Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"வீடியோ கேம், விண்வெளி விஷவாயு, 'அசுர' விலங்குகளின் அட்ராசிட்டி!" - 'ராம்பேஜ்' படம் எப்படி?

விண்வெளியில் இருந்து வெளிவந்த விஷ வாயுவால் மூன்று விலங்குகள் பாதிக்கப்பட்டு, அசுர வளர்ச்சி அடைகிறது. கட்டுப்பாட்டை இழந்து நகரை அழிக்க முற்படும் அந்த விலங்குகளிடம் இருந்து சிக்காகோ நகரைக் காப்பாற்ற ஒரு விலங்குகள் நிபுணரும், மருத்துவ நிபுணரும் போராடுகிறார்கள். இந்த வன் செயலுக்குக் காரணமாக இருந்தவர்களை ஒழித்துகட்டி, சிகாகோவைக் காப்பாற்றினார்களா, இல்லையா என்பதை ஃபுல் ஆக்‌ஷனில் சொல்கிறது, `ராம்பேஜ்' படம். 

ராம்பேஜ்

80-களில் வெளியான வீடியோ கேமை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், `ராம்பேஜ்'. சான்டியாகோவில் இருக்கும் விலங்குகள் சரணாலயத்தில் விலங்குகள் நிபுரணராக வேலை பார்த்து வருபவர், டேவிஸ் (டுவெயின் ஜான்ஸன்). இவர் மனிதர்களைவிட அதிகமாக விலங்குகளுடன்தான் நேரத்தைக் கழிப்பவர். அந்த சரணாலயத்தில் இருக்கும் விலங்குகள், முக்கியமாகக் குரங்குகள் இவர் சொல் பேச்சைத்தான் கேட்கும். அந்தளவு விலங்குகளிடம் பாசமாக இருப்பார். அதில், ஜார்ஜ் எனும் மனிதக் குரங்கு இவருக்கு ரொம்பவே செல்லம். இவர் அதைக் கலாய்க்க, பதிலுக்கு அது இவரைக் கலாய்க்க என ஜாலியாக நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் விண்வெளியில் இருந்து ஒரு சிறு இயந்திரம் மூன்று இடங்களில் விழுகிறது. அதில் ஒன்று ஜார்ஜ் இருக்கும் விலங்குகள் சரணாலயத்தில் விழுகிறது. அதிலிருந்து வெளிவரும் விஷ வாயுவால், ஜார்ஜின் செயல்பாடுகளில் வித்தியாசம் ஏற்படுகிறது. விஷ வாயுவின் வீரியத்தில் ஜார்ஜுக்கு வலிமையும் சக்தியும் கிடைக்க, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. 

வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த ஓநாய் மற்றும் முதலைக்கும் இதேபோன்ற மாறுதல்கள் ஏற்படுகிறது. சிகாகோவில் ஏற்படும் கதிர்வீச்சு இந்த மூன்று விலங்குகளையும் உக்கிரமடையச் செய்கிறது. வெவ்வேறு இடத்தில் இருந்து கதிர்வீச்சை நோக்கிப் பயணிக்கும் மூன்று விலங்குகளும் சிகாகோவில் சந்தித்துக்கொள்கின்றன. இதையெல்லாம் டி.வி நியூஸில் பார்க்கும் டாக்டர் கேட் க்ளாட்வெல் (நவோமி ஹாரிஸ்), விலங்குகள் சரணாலயத்திற்குச் சென்று தனக்குத் தெரிந்த உண்மைகளை விலங்குகள் நிபுணர் டேவிஸிடம் சொல்கிறார். க்ளாட்வெல் சொல்லும் உண்மையைக் கேட்டதும் ரெஸ்க்யூ மிஷனில் இருவரும் இறங்குகிறார்கள். டாக்டர் க்ளாட்வெல் டேவிஸிடமிடம் சொன்னது என்ன, அந்தக் கதிர்வீச்சை ஏற்படுத்தியது யார், விண்வெளியில் வெளியான விஷ வாயுவுக்குக் காரணம் என்ன, விஷ வாயு தாக்கிய ஜார்ஜை டேவிஸ் காப்பாற்றினாரா, சிகாகோ நகருக்கு என்ன ஆனது... அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கு ஆக்‌ஷன் ப்ளஸ் பிரம்மாண்டம் கலந்து பதில் பதில் தருகிறார், இயக்குநர், ப்ராட் பெய்டன்.

ராம்பேஜ்

ராட்ஸச உடல்களைக் கொண்ட குரங்கு, ஓநாய், முதலை போன்ற விலங்குகளை மையமாகக் கொண்டுதான் முழுப் படமும் நகர்கிறது. கிராஃபிக்ஸ் எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் அப்படியே அள்ளி வழங்கியிருக்கிறது படத்தின் விஷுவல் டீம். படத்தைத் தாங்கிப் பிடிக்கும் மற்றொரு விஷயம், காமெடி. பரபரப்பான சூழலைக்கொண்ட திரைக்கதையிலும் ஆங்காங்கே அதிரிபுதிரி காமெடிகளை இடம்பெறச் செய்திருக்கிறார், இயக்குநர். குரங்கும் டுவெயின் ஜான்ஸனும் சைகையால் பேசிக்கொள்ளும் மொழி, டபுள் மீனிங்கிள் இருவரும் மாறி மாறி கலாய்த்துக்கொள்வது என டுவெயின் ஜான்ஸன் குரங்குடன் செய்யும் லூட்டிகள் படத்தின் ஜாலி எலமென்ட்ஸ். டெக்னிக்கல் விஷயங்களில் ஒட்டுமொத்த குழுவும் தங்களுடைய பெஸ்ட்டைக் கொடுத்திருக்கிறது. 

டுவெயின் ஜான்ஸன், எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும், விலங்குகள் எவ்வளவு அடித்தாலும் ஆர்ம்ஸை முறுக்கிக்கொண்டு, செஸ்ட்டை விரித்துக்கொண்டு மிருத்துஞ்ஜெயனாக நின்று சண்டையிடுவது, `இதெல்லாம் நம்புற மாதியா பாஸ் இருக்கு?' என்ற கிண்டல் கேள்வியை எழுப்புகிறது. கான்செப்டை மட்டும் வீடியோ கேமில் இருந்து எடுத்த ரையான் எங்கிள், கதையில் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்தியிருக்கலாம். திரைக்கதையில் சுவாரஸ்யம் இருந்தாலும், கதையாகப் பார்க்கும்போது அடுத்தடுத்த காட்சிகள், கணிக்கக் கூடிவைகளாகவே இருந்தது. மலின் அக்கர்மேனின் வில்லத்தனங்களுக்கு இன்னும் எக்ஸ்ட்ரா பூஸ்ட் கொடுத்திருக்கலாம். `2 மினிட்ஸ் நூடுல்ஸ்' மாதிரி வந்து சென்றுவிட்டார். அவரது தம்பியாக நடித்தவரின் கதாபாத்திரமும் படத்தில் வலிய திணித்ததுபோல இருந்தது. எஃப்.பி.ஐ ஏஜென்டாக நடித்த ஜெஃப்ரி டீன் மோர்கனில் தொடங்கி நவோமி ஹாரிஸ் வரை... அனைவரும் நன்றாகவே நடித்திருந்தனர் என்றாலும் டுவெயின் ஜான்ஸனின் கதாபாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்களின் கதாபாத்திரத்துக்கும் இன்னும் கொஞ்சம் `வெயிட்' கூட்டியிருக்கலாம். மற்றபடி சம்மர் வெக்கேஷனை ஜாலியாகக் கொண்டாட, ராம்பேஜைக் கண்டிப்பாக ஒரு விசிட் அடிக்கலாம்!  

 

`தி ஹரிகேன் ஹெய்ஸ்ட்'  திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்