்கட்' நிறுவனத்தின் பிடியில் சிக்கும் இவர்கள் தப்பித்தார்களா, நோய்க்கான மருந்து கிடைத்ததா என்பதை விறுவிறு திரைக்கதையில் சொல்லியிருக்கிறார், இயக்குநர் வெஸ் பால். 

தி மேஸ் ரன்னர்

`உலகம் முழுக்க நோய் பரவி, நாடே சுடுகாடாகும். மக்கள் ஸோம்பிக்களாக உலாவுவார்கள்' என வழக்கமான கதையைக் கொண்ட படமாக இது எடுக்கப்படாததுதான், இந்தப் படத்தின் ப்ளஸ். வெவ்வேறு பிரச்னைகள் நிகழ்ந்து, படம் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும். படத்தில் இடம்பெற்ற பல கதாபாத்திரங்களையும் சரியாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். ஹீரோவாக நடித்த டைலான் ஓ பிரெயினின் இயல்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். நல்லவரா கெட்டவரா என்ற ரகத்தில் நடித்த ஏவா பைஜ் (பாட்ரிஸியா க்ளார்க்ஸன்), `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் எய்டன் ஜில்லன் வெளிக்காட்டிய வில்லத்தன நடிப்பு. அதுபோக நண்பர்களாக நடித்த நியூட் (தாமஸ் பிரோடி), கேல்லி (வில் பௌட்லர்), சக் (ப்ளேக் கூப்பர்) எனப் படத்தில் இடம்பெற்ற சிறிய கதாபாத்திரம் முதல் பெரிய கதாபாத்திரம் வரை தங்களுக்குக் கொடுத்த ரோலை சரியாகச் செய்திருந்தனர். கிளைமாக்ஸில் இடம்பெற்ற கிராஃபிக்ஸ் வேற வெவல். மூன்று பகுதிகளையும் ஒரே ஃப்ளோவில் பார்த்தால் அந்த இடத்துக்கே நம்மையும் கூட்டிச்செல்லும்படியான விஷுவல்தான், இப்படத்தின் `வாவ்' ரகம். கதையில் இவர்களுக்குள் ஏற்படும் நட்பு, காதல், துரோகம், இழப்பு என எமோஷனலாகவும் கவர்ந்திருக்கிறார், இப்படத்தின் இயக்குநர். 

சீக்குவல் என்பதால் முந்தைய பகுதிகளில் `நடந்தது என்ன' என்பதை வாய்ஸ் ஓவரிலோ, டைட்டில் கார்டிலோ எடுத்துச் சொல்லியிருக்கலாம். எடுத்த எடுப்பில் படத்தை ஆரம்பித்தது, முந்தைய பகுதிகளைப் பார்க்காதவர்களுக்கு, கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாய் ஆகிவிட்டது. மூன்று பகுதிகளையும் நன்றாகக் கவனித்தால் பிரமாண்டத்தைப் படிப்படியாகக் காணலாம். முதல் பகுதி ஏற்படுத்தும் சுவாரஸ்யம், அடுத்தடுத்து வந்த இரு பகுதிகளிலும் மிஸ்ஸிங். முதல் பகுதியிலேயே ஒட்டுமொத்த கதையினையும் சொல்லிவிட்டு, அடுத்தடுத்து வந்த இரு பகுதிகளிலும் நடக்கும் சிறு பிரச்னைகளை லூப் ஹோலாகப் பயன்படுத்தி கதையினை நகர்த்தியது மட்டுமே ஏமாற்றம். கிளைமாக்ஸில் `விக்கட்' நிறுவனத்தை ஒழித்துக்கட்டியது ஓகே. ஆனால், அத்தனை இழப்புகளை உண்டாக்கிய நோய்க்கு மருந்தைக் கண்டுபிடித்தார்களா என்பது கேள்விக்குறியாகவே முடிந்துவிட்டது. வெவ்வேறு இடங்களிலும் பயணிக்கும் கதையினை நீளமாகத்தான் எடுக்கமுடியும். என்றாலும், எடிட்டிங்கில் கவனம் செலுத்தி இன்னும் படத்தைச் சுருக்கியிருக்கலாம். இன்ட்ரோவில் இடம்பெற்ற ஸ்டன்ட் காட்சி, 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தை நினைவுபடுத்தியது. முடிவில், ஆரம்பத்தை யோசித்துப் பார்த்தால், பல முடிச்சுகள் அவிழ்க்காமலேயே போயிருக்கும்.

 

 

முதல் பகுதியில் இருந்த அதே சுவாரஸ்யத்தை எதிர்பார்க்காமல் தியேட்டருக்குப் போனால், `தி மேஸ் ரன்னர் : தி டெத் கியூர்' கண்டிப்பாக உங்கள் பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் கொடுக்கும்!.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்