சினிமா விருதுகளில் குறிக்கப்பட்டிருக்கும் சின்னம் மத அடையாளங்களா? #CinemaAwards

ஆண்டின் தொடக்கத்தில் எங்கு திரும்பினாலும் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகள்தாம் நடந்துகொண்டிருக்கின்றன. ஜெய்ப்பூர் ஃபிலிம் ஃபெஸ்டிவல், இன்டெர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் கேரளா, கோவா ஃபிலிம் ஃபெஸ்டிவல், நெதர்லாந்து ஃபிலிம் ஃபெஸ்டிவல், கிராமி அவார்ட்ஸ், நியூயார்க் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆகிய அனைத்து விருது வழங்கும் விழாக்களும் கடந்த மாதத்தில் கோலாகலமாக நடந்துமுடிந்தன.

Award Symbol

நாம் அவ்விழாக்களில் வழங்கப்படும் விருதுகளை ஒப்பீடு செய்தால், அவற்றில் ஒன்று மட்டும் பொதுவாகத் தென்படும். அவைதான் விருதுச் சின்னங்களும், அவற்றிலிருக்கும் குறியீடுகளும். அதாவது, விருதின் இரண்டு பக்கங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் மரக்கோப்பையை சாதாரணமாக அனைத்து விருதுகளிலும் காணலாம். விருதுகளில் ஏன்... நம்மூர் சினிமாக்களின் டைட்டில் கார்டுகளிலும் தற்போது இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். யூ-டியூபில் வெளியாகும் குறும்படங்களில்கூட பெருமிதமாக இந்தச் சின்னம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பழக்கம் எங்கிருந்து தொடங்கியது? இன்றுவரை ஏன் பின்பற்றப்பட்டு வருகிறது? அதன் அர்த்தம் என்ன? பின்னணி வரலாறு என்ன? போன்ற கேள்விகள் ஒரு தடவையாவது உங்கள் மூளையை எட்டியிருக்குமானால், நீங்கள் படிக்க வேண்டியவைதான் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

நாம் வரலாற்றிலிருந்து ஏதாவது ஒன்றினைத் திரட்ட வேண்டுமானால், அதற்கு ரோமன்-கிரேக்கத்திடமே சரணடைய வேண்டியிருக்கிறது. அதாவது, கிரேக்க - ரோமன் சமுதாயத்தினர் மரத்திலிருந்து புதிதாக உருவாகும் கிளைகளை ஒன்று சேர்த்து வளைய வடிவிலான ஒரு கிரீடத்தை உருவாக்கி, அதைப் போரில் வெற்றி பெற்ற மாவீரனுக்கு வெற்றிச் சின்னமாக சூட்டி வந்தனர். மேலும், இது சமுதாயத்தில் ஒருவரின் அந்தஸ்து, மதிப்பு, போரில் அவனது பங்கு, செய்யும் தொழில், வெற்றிக்கான காரணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இதன் அளவும், வடிவமும் வெவ்வேறு பாணிகளில் உருவாக்கப்பட்டு வந்தன. இது வட்ட மற்றும் கோள வடிவத்தில் இருப்பதனால், 'பேகாஸ்' எனும் மதத்தின் முறைப்படி இந்த வடிவங்கள் வாழ்க்கையின் அழியாமையைக் குறிக்கும் சின்னமாகக் கருதப்பட்டது. அப்போது கிறிஸ்துவர்கள் மற்றும் யூதர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்த ஒரு மத அமைப்புதான் 'பேகாஸ்'. கிறிஸ்து பிறந்ததும் பின்பு பேகாஸ் அமைப்பு இரண்டாக உடைந்து கிறிஸ்தவ, யூத மதங்களாக மாறின.

Olive Leaves

வளைய மாலை சூட்டப்படும் இந்தப் பழக்கம் கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1000 ஆண்டுகள் முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வந்தது. மேலும், பேகாஸ் மதத்தினருக்கான குறியீடாகவே இது கருதப்பட்டது. வேறு மதத்தினை சேர்ந்தவர்களின் வெற்றி அக்காலத்தில் பெரிதளவில் கொண்டாடப்படவில்லை என்பதற்குச் சாட்சியாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். காலப்போக்கில் மத அடையாளங்கள் மாறி, வெறும் வெற்றிக்கான சின்னமாக மட்டும் மக்கள் இதனை கருதத் தொடங்கிவிட்டனர்.

இதில், ஆலிவ் இலைகள்தாம் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பண்டைய காலங்களில் இந்த இலைகள் தூய்மை மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளங்களாகக் கருதப்பட்டன. கூடுதலாக அழகுக்கு இதில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற ரிப்பன்கள் சேர்க்கும் பழக்கமும் உண்டு. 

மேலும், இந்த வளையங்களை வைத்து சர்ச்களில் மெழுகுவத்தி ஸ்டாண்டுகள் அமைக்கப்படும் பழக்கங்களும் இருந்திருக்கின்றன. இவற்றில் புனிதத்தின் அடையாளமாக இலைகளுக்குப் பதில், பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. இங்கு பருவநிலைக்கு ஏற்றாற்போல் பூக்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இலையுதிர் காலங்களில் வெள்ளை நிறப் பூக்களும், வசந்த காலங்களில் பலவண்ண நிறப்பூக்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பூக்கள் இவ்வாறு சர்ச்களில் வைக்கப்படுவது செழுமையின் அடையாளமாகவும் கருதப்பட்டு வந்தது.

போரில் மரணமடைந்த வீரர்களுக்கும் இதை தியாகத்தின் சின்னமாகச் சூட்டி வந்தனர். ஆனால், காலப்போக்கில் இந்த ஆலிவ் இலை சின்னம் விருது வழங்கும் விழாவின் பெருமித அடையாளமாகவும், மொழி, இனப் பாகுபாடின்றி நல்ல சினிமாக்களின் அடையாளமாகவும் மாறிவிட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!