Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸ்கர் பட்டியலில் இரண்டாம் உலகப்போர் சொல்லும் இரு படங்கள்.. இரு பார்வை! #Dunkirk #DarkestHour

இரண்டாம் உலகப் போரால் நிகழ்ந்த ஒரே நன்மை இலக்கியத்துக்கும், சினிமாத்துறைக்கும்தான். எண்ணற்ற படங்களும், சிறுகதைகளும், நாவல்களும் கடந்த அறுபது ஆண்டுகளில் பல மொழிகளிலிருந்தும் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டு ஆஸ்கரில் நான்கு விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் நெட்ஃபிலிக்ஸ் தயாரித்த மட்பவுண்ட் இரண்டாம் உலகப்போரை மையப்படுத்திய புனைவு என்றால், டன்கிர்க்கும் , டார்க்கெஸ்ட் ஹவுரும் இரண்டாம் உலகப்போரின் முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தியது.

டார்க்கெஸ்ட் ஹவர்

Darkest Hour

ஜூலையில் வெளியான டன்கிர்க் , டன்கிர்க்கில் இருக்கும் போர் வீரர்களின் வெளியேற்றம் என்றால், சில மாதங்கள் கழித்து வெளியான டார்க்கெஸ்ட் ஹவர் கிட்டத்தட்ட அதன் ப்ரீக்குவல் prequel . வின்சென்ட் சர்ச்சில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலைகளை விவரிக்கிறது டார்க்கெஸ்ட் ஹவர்.  டார்க்கெஸ்ட் ஹவரின் கடைசிக் காட்சி,  வின்சென்ட் சர்ச்சில் தனது உலகப்புகழ் பெற்ற உரையை நிகழ்த்த, மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் குட்டி குட்டி படகில் கூட, டன்கிர்க்கில் இருக்கும் வீரர்களை மீட்க செல்வார்கள். இதுதான் டன்கிர்க் படத்தின் முதல் காட்சியும் கிட்டத்தட்ட இதேதான். ஆஸ்கரில் ஆறு விருதுகளுக்குப் படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், தொலைக்காட்சி தொடராக வரும் க்ரௌன் அளவுக்குக்கூட அதில் ஒரு சுவாரஸ்யமும் இல்லை. நாயகன் கேரி ஓல்ட்மேன் மட்டும் வெறித்தனமாக சர்ச்சிலாக நடித்திருந்தார். சிறந்த திரைப்பட லிஸ்ட்டில் இருக்கும் பிற படங்களுடன் ஒப்பிடுகையில் டார்க்கெஸ்ட் ஹவர் அவ்வளவு சிறப்பானதாகத் தோன்றவில்லை. அதிலும் அந்த ரயில் காட்சி , எமோஷனலாக இருந்தாலும், அதுவொரு கற்பனைக் காட்சி என்பதால் அதுவும் அடப்போங்கப்பா மோடில்தான் கடந்து செல்ல தோன்றுகிறது. 

Darkest Hour

 

சர்ச்சிலின் செக்ரட்டரியாக வரும் எலிசபெத் லேடனின் முதல் காட்சி மட்டும்தான் அவ்வளவு ஸ்பெஷல். முழுவதும் இருட்டாக இருக்கும் அந்தக் காட்சியில், கேரி ஓல்ட்மேன் (வின்சென்ட் சர்ச்சில்) தன் சுருட்டைப் பற்ற வைக்க, அந்த அறையில் சிவப்பு ஒளியில் வின்சென்ட் சர்ச்சிலின் முகம் தெரியும். அந்த ஒரு காட்சிக்கு வேண்டுமானால் டார்க்கெஸ்ட் ஹவரை பார்க்கலாம்.  
சற்றும் எதிர்பார்ப்பில்லாமல் வெளியான டார்க்கெஸ்ட் ஹவரின் லட்சணம் இப்படியென்றால், டன்கிர்க் இன்னும் மோசம்.


டன்கிர்க்

Dunkirk

ஒரு படம் அதன் போஸ்டர், டீசர், டிரெய்லர் என எல்லாவற்றிலும் ஒரு ரசிகனை ஆச்சர்யமடையச் செய்ய முடியுமா? இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் என்றால் முடியும். இந்த முறை நோலன் கையில் எடுத்திருப்பது, உலக சினிமா வரலாற்றில், அதிக முறை படமாக்கப்பட்ட ஒன்று. 

Dunkirk

நோலனின் மிகச்சிறந்த படம் என்னும் அடைமொழி பெற்றிருக்கும் டன்கிர்க் படத்தின் விமர்சனத்திற்கு முன், படத்தின் இசை பற்றி சொல்லியாக வேண்டும். முதல் ஃபிரேமிலிருந்து, ஓர் இசை உங்களைப் பதற்றத்தில் வைக்க முடியுமா? முடியும் என்கிறார் ஹான்ஸ் ஜிம்மர். ஒவ்வொரு காட்சியையும் பல மடங்கு உயர்த்துகிறது ஜிம்மரின் இசை. கண்களை மூடி, அதைக் கேட்டால் நம்மை ஏதோ ஒரு பீதியில் ஆழ்த்துகிறது. விமானத்திலிருந்து குண்டுகள் விழும்போதும் சரி... துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு தப்பிப் பிழைக்கும் போதும் சரி.. இசை எல்லாவற்றையும் கடந்து அசரடிக்கிறது. 

டன்கிர்க் கடற்கரையில் இருக்கும் மோலிலிருந்து தப்பிக்க பல லட்சம் வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றொருபுறம் , இவர்களைக் காப்பாற்ற டாசன் என்பவர் தன் மகனுடன் படகில் வருகிறார். இன்னொரு புறம், வானில் ஹெலிகாப்டரில் எதிரிகளின் படையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறது ஒரு குழு. ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு, அதில் தன்னால் முயன்றளவு புனைவுகளின் மூலம் வரலாறு கெடாமல், சுவாரஸ்யத்தைக் கூட்ட முயற்சி செய்திருக்கிறார். 
மார்க் ரைலேன்ஸ் (டாசன்), சிலியன் மர்ஃபி (படகில் நடுங்கிக் கொண்டு இருப்பவர்), டாம் ஹார்டி (விமான வீரன்) என முன்னணி நடிகர்கள் சிலர் இருந்தாலும், படம் 20 வயது புதுமுக நடிகரான ஃபியோன் வொயிட்ஹெட்டைத்தான் (டாம்மி) முன்னணி கதாபாத்திரமாகக் கொண்டுள்ளது. முதல் காட்சியில், தன்னுடன் இருக்கும் அனைவரையும், ஒரு குழு சுட்டுவிட, அங்கு இருந்து தப்பித்து கடற்கரைக்கு வருகிறான் டாம்மி. படத்தின் இறுதியில், எண்ணெய்க்குவியலுக்கு நடுவே உயிர்ப்பிழைத்து வெளியே வரும் வரை, அவர் முகத்தில் இருக்கும் அந்த அப்பாவிக் களையும், பீதியும் மாறவில்லை.

Dunkirk

படத்தில் வரும் வசனங்கள் மிகக்குறைவு. "பார்த்துப்போங்க, அங்க ஒருத்தன படுக்க வச்சு இருக்கோம்", " தம்பி, அந்தப் பையன் செத்துட்டான்", " அதனால் என்ன, பார்த்துப் போங்க’’ என டாசனின் மகன் சொல்லும் அந்த வசனம் போர் சூழலில் உடல்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பறைசாற்றுகிறது. 

வானில் நிகழும் காட்சிகளில், ஸ்குவாட்ரன் லீடர் சில நிமிடங்களிலேயே வீழ, முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்கிறான் ஃபேரியர் (டாம் ஹார்டி). இறுதிவரை சண்டையிட்டு, நண்பனைக் காப்பாற்றி, வீரர்களைக் காப்பாற்றிவிட்டோம் என்ற நிலையில் எதிரி கேம்ப்பிற்கு செல்லும் கதாபாத்திரத்தில் டாம் ஹார்டி செம்ம. படம் முழுக்க ஜெர்மன் என்ற பெயரைக்கூட சொல்லாமல், enemy என்றே சொல்வது (படகில் வரும் ஒரு சண்டையைத் தவிர). இறுதியில் வின்சென்ட் சர்ச்சில் பேசியதாய் வாசிக்கப்படும் பத்திரிகை செய்தியில் கூட enemy தான். 

சில த்ரில் காட்சிகள், பல அசரடிக்கும் இசை, சிற்சில 'வாவ்' மொமன்ட்டுகள் எனப் படம் இருந்தாலும், மொத்தமாய் பெரிய ஓர் அனுபவத்தை படம் தர மறுக்கிறது. இவ்வளவு இருந்தாலும், படத்தில் ஏதோவொன்று பெரிதாகக் குறைகிறது. புரியாமல் இருப்பதுதான் நோலன் படங்களில் ஸ்பெஷல் என்றான பின், இவ்வளவு தட்டையான ஒரு கதையை எடுக்க நோலன் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்லை. போரும் போர் சார்ந்த மனிதர்களின் உணர்வுகளுமே களம் என்றால் ரோமன் பொலான்ஸ்கியின் தி பியானிஸ்ட் the pianist, ராபெர்ட்டோ பெனிங்னியின் லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் life is beautiful போன்ற பல படங்கள் இதைவிட சிறப்பானவை. கடந்த ஆண்டு வெளியான ஹேக்சா ரிட்ஜ், 2016 ம் ஆண்டு ஆஸ்கர் வென்ற ‛சன் ஆஃப் சால்’ என எண்ணற்ற படங்கள் இதைவிட சிறப்பானவை. ஒரு குறிப்பிட்ட காட்சியின் இரண்டு கோணங்கள்தான் டன்கிர்க் ஸ்பெஷல் என்றால் அது ஒன்றும் புதிதில்லை. ஈரானிய சினிமாவான ஃபிஷ் அண்ட் கேட்ஸ் Fish and cats போன்ற பரிசோதனை முயற்சி சினிமாக்களில் கூட இவற்றை காண முடிந்தது. 

Dunkirk 4

படத்தின் மேக்கிங் சிறப்பாக இருக்கிறது; வரலாற்றுப் பிழை எதுவுமில்லை, வானை பெரிதாகக் காட்டியிருக்கிறார்கள் (உபயம் ஐமேக்ஸ்) எனச் சொல்வதெல்லாம் நோலனின் அடிப்படைத் தகுதிகளாக இன்செப்ஷன் காலத்திலேயே எழுதப்பட்டுவிட்டது. நோலனின் இரட்டைக் குடியுரிமையைப் போலவே. இங்கிலாந்து அமெரிக்காவின் புகழைப் பேசும் இந்தப் படத்தை நோலனின் பெஸ்ட் என அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் ஊடகங்கள் கோரஸாக சொல்கிறார்கள். டாம் ஹேன்க்ஸ் நடித்த சல்லிக்கும் இதே நிலைதான். ஆனால், ஃபாலோயிங், மெமென்டோ என தன் சினிமா வாழ்க்கையின் ஆரம்பம் முதலே அசத்திய ஒரு மிகப்பெரிய இயக்குநரின் சராசரி முயற்சிதான் இந்த டன்கிர்க். ஒவ்வொரு படத்திலும் பல்வேறு அடுக்குகள், நிலைகள், கோணங்கள், குறியீடுகள் என அசத்தும் ஒரு மனிதனிடமிருந்து ஒரு ரசிகனின் எதிர்ப்பார்ப்பு எப்போதும் மிக அதிகம். இதை நோலனின் பெஸ்ட் என எல்லோரும் சொல்வதால், நாமும் சொல்வது அந்தப் படைப்பாளியைச் சிறுமைப்படுத்துவது போலாகிவிடும். 

எட்டு விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது டன்கிர்க். இசை சம்பந்தப்பட்ட விருதுகளைத் தவிர பிற விருதுகளை டன்கிர்க் வெல்வது கேள்விக்குறியே, ஆஸ்கர் எப்படியும் தேசப்பற்றை பெருமைப்படுத்தும் பேர்வழிகள் இல்லை என்பதால், இதுதான் முடிவாக இருக்கும். சிறந்த படமாக தி ஷேப் ஆஃப் வாட்டர், த்ரீ பில் போர்ட்ஸ் போன்ற படங்கள்தான் வாங்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்