Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"மீண்டும் ஆஸ்கர் வெல்லுமா டிஸ்னி... எதிர்பார்ப்புகளை உண்மையாக்குமா கோகோ ? #Oscars

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் திரைப்படப் பிரிவு அனிமேஷன். அவை வெறும் கார்ட்டூன் கதாபாத்திரங்களும் மாயாஜால உலகங்களும் மட்டுமே நிரம்பியவை அல்ல. அவை மற்ற திரைப்படங்களைப் போலவே சாகசங்கள் நிரம்பியவையாகவும், உணர்ச்சி பொங்குபவையாகவும் உலகம் முழுவதும் மக்கள் மனதில் நீங்காத இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு பலரது கைதட்டல்களைப் பெற்ற கோகோ, ஆஸ்கர் ரேஸில் டாப்.

ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டு வந்தாலும், ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படங்களுக்கான தனிப்பிரிவு 2001 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது; முதன்முதலாக அந்த விருதை ‘ஷ்ரெக்’ திரைப்படம் வென்றது.

2018 ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெறுவதற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள அனிமேஷன் திரைப்படங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

கோகோ:

’இந்த ஆண்டு ‘கோகோ’ தான் ஆஸ்கர் வெல்லும்’ எனப் பலரும் ஸ்டேடஸ் மழை பொழிந்துகொண்டிருக்கின்றனர். ‘கோகோ’வின் கதை மிகவும் சிம்பிளானது. மெக்ஸிகோ நகரத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறான் சிறுவன் மிகெய்ல். கடந்த சில தலைமுறைகளாக மிகெய்லின் குடும்பம் இசையை அறவே வெறுத்து ஒதுக்கி வருகிறது. ஆனால், மிகேய்லுக்கோ மிகப்பெரிய இசைக்கலைஞன் ஆக வேண்டும் என்பது கனவு. மெக்ஸிகோவின் மூதாதையர்களுக்காகக் கொண்டாடப்படும் நினைவு நாளில் மிகெய்ல் இறந்தவர்களின் உலகத்திற்கு சென்று விடுகிறான். அங்கு இருந்து வெளிவந்து தன் குடும்பத்தினரோடு மிகெய்ல் இணைந்தானா, அவனது இசைக் கனவு என்ன ஆனது என்பது மீதிக்கதை. படத்தில் வரும் பாட்டிம்மா கொள்ளை அழகு. மோனாவில் வரும் பாட்டிம்மாவுக்கு அடுத்தபடியான அழகு இவர். இவர் paapaa சொல்லும் அந்தக் கணம் ஏதோவொன்றை நம்முள் கடத்திவிடுகிறது.

 

 

டிஸ்னி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் பல விஷயங்களைப் பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கிறார்கள். ‘சிறந்த அனிமேஷன் திரைப்படம்’ மட்டுமல்லாமல், கோகோ திரைப்படத்தில் வரும் ‘ரிமெம்பர் மீ’ என்ற பாடலும் ‘சிறந்த பாடல்’ பிரிவில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.

அனிமேஷன் படங்களில் சில படங்கள் குழந்தைகளைத் தாண்டி, எல்லோரையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கும். நம்மை நெகிழ வைக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வந்த இன்சைட் அவுட் இதே போன்றதொரு மனநிலையைக் கொடுத்தது. படம் முடிந்ததும் உங்கள் மொபைலில் இன்னும் இருக்கும் மறைந்த உங்களின் தாத்தா பாட்டியின் நம்பரை ஒருமுறையாவது பார்ப்பீர்கள்.

கோகோ

 

தி பாஸ் பேபி:

தனது பெற்றோரின் மிகவும் பிரியத்திற்குரிய மகனாக வாழ்ந்து வருகிறான் ஏழு வயது டிம். அவனது அத்தனை மகிழ்ச்சியும் ஒரே நாளில் முடிவுக்கு வருகின்றது. காரணம், அவன் குடும்பத்திற்கு புதிதாக வந்து சேரும் குழந்தை. அப்பா-அம்மாவின் மொத்த கவனமும் அந்தக் குழந்தை மேலே இருக்க, டிம்மிற்கு அந்தக் குழந்தையைக் கண்டாலே பிடிக்காமல் போய் விடுகிறது. ஒரு நாள், அந்தக் குழந்தை ஒரு கம்பெனியின் 'பாஸ்’ என்பது தியோடருக்குத் தெரிய வருகிறது. குழந்தை உருவத்தில் ஒரு கம்பெனியின் பாஸ் எதற்காக டிம்மின் வீட்டிற்கு வர வேண்டும், எப்படிக் குழந்தை போல உருவத்தில் வாழ்வது அவர்களுக்குச் சாத்தியமாகிறது என ஃபேண்டஸி கலந்த ரகளை திரைப்படமாக இருந்தது ‘தி பாஸ் பேபி’.

’தி பாஸ் பேபி நல்ல திரைப்படம்தான். ஆனா, எப்படி ஆஸ்கர் வரைக்கும் வந்துச்சுனு தெரியலயே பாஸ்’ என நெட்டிசன்கள் பலர் இந்தத் திரைப்படத்தின் நாமினேஷனைக் கண்டு கடுப்பாகி வருகிறார்கள். ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்திற்கு நல்ல வணிகத்தைத் தந்த இந்தத் திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் சீரியலாக மாறவுள்ளது.

 

ஃபெர்டினாண்ட்:

சண்டைக்கு எப்போதும் 'நோ' சொல்லும் ஒரு காளை, எப்படி ஸ்பானிஷ் காளைச் சண்டையிலிருந்து தப்பிக்கிறது என்பதுதான்  ஃபெர்டினாண்ட் படம். 

சிறுவயதிலிருந்தே ஃபெர்டினாண்டுக்குச் சண்டையெல்லாம் பிடிக்காது. பூக்களை முகர்ந்து பார்ப்பது மட்டுமே தன் வாழ்நாளின் ஒரே லட்சியமாய் வாழும் ஓர் அற்புதக் கன்றுகுட்டி. ஆனால், அங்கிருக்கும் எல்லா காளைகளுக்கும் ஸ்பெய்ன் தலைநகர் மேட்ரிட்டில் நடக்கும் காளைச்சண்டையில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பம். இது பிடிக்காத ஃபெர்டினாண்ட் அதன் கூடாரத்திலிருந்து தப்பித்து நீனா என்னும் சிறுமியுடன் ஜாலியாகப் பூந்தோட்டத்தில் வாழ்ந்து வருகிறது. 

 

 

ஆண்டுகள் உருண்டோட, கன்றுக்குட்டி மெகாசைஸ் காளை ஆகிறது. ஆனாலும் பூக்களுக்குத் தண்ணீர் ஊற்றுவது, முகர்ந்து பார்ப்பது, நீனாவுடன் தூங்குவது எனத் தன் இயல்பிலிருந்து மாறாமல் வளர்ந்து வருகிறது. நீனாவும், அவளது தந்தையும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், பூக்கள் திருவிழாவுக்குத் திருட்டுத்தனமாய் ஃபெர்டினாண்ட் வர, அங்கு நடக்கும் அசம்பாவிதங்களால் மீண்டும் அதன் கூடாரத்தில் சிக்கிக்கொள்கிறது. 

மேட்ரிட்டில் தன் கடைசிப் போட்டியில் சிறந்த காளையை எதிர்க்க வேண்டும் என நினைக்கும் ஒரு மெட்டாடர் (காளைகளுடன் சண்டை போடுபவர்) அந்தக் கூடாரத்துக்கு வருகிறார். அதன் பிறகு நடப்பதெல்லாம் ஜாலிவாலா களேபரங்கள். 

இந்த ஆண்டு வெளியான அனிமேஷன் படங்களில் குழந்தைகளை அதிகம் மகிழ்விக்கப்போவது ஃபெர்டினாண்ட்தான். குதிரை ஆட்டம், முள்ளெலிகளின் குறும்பு, பயிற்சியாளர் ஆடு, கண் தெரியாத மாடு, முள்ளெலிகள் வாகனம் ஓட்டுவது, மிருகங்கள் அறுக்கப்படும் இடத்திலிருந்து தப்பிப்பது, இவை போக ஃபெர்டினாண்ட் அடிக்கும் லூட்டிகள் எனப் படம் முழுக்க அத்தனை காமெடிக்காட்சிகள். இறுதிக்காட்சியில் போட்டியைக் காண வந்த ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக, " அவன் வாழட்டும் " என ஃபெர்டினாண்டுக்காகக் குரல் கொடுப்பது கொஞ்சம் எமோஷனல். ஸ்பானிஷ் காளைச் சண்டைகளில், போட்டி முடிந்ததும் காளைகளைக் கொன்று விடுவார்கள் என்பது மரபு. மிருகங்கள் இறைச்சிக்காகவும், ஜல்லிக்கட்டு மாதிரியான காளைச் சண்டைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பதையும் எந்தவொரு சூழ்நிலையும் ' நீ நீயாக இரு' என்பதை வலியுறுத்துகிறது இத்திரைப்படம். WWE சண்டைப்போட்டிகளில் பலரது ஃபேவரைட்டான ஜான் சேனா ஃபெர்டினாண்ட் காளைக்குக் குரல் கொடுத்திருக்கிறார். 

1936-ம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் முன்ரோ லீஃப் எழுதிய தி ஸ்டோரி ஆஃப் ஃபெர்டினாண்ட் என்னும் படக்கதை புத்தகம் picture book ஐ மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது ஃபெர்டினாண்ட். மிக்கி மவுஸ் நாயகன் வால்ட் டிஸ்னி 1938ம் ஆண்டு இந்தக் கதையை வைத்து எடுத்த அனிமேஷன் திரைப்படம், ஆஸ்கர் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

படத்தில் சொல்லப்படும் அரசியல் குழந்தைகளை எப்படியும் பாதிக்கப்போவதில்லை என்பதால், இந்த ஃபெர்டினாண்ட் குழந்தைகளுக்கான ஸ்பெஷல். 

உலகம் முழுவதும் ஸ்பானிய காளைச்சண்டைக்கு எதிராக பரப்புரைகள் செய்யப்பட்டு வரும் சமயத்தில் இந்தத் திரைப்படம் வெளிவந்து விலங்குகள் நல ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

Oscars

தி ப்ரெட்வின்னர்:

ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதலால் பர்வானா என்ற பதினொரு வயதுச் சிறுமியின் தந்தை கடத்தப்படுகிறார். திறமையாகப் பல கதைகள் சொல்லும் பர்வானா தன் அப்பாவைத் தேடிச் செல்ல வேண்டும் என முடிவெடுக்கிறாள். ஆணாதிக்கம் நிரம்பிய ஆஃப்கான் சமூகத்தில் பையன் போல வேடமணிந்து அப்பாவைத் தேடி பயணத்தைத் தொடங்குகிறாள். பர்வானா அவளது அப்பாவைச் சந்தித்து, தன் குடும்பத்துடன் இணைந்தாளா என்பதே ’தி ப்ரெட்வின்னர்.’

2D அனிமேஷனில் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படம் ஆஃப்கானிஸ்தானில் நிகழும் வன்முறைகளையும், அந்தச் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தையும் வெளிபடுத்துவதாய் எடுக்கப்பட்டுள்ளது. கோகோவைத் தள்ளிவிட்டுவிட்டு, ஆஸ்கரை அள்ளிச்சென்றாலும் செல்லும் இந்த பிரெட் வின்னர். 

 

லவ்விங் வின்சென்ட்:

மற்ற அனிமேஷன் திரைப்படங்களைப் போல கம்ப்யூட்டரில் தயாரிக்கப்படாமல், ’லவ்விங் வின்சென்ட்’ முழுக்க முழுக்க கையால் வரையப்பட்ட ஆயில் பெயின்டிங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. 125 ஓவியர்கள் இணைந்து ஏறத்தாழ அறுபத்தைந்து ஆயிரம் ஃப்ரேம்கள் வரைந்து இந்தத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். வின்சென்ட் வான்கோவைப் பற்றிய இந்தப் படத்தின் ஃப்ரேம்கள் அனைத்தும் அவர் வரையும் ஸ்டைலிலேயே உருவாக்கப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு.

வின்சென்ட் வான்கோ உலகின் தலைசிறந்த ஓவியர்களுள் ஒருவர். அவர் தனது 37வது வயதில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து விடுகிறார். வான்கோவின் நண்பராக இருக்கும் போஸ்ட்மாஸ்டர் தனது மகன் ஆர்மண்டிடம் வான்கோ எழுதிய கடிதம் ஒன்றைக் கொடுத்து உரியவரிடம் சேர்த்து விடுமாறு கூறுகிறார். அந்தக் கடிதத்தை எடுத்துச் செல்லும் ஆர்மண்ட் வான்கோவின் மரணத்தைப் பற்றி விசாரிக்கிறார்.

’கம்ப்யூட்டர் அனிமேஷனால் இப்படி ஓர்  அற்புதமான திரைப்படத்தைக் கொண்டு வர முடியாது’ என இந்தத் திரைப்படத்தின் இயக்குநர்கள் அதன் தயாரிப்பைப் பற்றி புகழ்ந்து கூறியிருக்கின்றனர்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்