``ஏஞ்சலினா மீதான தீராக் காதலுக்கு, நடிகை என்பது மட்டுமா காரணம்?’’ - #HBDAngelinaJolie

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பிறந்தநாள் கட்டுரை.

``ஏஞ்சலினா மீதான தீராக் காதலுக்கு, நடிகை என்பது மட்டுமா காரணம்?’’ - #HBDAngelinaJolie

இதே நாளில் (04/06/2018) 1975- ம் ஆண்டு பிறந்தவர், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. சிறு வயதில் ஜாக்கி சான், புரூஸ் லீ, அர்னால்டு போன்ற நடிகர்களின் கரடு முரடான படங்களைப் பார்த்துப் பழகிய நம் கண்களுக்கு, புதிதாக ஒரு நடிகை பிரபலமாகி வந்தார். எலும்புக்கூடு மண்டை கொண்ட பெல்ட் பக்கில், கால்களின் இரண்டு பக்கங்களிலும் துப்பாக்கி, போனி டெயில் ஹேர் ஸ்டைல்... என 'டாம் ரைடர்' படத்தில் இவர் அதிரிபுதிரியாக என்ட்ரி கொடுத்தாலும், இவரைப் பார்த்த மறுகணமே கனவுக் கன்னியாக ஏற்றுக்கொள்வதை மனம் மறுக்கவில்லை. ஹேப்பி பர்த்டே ஏஞ்சலினா ஜோலி! 

ஏஞ்சலினா

ஜாக்கி, லீ, அர்னால்டு போன்ற கனவுக் கதாநாயகர்களின் ஆதிக்கத்துக்கு நடுவே 'டாம்ப் ரைடர்' எனும் ஒரே படத்தின் மூலம் மெல்ல மெல்ல ரசிகர்கள் நெஞ்சில் `நச்' என்று உட்கார்ந்தார், ஏஞ்சலினா. பிறகுதான் இவர் நடித்த படங்களின் மீது கவனம் பாயத் தொடங்கியது. வெறும் ஈர்ப்பாக ஆரம்பித்தது, காதலாக மாறியது. ஆனால், இவர் சிறுவயதில் பட்ட கஷ்டங்களை விவரித்தால் மனம் பதறும்.

ஜான் வொயிட் - மார்ச்சலின் பெர்டாண்ட் தம்பதிக்குப் பிறந்தவர், ஏஞ்சலினா வொயிட் ஜோலி. பிறந்த ஒரே வருடத்தில் இவரின் பெற்றோர் பிரிந்துவிட்டனர். தந்தையைப் பிரிந்து தாயுடன் வாழ்ந்து வந்த ஏஞ்சலினா, சந்தோஷத்தை இழந்து தன்னைத்தானே வருத்திக்கொள்ளவும் தயங்கவில்லை. கையை கத்தியால் கிழித்துக்கொள்வது, வரும் ரத்தத்தைப் பார்த்து அழுவது, துளிகூட தூங்காமல் துக்க நினைவுகளில் நீந்துவது, சாப்பிடாமல் வருத்திக்கொள்வது... என மிக குரூரமாக இருந்திருக்கிறது, ஏஞ்சலினாவின் டீன்ஏஜ் பருவம். 20 வயதில் போதைக்கு அடிமையான ஏஞ்சலினா, இரண்டு முறை தற்கொலை முயற்சியும் செய்துள்ளார். எல்லாவற்றையும் பழகியதன் விளைவு... தந்தையை வெறுக்கத் தொடங்கினார். தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருந்த 'வொயிட்'டை அதிகாரபூர்வமாக நீக்கினார். 

பிரச்னைகளிலிருந்து மீண்டுவர புத்தகங்கள், புத்தங்களின் முதல் பிரதியை சேகரித்து வைப்பது, சமூக சேவைகள் எனத் தன் தனிமை நேரங்களை இப்படியாகக் கழித்தார். 'வாங்கும் சம்பளத்தை மூன்று பங்காகப் பிரித்து, ஒரு பங்கை தனக்காகவும், ஒரு பங்கை ஊருக்காகவும், ஒரு பங்கை சேமிக்கவும் பயன்படுத்தலாம்!' என்பதுதான் ஏஞ்சலினாவின் ஃபேவரைட் கோட். இதைத்தான் தனது நண்பர்களிடமும் சொல்வாராம். 

ஏஞ்சலினா ஜோலி

தாய் தந்தையின் பிரிவுக்குப் பின் பல விமர்சனக் கணைகளுக்குள் சிக்கித் தவித்தவர், ஏஞ்சலினா ஜோலி. தன் அம்மாவின் மூலம் பல சினிமாக்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட ஏஞ்சலினாவுக்கு, சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. அதற்குப் பிள்ளையார் சுழி போட மாடலிங் துறையில் இறங்கினார். 'டொக்கு விழுந்த கன்னத்தோட உன்னை யாரு இங்கே வரச் சொன்னது' என ஏளனம் செய்தார், இயக்குநர். இப்படி சின்னச் சின்ன விஷயங்கள் ஏஞ்சலினாவை மனதளவில் பெரிய பாதிப்பைக் கொடுத்தது. அதன் பின்னர்  'Lee Starsberg' எனும் தியேட்டர் நிறுவனத்தில் சேர்ந்து நடிப்பு பயிலத் தொடங்கினார், நன்றாக நடிக்கவும் செய்தார். 

ஆரம்பத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள், சுயாதீன திரைப்படம்... எனத் தன்னை நிரூபிக்கப் போராடினார். ஆனால், கடைசிவரை தோல்வியே இவரை இறுகப் பற்றிக்கொண்டது. முயற்சிப்பதை நிறுத்தாமல் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நடித்துக்கொண்டேதான் இருந்தார். 1996-ல் இவர் நடிப்பில் வெளியான 'Love Is All there Is', 'Mojave Moon' ஆகிய திரைப்படங்கள் தெறி ஹிட் அடிக்கவில்லை என்றாலும், சொல்லிக்கொள்ளும்படியாக ஓடியது. அதன் பின்னர் மெல்ல மெல்ல தன்னை மெருகேற்றிக்கொண்டு பல்வேறு படங்களில் நடித்து மெர்சல் காட்டத் தொடங்கினார். அந்த காலகட்டத்தில் வந்த படம்தான், 'டாம்ப் ரைடர்'. வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டது. அதேசமயம் நம்மூரில் இருந்த ஹாலிவுட் பிரியர்களுக்கும் ஏஞ்சலினாவை அறிமுகமும் செய்துவைத்தது. 

ஏஞ்சலினா ஜோலி

'டாம்ப் ரைடர்' படத்திற்குப் பின் இவரை நடிகையாக ஏற்றுக்கொள்வதைத் தாண்டி, நல்ல மனிதராகவும் ஏற்றுக்கொண்டார்கள் மக்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் கம்போடியாவில் நடந்தது.  அங்கே வறுமையின் பிடியில் வாடிய மக்களைப் பார்த்த ஏஞ்சலினா, பண உதவி செய்ததோடு நிறுத்தாமல், அங்கிருந்த ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்தார். அதுமட்டுமின்றி, அந்த ஊருக்காக அரசாங்கத்தின் உதவியையும் நாடிச் சென்றார். இன்றுவரை ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு இயக்கங்கள் மூலமாகவும், தனியாகவும் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார். சமூக சேவைகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் ஏஞ்சலினா மீதான தீராக் காதலுக்கு இவரிடமிருக்கும் மனிதாபிமானமும் ஒரு காரணம்!  

நடிப்பிற்கான திறன்களை மட்டும் வளர்த்துக்கொள்ளாமல், உதவுவதற்கான உள்ளமும் கொண்ட ஏஞ்சலினாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!