இந்தப் படங்களை எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்களா 90'ஸ் கிட்ஸ்..!

ஸ்மார்ட் ஃபோன், வீடியோ கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன் என இன்றைய காலகட்ட குழந்தைகளின் உலகை கலர் ஃபுல்லாக வைத்திருக்க ஏராளமான அம்சங்கள் காத்திருக்கின்றன. ஆனால் 90’ஸ் கிட்ஸ்களின் காலம் அப்படியல்ல. அவர்களை அரவணைக்கும் ஒரே இடம் கார்ட்டூன் சேனல்களே. அப்போது எல்லாம் `ஜெடிக்ஸ்’ என்று ஒரு சேனல் ஒளிபரப்பாகும். இன்று அப்படி ஒரு சேனலே கிடையாது. ஞாயிற்று கிழமையானால் அதில் ஒளிபரப்பாகும் அந்த ஒற்றை குழந்தைகளுக்கான படத்திற்காக வாரம் முழுவதும் காத்திருக்கும் அந்த நாள்கள் இனிமையானவை. அதில் நம்மைக் கவர்ந்த படங்களின் ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் இதோ.

ஃபைண்டிங் நீமோ (Finding nemo):

90'ஸ் கிட்ஸ், ஃபைண்டிங் நீமோ

பெயரைக் கேட்டதும் குழந்தைகள் உலகுக்கே சென்று விட்டீர்களா. குழந்தைகளின் ஆல்டைம் ஃபேவரைட்டாகத்தான் இந்த நீமோ இருந்து கொண்டிருக்கிறான். காயத்துடன் பிறந்த தன் மகன் நீமோவை ஸ்கூபா டைவர்கள் பிடித்துச் சென்று விட, அவர்கள் விட்டுச் சென்ற ஒரு கண்ணாடியின் உதவியுடன் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கச் செல்லும் மார்லின் என்ற தந்தையின் பாசப் போராட்டம்தான் கதை. வழியின் டோரி என்ற ஒரு நண்பியும் கிடைக்க, அவளுடன் செல்லும் பயணத்தில் பல கடல்வாழ் உயிரினங்களின் உதவியுடன் மகன் நீமோவை மீட்பார் மார்லின். பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க வால்ட் டிஸ்னி வெளியீட்டில் வெளியானது இப்படம்.

ஃப்ளப்பர் (Flubber):

ஃப்ளப்பர்

வாலட் டிஸ்னி பிக்சர்ஸ் மற்றும் கிரேட் ஓக்ஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் வெளியான இப்படம் குழந்தைகளின் ஃபேவரைட் சயின்ஸ் ஃபிக்ஷன் வகை படங்களில் நீங்கா இடம்பெற்றது. மூடப்போகும் நிலையில் இருக்கும் தன் கல்லூரியைக் காப்பாற்ற ஃபிலிப் ப்ரெய்னார்ட், ஒரு புதிய எனர்ஜி சோர்ஸ் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒரு பச்சை நிற உயிருள்ள பொருள் ஒன்று உருவாகின்றது. அந்தப் பொருளைப் பற்றி அறிந்து அதை திருட முயற்சி செய்யும் கும்பலிடமிருந்து அதைக் காப்பாற்றி தன் காதலி லாராவுடன் இணைந்து கல்லூரியை மீட்பார் ஃபிலிப். படம் முடிந்த பின் நம்மிடமும் ஒரு ஃபிளப்பர் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தவர்களுள் நானும் ஒருவன்.

மான்ஸ்டர்ஸ் இன்கார்ப்பரேடட் (Monsters,Inc.):

மான்ஸ்டர்ஸ் இன்கார்ப்பரேடட்

குழந்தைகளை அழவைத்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் விநோத மான்ஸ்டர் உலகம். குழந்தைகள் மான்ஸ்டர்களுக்குத் தீங்கானவர்கள் என்ற மனநிலையில் இருக்கும் அந்த உலகில் ஒரு குழந்தை நுழைந்துவிட முதலில் அதனைக்கண்டு பயப்படும் மான்ஸ்டர் உலக கதாநாயகன் சுல்லி சல்லிவன் மற்றும் மைக் வசௌஸ்கீ, பின்னர் குழந்தைகளால் தீங்கில்லை, அவர்கள் பயத்தை விட அவர்களை சந்தோஷப்படுத்தி அதிக மின்சாரம் தயாரிக்கலாம் என முடியும் கதையால் நம்மை நெகிழ்ச்சிப்படுத்தியிருப்பார்கள்.

ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள் (George of the jungle):

ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள்

ஒரு விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, பேசும் குரங்குகளாலும் காட்டு விலங்குகளாலும் வளர்க்கப்படும் ஒரு குழந்தை. காட்டுக்கு ட்ரெக்கிங் வரும் ஒரு குழுவினரால் ஜார்ஜ் பாதிக்கப்பட அவனை தாங்கள் வாழும் இடத்துக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்கும் போது அவனின் சேட்டைகளால் அவன் மீது காதல் கொள்ளுகிறாள் நாயகி உர்சுலா. பின் அவனுடம் சேர்ந்து காட்டில் வாழ தொடங்குகிறாள். ஜூனியர் ஜார்ஜின் என்ட்ரியுடன் முடியும் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்து கார்டூனிலும் கலக்கிய காம்போ இது.

ஸ்கை ஹை (Sky high):

ஸ்கை ஹை

குழந்தைகளுக்கான சூப்பர் ஹீரோ பட வரிசையில் `ஸ்கை ஹை’ தான் நம்பர் ஒன். சூப்பர் பவர் கொண்ட மாணவர்களுக்கென ஆகாயத்தில் பிரத்யேகமாக இயங்கும் சூப்பர் ஹீரோ பள்ளி. அதில் நம் கதாநாயகன் வில் ஸ்ட்ராங்ஹோல்டுவை வைத்து அவன் தந்தையைப் பழிதீர்க்க நினைக்கும் வில்லியை எப்படிச் சமாளிக்கிறார்கள் நம் ஹீரோவும் சூப்பர் பவர் கொண்ட நம் ஹீரோ நண்பர்களும் என்பதே கதை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!