"............... ............ ............ ........!" A Quite Place படம் எப்படி? | A Quite Place movie review

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (09/04/2018)

கடைசி தொடர்பு:15:34 (09/04/2018)

"............... ............ ............ ........!" A Quite Place படம் எப்படி?

2020-ம் ஆண்டு உலகம் முழுக்க கண்களற்ற உயிரினங்கள் உலவுகின்றன. சத்தத்தின்  மூலம் அவை மனிதர்களையும் பிற விலங்குகளையும் வேட்டையாடிக் கொல்கின்றன. இவற்றிடமிருந்து அபாட்டும் அவரின் குடும்பமும் எப்படி தப்பிக்கின்றன என்பதை A Quite Place என்ற பெயரில் 90 நிமிட திரில்லராக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜான் கிரஸன்ஸ்கி.

2016-ம் ஆண்டு வெளியான டோன்ட் ப்ரீத் கிட்டத்தட்ட இதே மாதிரியான கதைக்களம் தான். கண்களற்ற ஒரு சைக்கோ கொலைகாரரின் வீட்டில் நுழையும் சில திருடர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை அட்டகாசமாய் எடுத்திருப்பார்கள். அதில் இருக்கும் சமூக கருத்துகள் அளவுக்கு இதில் ஒன்றும் இல்லை என்றாலும். ஒரு குடும்பம், தியாகம், சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்தல் போன்ற விஷயங்களில் ஈர்க்கிறது A Quite Place. தொடர்ச்சியாக இப்படி வெளியாகும் சைலன்ட் திரில்லர்கள், உண்மையில் ரசிகர்களுக்கு எக்ஸ்டிரா போனஸ். அடுத்து, கார்த்தி சுப்பராஜ் இயக்கத்திலும் இப்படி ஒரு சைலன்ட் ஹாரர் வெளியாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் சலிப்படையச் செய்யும் எச்சி ஒழுக்கும் பேய்களை ஹாரர் சினிமாக்கள் என பார்க்கத் தேவையில்லை என்பது மட்டுமே இத்தகைய சினிமாக்களால் நமக்குக் கிடைக்கும் நற்செய்தி. 

A Quite Place

லீ அபாட்டுக்கு (ஜான் கிரஸன்ஸ்கி) மூன்று குழந்தைகள். மூத்த குழந்தையான ரீகன் அபாட் (மில்லிசென்ட் சைமண்ட்ஸ்) காது கேட்கும் திறனற்றவர்.மில்லிசென்ட் சைமண்ட்ஸ் என்ற காது கேளாத பெண்ணை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் ஜான் கிரஸ்ன்ஸ்கி. பல சமயங்களில் நமது குறைபாடுதான் எதிரிகளை அடக்கும் சக்தியாக இருக்கும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் சிறுமி மில்லிசென்ட்.   

படத்தின் பெரிய பிளஸ் நாயகியாக வரும் எமிலி பிளன்ட்தான். வீட்டுக்குள் நடக்கும் காட்சிகள் அனைத்திலும் பீதியை ரசிகர்களிடம் அநாயசமாக கடத்துகிறார் எவெலின் அபாட் (எமிலி பிளன்ட்). எத்தனை நாள்களுக்குத்தான் சத்தமில்லாமல் இருப்பது. அவள் எதிர்பார்த்த அந்த நாள் அதற்கு முன்பே வந்துவிடுகிறது. அப்போது நடக்கும் சில சம்பவங்கள், எமிலியையும் அந்த உயிரினங்களையும் ஒரே இடத்தில் வர வைக்கின்றன. அடுத்து வருவதெல்லாம் சீட் நுனி த்ரில்லர் காட்சிகள். தனது கணவர்தான் இயக்குநர் என்பாதாலோ என்னவோ, பின்பாதியில் வரும் அந்தக் காட்சிகளில் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார் எமிலி. 

A Quite Place

செருப்பு போடாமல் நடப்பது, சைகை மொழியிலேயே பேசுவது, என்ன நடந்தாலும் சலனமில்லாமல் அதை வேடிக்கைப் பார்ப்பது, அதிக சத்தமிருக்கும் இயற்கை சூழலில் பேச முயற்சி செய்வது என சுவாரஸ்ய காட்சிகளாய் திரைக்கதை அமைத்து நடித்து இயக்கியிருக்கும் ஜான் கிரஸன்ஸ்கிக்கு ஹாட்ஸ் ஆஃப். 

எப்படி இந்த உயிரினம் இங்கு வந்தது, உலகம் முழுவதும் உண்மையிலேயே அழிந்துவிட்டதா போன்ற கேள்விகளுக்கு அவ்வப்போது வரும் நாட்குறிப்பு பதிலாக இருக்கிறது. சின்ன சின்ன லாஜிக் மிஸ்டேக்குகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், A Quite Place சிறப்பான சம்பவம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close