Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்கர்களின் ஆதிக்கத்துக்கு நடுவே உதித்த ஆசியன், அதிசயன்! ஜாக்கி சான் பிறந்த தின சிறப்பு பகிர்வு

விவரம் தெரிந்தபின் ஹாலிவுட் ஹீரோக்களில் ஒரு சிலர் மட்டுமே நமக்குப் பரிட்சயமான, மனசுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். அந்த ஒரு சிலருள் முக்கியமானவர் நம் ஜாக்கி சான். இவரின் சண்டைக் காட்சிகளைப் பார்த்து ரசித்து மகிழாதவர்களே இருக்கமுடியாது. அதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் விதிவிலக்கல்ல.

சண்டைக் காட்சிகள் மட்டுமல்லாமல் இவர் செய்யும் நகைச்சுவை சேட்டைகளுக்கு ரசிகர்கள் பலரும் அடிமைகள் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட ஹீரோவுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றிய ஒரு சிறப்புப் பகிர்வு. 

ஜாக்கி சான்

தாய் மொழி சினிமாவுக்குப் பிறகு நம் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பது ஹாலிவுட் சினிமா என்றால் அது மிகையல்ல. ஹாலிவுட்டில் திறமையான பல நடிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர்களின் ஆதிக்கமே அங்கு அதிகம். அந்த ஆதிக்கத்துக்கு நடுவேதான் ஆசிய நாடான ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவர் ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார். அவர்தான் ஜாக்கி சான்.

தற்காப்புக் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை தன் சிறு வயதிலேயே பழகியிருந்தார் சான். அதற்குக் காரணம் அவருடைய பள்ளிப் பருவம். மற்ற மாணவர்களிலிருந்து தனித்துத் தெரியவும் தனிமையில் தவிக்கும் நேரத்தைக் கழிக்கவும் குங்ஃபூவை பயிலத் தொடங்கினார். தனித்துத் தெரியவேண்டும் என்ற இவரின் எண்ணத்துக்குப் பின்னால் பல இன்னல்கள், சோதனைகள் உள்ளன. 

இவரின் பள்ளிப்பருவம் பாதி நரகமாகக் கடந்திருக்கிறது. காரணம் பள்ளியில் அப்படிப்பட்ட கண்டிப்பு. தற்காப்புக் கலையில் மட்டும் சிறந்து விளங்கிய ஜாக்கிக்குப் படிப்பு என்றால் அவ்வளவு அலர்ஜி. அதற்காகப் பலரிடம் அடியும் வாங்கியிருக்கிறார். மற்ற மாணவர்களுக்கு ஜாக்கிதான் ஜாலிகேலி என்டர்டெயின்மென்ட். ஆனால், அவர்கள் கேலி, கிண்டல் மன ரீதியாகவும் ஜாக்கியைத் துன்புருத்தியிருக்கிறார்கள்.

ஆனால் தன் கோபத்தை எந்தத் தருணத்திலும் வெளிக்காட்டாத ஜாக்கி, குங்ஃபூவில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார். விளையாட்டாக ஆரம்பித்த கலையுணர்வு காலப்போக்கில் அவரின் அடையாளமாகவே மாறிவிட்டது. பின்னாள்களில் அது அவரது சினிமாப் பாதைக்கும் கை கொடுத்தது.

ப்ரூஸ் லீ, ஜெட் லீ போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனித்துத் தெரிய குங்ஃபூ என்ற கலையை வேறுவிதமாகப் பயன்படுத்தியவர் ஜாக்கி. குங்ஃபூவை ஆக்ரோஷ சண்டைக் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த மற்ற நடிகர்களுக்கு மத்தியில் காமெடிக்காகப் பயன்படுத்தினார். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் வலியும் மெனக்கெடல்களும் ஏராளம். வடிவேலு பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அது வலி, வேறு டிபார்ட்மென்ட். 

ஒரு வழியாகப் பள்ளிப் படிப்பை முடித்த ஜாக்கி, ப்ரூஸ் லீ படங்களில் ஸ்டன்ட் மேனாக சேர்ந்தார். ப்ரூஸ் லீயிடம் அடிவாங்குவது அவ்வளவு லேசுபட்ட காரியம் கிடையாது. ப்ரூஸ் லீயின் வித்தைகளில் மயங்கிய ஜாக்கிக்கு சினிமாவில் நுழைய வேண்டும் என்கிற ஆசையும் முளைத்தது. அப்படிச் சின்னச்சின்ன படங்களில் பல வெற்றிகளைக் கொடுத்த ஜாக்கியை ப்ரூஸ் லீயின் இறப்புக்குப் பின் `அடுத்த ப்ரூஸ் லீ’ என்று அழைத்து மகிழ்ந்தனர் மக்கள்.

அங்கீகாரமும், வெற்றிக்கான அடையாளமும் வெறும் வார்த்தைகளில் இருந்தால் மட்டும் போதுமா? பலருக்கும் சிம்மசொப்பனமாக இருக்கும் ஆஸ்கர் ஆசை ஜாக்கிக்கும் வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் சில்வஸ்டர் ஸ்டாலனின் வீட்டுக்குச் சென்ற ஜாக்கிக்கு, அங்கிருக்கும் ஆஸ்கர் டிராஃபியைப் பார்த்ததும் தானும் அதைக் கையில் ஏந்த வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அந்த ஆசை 2016-ல் நிறைவேறியது. 

ஜாக்கி சான்

பார்ப்பவர்களை மகிழ்விக்க துணிச்சல் நிறைந்த பல சாகசங்களையும் கையாளத் தொடங்கினார் ஜாக்கி. அதனால் தன் உடல் எலும்புகளை அடிக்கடி முறித்துக்கொள்வதைப் பொழுதுபோக்காகக் கொண்டார். சண்டைக் காட்சி ஒன்றில் 40 அடிக்கும் மேலிருந்து எதிர்பாராவிதமாக  கீழே விழுந்த ஜாக்கியின் தலைப் பகுதியில் எழும்பு முறிந்து, காதுகளில் ரத்தம் வடிந்தபடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சையின் முடிவில் இந்த சாகசக்காரனின் வலது காதின் கேட்கும் திறன் குறைந்துவிட்டது என்றனர் மருத்துவர்கள்.

சின்னச்சின்ன சண்டைக் காட்சிகளுக்குக்கூட டூப் போடும் நடிகர்களுக்கு மத்தியில், தானே அனைத்து ஸ்டன்ட்களையும் செய்து பல நடிகர்களுக்கு மத்தியில் தனித்துத் தெரிந்தார் ஜாக்கி. இப்படிப்பட்ட கலைஞன்  பிறந்து பன்னிரண்டு மாதங்கள் கழித்துத்தான் இந்த உலகத்தையே பார்த்துள்ளான். இப்போது இந்த உலகமே இவரை வியந்து பார்த்துக்கொண்டிருப்பதுதான் இவரின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. 

வறுமையைக் காரணம்காட்டி இவரை விற்கவும் அவரது அப்பா அப்போது முயன்றிருக்கிறார். தன் நண்பரின் அறிவுரையைக் கேட்டு அந்த முடிவிலிருந்து பின் வாங்கியிருக்கிறார். ஜாக்கியின் பால்யம் இப்படி இருண்டதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அதே இருண்ட உலகத்தில் மின்னும் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இப்படி நாம் அறிந்த ஜாக்கியைப் பற்றி அறியாதவை ஏராளம். தான் கடந்துவந்த கடினமான களங்களை வெற்றிப் பாதைகளாக மாற்றுவதே ஒரு சாதனையாளனுக்கான அடையாளம். அப்படிப்பட்ட எங்களின் சாதனையாளர் ஜாக்கிக்கு எங்களது பிறந்தநாள் வாழ்த்துகள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்