ஏன் #TheShapeOfWater மிஸ் பண்ணக் கூடாத சினிமா?! #Oscars | Do not miss the movie The Shape of Water

வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (02/03/2018)

கடைசி தொடர்பு:09:49 (03/03/2018)

ஏன் #TheShapeOfWater மிஸ் பண்ணக் கூடாத சினிமா?! #Oscars

ண்ணீருக்கு உருவம் உண்டா? இல்லை. ஆனால், அது எதில் இருக்கிறதோ அந்த உருவத்தை எடுத்துக்கொள்ளும் வல்லமை கொண்டது. குடுவை, சிறு குழி, குளம், கடல் - அளவுகளைப் பற்றி ஆராயாமல் பேரன்போடு எல்லாவற்றிலும் தன்னை நிறைத்துக்கொள்ளும். காதலும் அப்படித்தான். அன்பு யாரிடமிருந்து வெளிப்படுகிறதோ, அவர்கள் உருவத்தைப் பார்க்காமல், அவர்களின் உணர்வுகளை மட்டும் இனங்கண்டு, தன்னை வெளிப்படுத்தும். பிரதிபலிக்கும். 

The Shape of Water

கடவுளின் குழந்தையான எலிசாவிற்கு (Sally Hawkins) குரல் இல்லை. பேச்சு வராது. அவளுக்கு அது தேவையும் இல்லை. காரணம், அவள் சைகை மொழியிலேயே கவிதை எழுதும் திறன்படைத்தவள். அவளின் கழுத்தில் இருக்கும் மூன்று கீறல் வடுக்கள், அவளின் குழந்தைப் பருவச் சோகங்களை நமக்கு நொடியில் விளக்கி விடும். அவள் வீடு ஒரு பழைய திரையரங்கின் மேலே இருக்கிறது. அதே கட்டடத்தின் அருகில் இருக்கும் கைல்ஸ் (Richard Jenkins) என்ற கிழவர் ஓர் ஓவியர். அவளுக்குத் தந்தை போன்றவர். நல்ல நண்பர். எலிசாவுடன் வேலை பார்க்கும் செல்டா (Octavia Spencer) என்ற கறுப்பினப் பெண்மணிதான் அவளின் குரல். எலிசாவிற்கும் செல்டாவிற்கும் தொலைவில் பால்டிமோர் பகுதியில் இருக்கும் ஒரு ரகசிய அரசாங்க ஆய்வுக்கூடத்தில்தான் சுத்தம் செய்யும் ஜேனிட்டர் வேலை. அதுவும் இரவுப் பணி. 

அது 1962 ம் ஆண்டு. பனிப்போர் (Cold War) நடந்துகொண்டிருக்கும் காலகட்டம். அதாவது அமெரிக்காவும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட தருணம். பால்டிமோரில் இருக்கும் இந்த ஆய்வுக்கூடம் போல முக்கியமான இடங்களிலிருந்து ஒரு சிறிய தகவல் ரஷ்யாவிற்குக் கசிந்தாலும் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அடுக்கடுக்கான பாதுகாப்புகள் கொண்ட அந்தக் கூடத்தில், மலரவே கூடாத இடத்தில், மலரவே கூடாத விதத்தில் மலர்கிறது எலிசாவின் காதல். அது தானே காதல்!

The Shape of Water

தென்னமெரிக்காவின் கடல் பகுதியிலிருந்து ஒரு வினோத உயிரினத்தைப் பிடித்துக்கொண்டு அந்த ஆய்வுக்கூடத்திற்கு வருகிறார் கர்னல் ரிச்சர்ட் ஸ்ட்ரிக்லேண்ட் (Micheal Shannon). அது அமேசான் பழங்குடியினர் கடவுளாக வழிபட்ட உயிரினம். மனிதர்களைபோலவே இரண்டு கை, இரண்டு கால் மற்றும் கண்கள் கொண்டிருந்தாலும் பார்க்க பயமூட்டும் விதத்தில் இருக்கும். நீரில் மட்டுமே வாழும் பிராணி. அதை அந்த ஆய்வுக் கூடத்தில் அடைத்து வைத்து, ஆராய்ச்சிகள் செய்கின்றனர். 

அது எப்படிப்பட்ட தருணம் என்றால், ரஷ்யா, லைக்கா என்ற நாயை விண்வெளிக்கு அனுப்பிவிட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய இடத்தை அதன் மூலம் அது ஏற்கெனவே பிடித்து விட்டது. எனவே, அமெரிக்கா ஏதேனும் ஒன்றைச் செய்தாக வேண்டிய கட்டம் அது. இந்த மிருகம் அதற்கு உதவும் என்பது அவர்களின் நினைப்பு. அப்படிப்பட்ட மிருகத்துக்குப் பாசம் காட்டுகிறாள் எலிசா. மிகவும் புத்திசாலியான அந்த மிருகம் இவளின் சைகை மொழியை விரைவாகக் கற்றுக்கொள்கிறது. எலிசா அதன் மேல் காதல் கொள்கிறாள். உலகம் பார்த்திடாத வினோதமான காதல்களில் இடம் பிடிக்கும் முயற்சியுடன் வளரும் அந்தக் காதலுக்கு ஓர் ஆபத்து வருகிறது. அந்த உயிரினத்தின் மேல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் எதுவும் புலப்படாததால், அதை அறுத்து அதன் உடற்கூறுகளை ஆராயலாம் என்ற முடிவுக்கு அனைவரையும் கொண்டு வருகிறான் கர்னல் ரிச்சர்ட் ஸ்ட்ரிக்லேண்ட். எலிசா தன் காதலை காப்பாற்றிக் கொள்ள ஆய்வுக் கூடத்திலிருந்து அதைக் கடத்தி விடுகிறாள். அரசாங்கம் ஒரு புறம் துரத்த, நண்பர்கள் ஒரு புறம் உதவிக் கரம் நீட்ட, இருவரும் கரை சேர்ந்தார்களா என்பதை நெகிழ்ச்சி கலந்து பரபரப்பாகக் கூறியிருக்கிறார் இயக்குநர் கியார்மோ டெல் டோரோ (Guillermo del Toro).

The Shape of Water

படத்தில் எலிசாவிற்கு அடுத்து அதிகம் ஈர்ப்பது கிழவர் கைல்ஸ் கதாபாத்திரம்தான். "இது நான் பிறந்திருக்க வேண்டிய காலகட்டம் இல்லை. நான் கொஞ்சம் முன்னரே பிறந்திருக்க வேண்டும். அல்லது பின்னர் பிறந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்" என்று அவர் கூறும் வசனம் அவர் வாழ்க்கையின் சோகங்களை கண்முன் நிறுத்துகிறது. ஓவியங்களுக்குப் பதில் புகைப்படங்களை விளம்பர நிறுவனங்கள் பயன்படுத்த தொடங்க, ஓர் ஓவியராக அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது, சமபால் ஈர்ப்பாளராக காதலை வெளிக்காட்டி அவமானப்படுவது என நம்மைக் கலங்கடிக்கிறார். அவருக்கு அடுத்து செல்டாவாக அதகளம் செய்திருக்கிறார் அக்டேவியா ஸ்பென்சர். தோழியின் குரலாக, அவளுக்கு ஆதரவாக அவர் செய்யும் காரியங்கள் அனைத்தும் கைதட்டல் ரகம். முதலாளி உட்பட அனைத்து எதிர்ப்புகளையும் லெஃப்ட்டில் டீல் செய்யும் அவரின் கதாபாத்திரம் அட்டகாசம்.

குரலற்ற எலிசாவாக தோன்றும் சேலி ஹாக்கின்ஸ் சைகை மொழியில் பேசும் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம். "அவன் (அந்த உயிரினம்) என்னைப் பார்க்கும் போது... அவன் என்னைப் பார்க்கும் விதம்... அவனுக்குத் தெரியவில்லை, என்னிடம் என்ன குறை இருக்கிறது என்று! அல்லது... நான் எப்படி ஒரு முழுமையற்றவள் என்பது அவனுக்குப் புரியவில்லை. நான் எப்படியோ என்னை அப்படியே அவன் ஏற்றுக்கொள்கிறான்" என கைல்ஸிடம் நெகிழும் போதும், "அது மனிதன் இல்லை!" என்று அதைக் காப்பாற்ற கைல்ஸ் மறுக்கும் போது, "அதை காப்பாற்றவில்லை என்றால் நாமும் மனிதன் இல்லை!" என்று பதிலடி கொடுக்கும் போதும் நடிப்பில் மிளிர்கிறார். அந்த உயிரினத்தை வீட்டில் வைத்துவிட்டு அடுத்த நாள் செல்டா அவளிடம் கேட்கும் கேள்விகளும், அதற்கு எலிசா கொடுக்கும் அப்பாவித்தன ரியாக்ஷன்களும்.. ம்ம்ம்! 

தி ஷேப் ஆஃப் வாட்டர்

கொடூர வில்லனாக, கர்னல் ரிச்சர்ட் ஸ்ட்ரிக்லேண்ட்டாக வரும் மைக்கேல் ஷாநேன், வழக்கம் போல பயமுறுத்துகிறார். சீழ் பிடித்த விரல்களைப் பிய்த்து எறிவது, தன் துரோகியின் குண்டடி பட்ட கன்னத்துக்குள் விரலை வைத்து அழுத்தி பதில் வாங்குவது, அந்த மிருகத்தின் கதறலை வீட்டில் நடக்கும் நிகழ்வுடன் ஒப்பிடுவது, தன் மேலதிகாரியின் கோபத்துக்கு ஆளானபின்பு, அந்த உயிரினத்தை தேடி அதிரடியாகக் களமிறங்குவது என டெரர் கிளப்பியிருக்கிறார். கைல்ஸ் சொல்வது போலப் படத்தின் நிஜ மான்ஸ்டர் அவர்தான். இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம், ஒன்றும் செய்யாமலே அப்ளாஸ் அள்ளுகிறது ரிச்சர்டின் கார்.

இயக்குநர் Guillermo del Toro ஒரு மாயாவி. மதிப்பளிக்க வேண்டிய உணர்வுகளை, செய்ய வேண்டிய காரியங்களை, கற்பிக்கப்பட வேண்டிய நீதியை, மனிதர்கள் அல்லாத உயிர்களைக் கொண்டு நமக்குப் புரியவைத்து விடுவார். அவரின் பெரும்பாலான படங்களில் மெல்லிய அளவிலேனும் ஒரு ஃபேன்டஸி இழை நீண்டு கொண்டே இருக்கும். அதில் வரும் ஃபேன்டஸி கதபாத்திரத்திற்காக நம்மை ஏங்க வைப்பார். அதற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் நமக்கும் பதைபதைப்பு தொற்றிக் கொள்ளும். இந்த 'தி ஷேப் ஆஃப் வாட்டர்' படம், அவரின் முந்தைய படங்களான 'தி டெவில்'ஸ் பேக்போன் (The Devil's Backbone) மற்றும் பேன்'ஸ் லேபிரிந்த் (Pan's Labyrinth) படங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாய் இருக்கிறது. மூன்றுமே போர் நிகழும் காலகட்டத்தில் நடக்கிறது என்பதைத் தாண்டி, இவை அனைத்தும் குழந்தைகளுக்குக் கூறப்படும் மாயாஜாலக் கதைகள் (Fairy Tales) போன்றவை. ஆனால், இந்த மூன்றிலும் அவர் பாடம் எடுப்பது குழந்தைகளுக்கு அல்ல, வளர்ந்தும் முதிர்ச்சி அடையாத மனிதர்களுக்கு! 

 

இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகளில் 13 விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது தி ஷேப் ஆஃப் வாட்டர். அவற்றுள் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை ஆகிய மூன்றுக்கும் தி ஷேப் ஆஃப் வாட்டர் தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ். 

உங்களுக்கு நிகழும் எல்லா விஷயங்களுக்கும் ஏதோவொரு தேவை, காரணம் இருக்கும் என என்றாவது யூகித்து இருக்கிறீர்களா? எலிசாவின் கழுத்தில் இருக்கும் கீறல் வடுக்களுக்கான தேவையை இறுதிக்காட்சியில் உணர்த்தி, அன்பு முத்தமிடுகிறார் இயக்குநர் கியார்மோ!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்