'ஸா, ஃபியூரியஸ் -7, கான்ஜூரிங்... படைப்புக்காக எதுவும் செய்வார் ஜேம்ஸ் வான்!' - #HBDJamesWan

`பேய்' என்று சொன்னாலே பத்தடி தள்ளி நிற்கும் ஆட்கள் நிறையவே உண்டு, அதில் நானும் ஒருவன். அப்படி இருக்கையில் பேய், அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட படங்களை மட்டுமே இயக்குவதை குலத்தொழிலாக செய்து வருபவர் ஜேம்ஸ் வான். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றியும் அவரின் படைப்புகள் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

ஜேம்ஸ் வான்

இயக்குநராக வேண்டுமென்ற ஆசையில் ஜேம்ஸ் வானும் அவரின் நண்பரான லெய் வானலும் சேர்ந்து தங்களது கனவுப் பேய்ப் படத்தைக் கதையாக எழுதினார்கள். அதற்குப் பின் குறும்படமாகவும் அது வெளிவந்தது. ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் கண்ணில்பட்ட அக்குறும்படம், பெரும்படமாக உருவாகத் தயாரானது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகப் பட்டை தீட்டி `குறைந்த பட்ஜட்டில் ஒரு நல்ல ஹாரர் படம் கொடுக்கலாம்' என்று முடிவுக்கு வந்தனர். அப்படி வெளிவந்த படம்தான் `சா' (Saw). `ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட இருவர், ஒரு வில்லனிடம் மாட்டுகிறார்கள். அங்கிருக்கும் துப்புகளை வைத்து அவர்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'. இதுதான் படத்தின் ஒன்லைன். படம் ஆரம்பித்தது முதல், திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யத்தை நிரப்புவது மிகவும் சிரமம். அதை மிகவும் எளிமையாகக் கையாண்டிருப்பார். படம் ஆரம்பித்த முதல் காட்சியில் இருந்து கடைசி வரை சுவாரஸ்யத்தை அள்ளித் தெளித்திருப்பார். படம் முழுவதும் ஒரு சின்ன அறைக்குள்ளேயே முடிந்துவிடும். வெறும் 10 லட்சத்தில் எடுக்கப்பட்ட அத்திரைப்படம், வசூலித்த தொகை 10 கோடி. படத்தை முடிக்க எடுத்துக்கொண்ட நாள் 18 நாள்கள்.

ஒரு காட்சி உருவாக்கப்பட்டால் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர் ஜேம்ஸ் வான். 18 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்கத் தடை விதிக்கப்பட்ட அந்தப் படத்தின் காட்சிகள் மிகவும் கோரமாக இருக்கும். அதில் ஒருவரது குடலுக்குள் சாவியைக் கண்டுபிடித்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அந்தக் காட்சியில் எந்தவித கிராஃபிக்ஸும் பயன்படுத்தாமல், பன்றியின் இறைச்சியை வைத்து ஒரு காட்சியை எடுத்திருப்பார். அதில் நடித்திருந்தவரும், தனது கண்களில் அறுவறுப்பைக் காட்டாமல் நடித்திருப்பார். `Jigsaw puppet' எனும் கதாபாத்திரத்தைத் தன் படத்தில் கொண்டுவந்து, புது டிரெண்டையே உருவாக்கியவர் ஜேம்ஸ் வான். சினிமாத் துறையில் தன் படிப்பை முடித்தார். அதன் பின் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவருக்குப் பிடிக்காத வேலையைப் பார்த்து வந்தார். தனக்கு வந்த தொடர் தலைவலியால் தன் மூளையில் கட்டி இருப்பதாகவும், கொஞ்ச நாள்கள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்பதுபோலும் கற்பனையான ஓர் எண்ணத்தை தனக்குள் உருவாக்கிக்கொண்டார். அதன் தாக்கத்தில்தான் `Jigsaw puppet' எனும் கதாபாத்திரத்தைச் சித்திரித்தார். 

ஜேம்ஸ் வான்

அன்மையில் வெளிவந்த பேய்ப் படங்களில் நமக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது `கான்ஜூரிங்', `இன்ஸிடியஸ்' போன்ற திரைப்படங்கள். அதில் முக்கியமாக `கான்ஜூரிங்' திரைப்படம் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அப்படத்தை ஆரம்பிக்கும் முன் ஒரு பாதிரியாரை வைத்து, சில புண்ணிய காரியங்களைச் செய்து முடித்தபின்னர்தான், அதன் படப்பிடிப்பே தொடங்கியது. அது மட்டுமில்லாமல் நிஜக்கதையில் சம்பந்தப்பட்ட ஆட்களோடு, அப்படத்தில் நடித்த லொரைனும், எட்டும் (கதாபாத்திரங்களின் பெயர்) கொஞ்ச நாள்கள் பழகினார்கள். அதில் இடம்பெற்ற `அனபெல்' எனும் பொம்மை உண்மையிலேயே சபிக்கிப்பட்ட பொம்மை எனவும், அதனால் இருவர் பாதிக்கப்பட்டார்கள் எனவும் ஜேம்ஸ் வான் தெரிவித்திருக்கிறார்.     

ஜேம்ஸ் வான் - வின் டீசல்

இப்படிப் பேய் பட ஜானர்களை இயக்கிக்கொண்டிருந்த ஜேம்ஸ் வானுக்கு, ஆக்‌ஷன் ஜானரில் ஒரு படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அதுவும், உலகமே எதிர்பார்க்கும் ஒரு ப்ளாக்பஸ்டர் படம். படத்தின் பெயர் `ஃப்யூரியஸ் - 7' (Furious 7). ஆம், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சீரியஸில் 7-வது பாகத்தை இவர்தான் இயக்கினார். படத்தின் வாய்ப்பு இவரைத் தேடி வந்ததும், பத்திரிகையாளர்களிடம் படத்தைப் பற்றி இவர் பகிர்ந்தது. ''எனக்கு ரொம்ப நாளாவே பவர்பேக்டு ஆக்‌ஷன் படம் இயக்குணும்னு ஆசை இருந்தது. அந்தச் சமயத்துலதான் எனக்கு இந்தப் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. `இன்ஸீடியஸ்' படத்துடைய போஸ்ட் ப்ரொடக்‌ஷன் போயிட்டு இருக்கு. இந்த வேலை வந்ததால அதை விட்டுட்டு, இந்தப் படத்துடைய வேலைக்கு வந்துட்டேன். ஸ்க்ரிப்ட் கையில கிடைச்சதும் சில ஆக்‌ஷன் சீன்களைக் கொண்டு வரலாம்னு நினைச்சேன். எனக்கு ரொம்பவும் சவாலா இருக்கும்னு நினைச்சது, ஹெலிகாப்டர்ல இருந்து கார்கள் வரிசையா கீழே வர்றதுதான். ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாமே ஆகாயத்துலதான் வரும். என்னுடைய பெஸ்ட்டைக் கொடுப்பேன்'' என்று பதில் கூறினார். அவர் சொன்னது போலவே படம் ஆரம்பித்து முடியும் வரை எக்கச்சக்க பிரமிக்கவைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தன. படமும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது.

பிறந்தநாள் வாழ்த்துகள் ஜேம்ஸ் வான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!