Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்பாவி முயல்களுக்குள் இத்தனை வன்முறையா... ஏன் Peter Rabbit இப்படி இருக்கிறது?

முழு ஆண்டு விடுமுறையைக் குறிவைத்து சுட்டீஸ் படங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் வெளியாவது வழக்கம். பிப்ரவரி மாதமே அமெரிக்க திரையரங்குகளில் வெளியாகிவிட்ட Peter Rabbit, தற்போது இந்தியாவிலும் வெளியாகி இருக்கிறது. கார்ட்டூன்களில் பிரபலமான லூனி டூன்ஸில் வரும் பக்ஸ் பன்னி Bugs Bunny முதல் ஜூடோபியா என்னும் அனிமேஷன் படத்தில் வரும் ஜூடி ஹோப்ஸ் (போலீஸ் முயல் கதாபாத்திரம்) வரை நாம் கண்டுகளித்த முயல்கள் அதிகம். பல ஆண்டுகளாக குழந்தை புத்தகங்களில் கலக்கிக் கொண்டிருந்த 'ரேஸ்கல்' பீட்டர் ரேபிட், இந்த முறை லைவ் ஆக்ஷன் அனிமேட்டட் டெக்னாலஜி மூலம் திரைக்கு வந்திருக்கிறது. பீட்டர் ரேபிட் குழந்தைகள் புத்தக கதாபாத்திரம் என்பதால், படத்தின் எண்ட் கிரெடிட்ஸை கார்ட்டூனாக எடுத்திருக்கிறார்கள். அவை சிறப்பாக இருக்கிறது.  

peter rabbit

பீட்டர் ரேபிட்டும், அவனது மூன்று சகோதரிகளும் மெக்ரகரின் தோட்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள். வயதான மெக்ரகருக்குத் தெரியாமல் காய்கறிகளைப் பறித்து உண்பதுதான் இவர்களின் பொழுதுபோக்கு. பக்கத்து வீட்டில் இருக்கும் பியா என்ற ஓவியம் வரையும் பெண்ணுடன் எல்லா முயல்களும் நண்பர்கள். ஒரு நாள் மெக்ரகர் துரதிர்ஷ்டவசமாக இறந்து போக, பீட்டர் அந்த வீட்டை எடுத்துக்கொள்கிறான். ஜாலியாக  பிற மிருகங்களையும் கூட்டணிக்கு அழைத்துக்கொண்டு, அந்த வீட்டையும் தோட்டத்தையும் துவம்சம் செய்து வாழ்கிறான். எல்லாம் மெக்ரகரின் உறவினர் தாமஸ் வரும் வரைதான். தாமஸ் மெக்ரகரின் வீட்டையும், பியாவையும் ஒரு சேர பீட்டரிடம் இருந்து பிரிக்கிறான். பீட்டருக்கும் தாமஸுக்கும் எல்லாவற்றிலும் டிஷ்யூம் டிஷ்யூம் தான். தாமஸின் காதலைப் பிரிக்க முயல்கள் தீட்டும் டிஷ்கஷன் எல்லாம் காமெடி அதகளம்.  

பீட்டர் எப்படி வீட்டை மீட்டான்? தாமஸும் பியாவும் இணைந்தார்களா? இறுதியில் வீடு யாருக்குச் சொந்தமானது என்பதை காமெடி கலந்த கலாட்டாவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் வில் கிளக். 

peter rabbit

அனிமேட்டட் படங்களின் மூலம் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லும் யுக்தி சிறப்பானதாகவே இருக்கிறது. ஃபைண்டிங் டோரி திரைப்படத்தில் பெலுகா வகை திமிங்கலங்களை வைத்து எக்கோ லொகேஷன் echo location பற்றி விளக்கி இருப்பார்கள். இந்தப் படத்தில் மான்கள் ஏன் ஹெட்லைட் பார்த்தால் அப்படியே நிற்கினறன என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள். மான்களின் கண்கள் அதிக வெளிச்சத்துக்கு பக்குவப்படாத ஒன்று. அதீத வெளிச்சம் அதன் கண்களில் படும்போது, அது தன்னை தகவமைத்துக்கொள்ள சில நிமிடங்கள் அப்படியே நின்றுவிடும் என்பதே அறிவியல். 

படம் வெளியானபோது படத்துக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச்சைகள். தவறான விஷயங்களை குழந்தைகளுக்கு திரைப்படம் போதிக்கின்றது என்று பல பெற்றோர்கள் போர்க்கொடி தூக்கினர். சோனி நிறுவனம் அதற்கு மன்னிப்பு கேட்டது தனிக்கதை. திரையரங்கில் கவனித்தவரை சிரிப்புச் சத்தம்தான் அதீதமாக இருந்தது. எனினும் குழந்தைகள் சினிமா என சொல்லிவிட்டு இத்தகைய காட்சிகளை தவிர்த்தல் நலம். ஏனெனில் அவை விலங்குகள் மீதான மனிதனின் பரிவையும் மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களும் அனிமேஷனாக இருக்கும் பாஸ் பேபி போன்ற திரைப்படங்களில் இது பெரிய உறுத்தலாக இருப்பதில்லை. ஆனால், மனிதர்கள் பாதி அனிமேட்டட் கதாபாத்திரங்கள் பாதி வகை சினிமாக்கள் எப்போதுமே சற்று ஆபத்தானது. அவற்றை கவனமாக கையாண்டு இருக்கலாம்.
இவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பீட்டர் ரேபிட் குழந்தைகளுடன் பார்த்து சிரிக்க வேண்டிய ஜாலி சினிமா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்