Published:Updated:

ஒரு `கைப்புள்ள’ காதலில் ஜெயித்த கதை! #ThePeanuts #MovieRewind

சுரேஷ் கண்ணன்
ஒரு `கைப்புள்ள’ காதலில் ஜெயித்த கதை! #ThePeanuts #MovieRewind
ஒரு `கைப்புள்ள’ காதலில் ஜெயித்த கதை! #ThePeanuts #MovieRewind

அப்பாவி சார்லி பிரெளன் தன் நேசத்தை தோழியிடம் வெளிப்படுத்தினானா, அதிர்ஷ்டம் அவன் பக்கத்தில் வந்ததா என்பதை The Peanuts படத்தில் இயல்பான நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். 

சார்லி பிரெளனைச் சந்தியுங்கள். பாவம், அதிர்ஷ்டம் என்றால் என்னவென்றே அறியாத பயல். துரதிர்ஷ்டத்தின் மொத்த உருவம் என்று அடையாளப்படுத்தலாம். இவன் காற்றாடி விட்டால், அது வானத்தில் பறக்காமல், தரையில் பரிதாபமாக தவழ்ந்துவரும். இதற்காகவே நண்பர்கள் மத்தியில் புகழ்பெற்றவன். ``சார்லி பிரெளனா? அவன் எது செய்தாலும் விளங்காதே” என்று வெடித்துச் சிரிப்பார்கள்.

இப்படிப்பட்ட சார்லி பிரெளன், சிவப்பு நிற தலைமுடியுடன் மிக அழகாக உள்ள சக மாணவியைக் கண்டதும் நேசிக்கத் தொடங்குகிறான். ஆனால், அவளைத் தூரத்தில் பார்த்தாலே கை கால் நடுங்க ஓடி ஒளிந்துகொள்வான். அதிர்ஷ்டம் இல்லாதவன் என்றாலும், சார்லி பிரெளன் மிகவும் நல்லவன். மற்றவருக்கு உதவும் உள்ளம். ஆனால், விருப்பமானவளிடம் தன் திறமையையும் அன்பையும் நிரூபிக்க முயலும்போதெல்லாம் தோல்வியே மிஞ்சுகிறது. 

`ஸ்பார்க்கி' என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட, அமெரிக்க கார்ட்டூனிஸ், சார்லஸ் ஷூல்ஸ் ( Charles Schulz). இவர், `பீநட்ஸ்’ (Peanuts) என்கிற தலைப்பில் வரைந்த சித்திரத் தொடர்தான், இந்தத் திரைப்படத்துக்கான அடிப்படையானது. சார்லி பிரெளன், செல்ல நாய்க்குட்டி ஸ்னூப்பி, தங்கை சார்லி பிரெளன் எனச் சித்திரத் தொடரில் வரும் கதாபாத்திரங்கள் திரைப்படத்திலும் உண்டு. சார்லஸ் ஷூல்ஸின் மகன் மற்றும் பேரனும் இந்தத் திரைக்கதை உருவாக்கத்தில் பங்குபெற்றுள்ளனர். 

சார்லி பிரெளன் கற்பனை பாத்திரம்தான் என்றாலும், சார்லஸ் ஷூல்ஸின் வாழ்க்கைக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. தன் வாழ்க்கையில் பெரும்பான்மை தோல்விகளைச் சந்தித்தவர் சார்லஸ். சித்திரத் தொடர் வெளியாகும் வரை இவருடைய ஓவியத் திறமையை எவருமே ஒப்புக்கொள்ளவில்லை. பல தருணங்களில் ஓவியங்கள் நிராகரிக்கப்பட்டன. தன்னுடைய குணாதிசயத்தையே ஒரு பாத்திரமாக வடிவமைத்துள்ளார். துரதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து சந்தித்தவர்கள் பலரும் சார்லி பிரெளனை, மனரீதியாக நெருக்கமாக உணர்ந்தார்கள். எனவே, இந்தச் சித்திரத் தொடர் உலகம் முழுக்க வெற்றியடைந்தது.

இந்தத் திரைப்படத்தில் சார்லி பிரெளனின் அப்பாவித்தனம் நம்மை உடனே கவர்கிறது. ஏறத்தாழ அனைத்து இடங்களிலும் அவன் தோல்வியடையும்போது நமக்குள்ளும் சோகம் பரவுகிறது. தங்க நிற முடியைக்கொண்ட மாணவியைப் பார்த்ததும், சார்லியின் கண்கள் விரிகின்றன. `அவளுடன் ஒரு வார்த்தையாவது பேசிவிட முடியாதா, ஒரு நொடியாவது அவளுடைய கவனத்தைக் கவர முடியாதா?’ எனத் தவிக்கிறான். அதற்கான பல நேர்மையான முயற்சிகளில் ஈடுபடுகிறான். ஆனால், ஒவ்வொரு முறையும் துரதிர்ஷ்டம் அவனைத் தோற்கடிக்கிறது. பள்ளியில் நடக்கும் கலைப் போட்டியில் திறமையை நிரூபித்து, தோழியின் கவனத்தைக் கவர முடிவுசெய்கிறான் சார்லி. ஆனால், அவன் தங்கையின் நிகழ்ச்சி நடைபெறும்போது ஏற்படும் குழப்பத்தால் அவளுக்கு உதவுகிறான்.

பாட்டியின் உடல்நலக்குறைவு காரணமாக, தங்க நிற முடிச் சிறுமி ஊருக்குச் சென்றுவிடுகிறாள். அவளின் பங்குதாரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்லி, அவளுக்காகவும் சேர்த்துப் படிக்கிறான். டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்' என்கிற பெரிய நாவலைக் கடின உழைப்புடன் வாசித்து திறமையாக ஒரு குறிப்பு தயார்செய்கிறான். அந்த வயதுக்கு இது மிகப்பெரிய விஷயம். ஆனால், துரதிர்ஷ்டம் இதையும் காலி செய்துவிடுகிறது.

எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டபோது, இறுதிக் காட்சியில் ஓர் அதிசயம் நிகழ்கிறது. பள்ளியின் இறுதி நாளன்று ஆளாளுக்கு ஒரு பேனா நண்பனை’த் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். சார்லிக்கு யாருமே தோழராக முன்வரவில்லை. அப்போது, யாரும் எதிர்பாராத கணத்தில், `தான் சார்லியின் பேனா நண்பனாக இருப்பதாக’ தங்க நிற முடிச் சிறுமி சொல்வது அழகான திருப்பம். ஒரு வழியாக சார்லி துணிச்சலை வரவைத்துக்கொண்டு, ``ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தாய்?” என்று கேட்கிறான். `உனது நல்லியல்புகள்தான் காரணம்’ என்கிறாள் அவள்.

சார்லியின் செல்ல நாய், ஸ்னூப்பி செய்யும் நகைச்சுவைக் கலாட்டாக்கள் குழந்தைகளை நிச்சயம் கவரும். ஏறத்தாழ சார்லியின் துரதிர்ஷ்ட நகல்தான் ஸ்னூப்பி. கனவுலகில் சஞ்சரிக்கிறது. அந்த அனுபவங்களை ஒரு நாவலாகவும் எழுதுகிறது. ஆகாய விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் அதனுடைய `காதலி்’ சிக்கலில் மாட்டிக்கொள்கிறது. காப்பாற்ற முயலும்போதெல்லாம் தோல்விதான் கிடைக்கிறது. ஆனாலும், விடாமுயற்சியுடன் தனது சாகசங்களால் காதலியைக் காப்பாற்றுகிறது. ஸ்னூப்பி உடன் வரும் `வுட்ஸ்டாக்’ என்கிற சிறிய மஞ்சள் பறவையின் லூட்டிகளும் அதகளம்.

`Peanuts’ சித்திரத் தொடரையொட்டி சில படங்கள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. எனினும், முழுநீளத் திரைப்படமாக வெளிவந்தது இதுவே. பல வெற்றிகரமான அனிமேஷன் திரைப்படங்களை இயக்கிய, ஸ்டீன் மார்ட்டினோ இந்தத் திரைப்படத்தையும் அற்புதமாக இயக்கியுள்ளார். கிறிஸ்டோபர் பெக் பின்னணி இசையும் பாடல்களும் திரைப்படத்துக்கு அருமையாகத் துணை நின்றுள்ளன. 

ஒருவன் துரதிர்ஷ்டசாலியாக இருந்தாலும், நேர்மையாளனாகவும் நல்லவனாகவும் இருந்தால், வெற்றியை அடைவான் என்கிற நீதியை நகைச்சுவையுடன் விவரிக்கிறது திரைப்படம். 

சுரேஷ் கண்ணன்