சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், ஒளிப்பதிவு - பிளேட் ரன்னர் 2049 #Oscars | Blade Runner bags the best visual effects and cinematography award

வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (05/03/2018)

கடைசி தொடர்பு:09:45 (05/03/2018)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், ஒளிப்பதிவு - பிளேட் ரன்னர் 2049 #Oscars

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதைப் பெற்று இருக்கிறது பிளேட் ரன்னர் 2049. 2016-ம் ஆண்டு வெளியாகி பலரது பாராட்டைப் பெற்ற `அரைவல்' படத்தின் இயக்குநர் டெனிஸ் வெல்லிநியூ இப்படத்தை இயக்கியிருக்கிறார். 2049 என்பதற்காகப் பறக்கும் தட்டு, கடிக்கும் ரோபோ, காமெடி கிராபிக்ஸ் என எந்த க்ளிஷேவும் இல்லாத படத்தைத் தந்திருப்பதற்காகவே டெனிஸுக்கு ஒரு விர்ச்சுவல் பூங்கொத்து. 

இருள், பனி, புழுதி, புயல் என நகரும் காட்சிகளுக்கு, அதன் அடர்த்தியைப் பன்மடங்கு கூட்டுகிறது ஹான்ஸ் ஜிம்மரின் இசை. படத்தில் வரும் ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு அழகு. வேலேஸ் இருக்கும் இடத்தில் நிகழும் காட்சிகள்; ஹாரிசன் ஃபோர்டும் ரியான் கோஸ்லிங்கும் அமர்ந்திருக்கும் இருக்கும் காட்சி; ரியானும், அவனது AI ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் காதலியும் மழை நாள் இரவு ஒன்றில் காதலிப்பது ( அந்த காட்சி செம! )  எனப் பல காட்சிகளை அட்டகாசமாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரோஜர் டீகின்ஸ். 

படத்தில் வரும் விர்ச்சுவல் காதலியான ana de armas முதல் பல காட்சிகள் விர்ச்சுவல் விஷுவல் ட்ரீட். முதல் பாகத்திற்கு பல்வேறு வெர்ஷன்கள் வந்ததாலோ என்னவோ, திரையில் மக்கள் காணும் வெர்ஷன்தான் என்னுடையது என்பதை முதலிலேயே சொல்லிவிட்டார் இயக்குநர் டெனிஸ். இன்னும் சினிமாவை, அதன் கலையாக்கத்துடன் எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கும் அமெரிக்க இயக்குநர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் ரிச்சர்டு லிங்க்லேட்டர், மற்றொருவர் டெனிஸ். `அரைவலி'ல் ஏலியன் சினிமாக்களின் டெம்ப்ளேட் விஷயங்களைத் தகர்த்தெறிந்தவர், இம்முறை சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களை ஸ்லோவான திரைக்கதை ட்ரீட்மென்டிலேயே எடுக்கலாம் என நிரூபித்து இருக்கிறார். 

Blade Runner

படத்தின் நாயகன் 'K' வாக வரும் ரியான் கோஸ்லிங், படம் நெடுகிலும் அட்டகாசமாக நடித்திருக்கிறார். தான் ஒரு மனிதனா இல்லை ரெப்லிகன்ட்டா எனும் குழப்பத்திலே இறுதிவரை இருப்பது; கற்பனைக் காதலியுடன் அவர் பேசுவது; தன் மூத்த அதிகாரி 'லவ்'விடம் அவர் பேசும் மேனரிஸம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முகபாவனைகள். `மரணம் என்பது ஒரு பழுத்த இலையின் உதிர்தல்போல் இருக்க வேண்டும்' என எங்கேயோ படித்த ஞாபகம். படத்தில் வரும் இறுதிக்காட்சி அத்தகைய ஒன்று. 

Richard R. Hoover,  Paul Lambert, Gerd Nefzer, and John Nelson ரிச்சர்டு ஹூவர், பால் லேம்பெர்ட் , கெர்ட் நெஃசெர், ஜான் நெல்சன் நால்வரும் பிளேட் ரன்னர் படத்துக்கான சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதினைப் பெற்றனர். 

 

Visual Effects

ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகாக்கி, மூன்று மணி நேர படத்தைப் பார்வையாளனுக்குள் கடத்திய ஒளிப்பதிவாளர் ரோஜர் டீகின்ஸ் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றார். 1994-ம் ஆண்டு The Shawshank Redemption படத்துக்காக முதல் முறையாக ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் ரோஜர். பிளேட் ரன்னர் 2049 அவரது 14-வது பரிந்துரை. அதிசயங்கள் அரிதாகத்தான் நிகழும். முதல் முறையாக ஆஸ்கர் வென்றிருக்கிறார் 68 வயதான ரோஜர் டீகின்ஸ். 

Best cinematography


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close