அப்படி என்னதான் இருக்கு இந்த படத்தில்?

.எல்.ஜேம்ஸ் எழுதிய படு ரொமான்ஸான நாவல்தான் ‘ 50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே’. இதன் திரைப்பட வடிவம் காதலர் தின சிறப்பாக, சாம் டெய்லர் ஜான்சன் இயக்கத்தில் டகோடா ஜான்சன், மற்றும் ஜேமி டோர்னன் நடிப்பில் இதே தலைப்பில் வெளியாகியுள்ளது.

படம் வெளியானதுதான் தாமதம்...உலகின் பல சென்சார் அமைப்புகள் படத்திற்கு தடா போட்டு விட்டனர். இந்தியா, மலேசியா, அரேபிய நாடுகள் உட்பட பல நாடுகளில் இந்த படத்திற்கு டிவிடிக்களாகக் கூட நுழைய வழியில்லை. பூர்வ ஜென்ம பலன் நமக்கு...படத்தின் டிவிடி கிடைத்தது. அதுவும் எடிட்டட் வெர்ஷனே இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. எனினும் எடிட்டானதே இப்படியா...? என்ற ரீதியில் படத்தில் அவ்வளவு ரொமாண்டிக் ரசம் சொட்டுகிறது.

சரி...படத்தின் கதை என்ன? கல்லூரி மாணவி அனஸ்டேசியா தனது ரூம் மேட் கேட்டுக்கு உடல்நிலை சரியில்லாது போகவே, அவருக்காக கல்லூரி இதழுக்காக ஒரு பேட்டியை அவர் இடத்தில் தான் எடுக்க செல்கிறார். பிரபல பிஸ்னஸ் மேக்னட்டான கிறிஸ்டியன் க்ரேவிடம்தான் அந்த பேட்டி... முதல் பார்வையிலேயே அனா, கிரேவின் தோற்றத்தில் மயங்கி விடுகிறாள். என்ன பேச வந்தோம் என்பது கூட தெரியாமல் வார்த்தை வராமல் சிக்குகிறது.

க்ரேவுக்கும் அனாவை பிடித்து விட, அவள் பகுதி நேரமாக வேலை செய்யும் ஹார்டுவேர் கடைக்கே சென்று அதிர்ச்சி கொடுக்கிறான் க்ரே. பின் போட்டோ ஷூட், கஃபே என சந்திப்புகள் அவர்களை நெருக்கமாக்குகிறது. க்ரேவை புரிந்து கொள்ள முடியாது தவிக்கும் அனாவிற்கு, க்ரேவிடமிருந்து Tess of the d'Urbervilles புத்தகம் அன்பளிப்பாக வருகிறது.

தொடர்ந்து நெருக்கம் இன்னும் அதிகமாக, கல்லூரியில் பட்டம் வாங்கும் அனாவிற்கு கார், லேப் டாப் என பல பரிசுகளை க்ரே அள்ளிக்கொடுக்க, அடுத்த இன்ப அதிர்ச்சியாக ஹெலிகாப்டர் பயணம், விமானப் பயணம் என உறவு பலமாகிறது.

ஒரு கட்டத்தில் அனாவிற்கு கிறிஸ்டியன் மீது காதல் அதிகரிக்கிறது. அப்போதுதான் டாமினண்ட் என்னும் செக்ஸ் முறைக்கு க்ரே அடிமையாக இருப்பது தெரிய வருகிறது. மேலும் க்ரே மீதுள்ள அன்பு, அவளை அவனுக்கு அடிமையாக ஒப்படைக்க எண்ணி ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறாள். எனினும் சில கட்டுபாடுகளுடன். அனாவிற்கு கிறிஸ்டியன் மீது இருப்பது ரொமாண்டிக் காதல், ஆனால் க்ரேவிற்கு இருப்பதோ டாமினண்ட் செக்ஸ் உணர்வு.

அவனால் மற்றவர்கள் போல் சாதாரண உறவுகளில் ஈடுபடுவது கடினம். இதை புரிந்து கொள்ளும் அனா, 'உனக்கு நான் சரியானவள் அல்ல, எனக்கு நீ சரியானவன் அல்ல...!' எனக் கூறி பிரிந்து விடுவோம் எனக் கூறுகிறாள். ஆனாலும் பிரிய மனமில்லாமலேயே அனாவும், க்றிஸ்டியனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டிருக்கும்போதே, லிஃப்டில் அழுதபடியே சென்று விடுகிறாள் அனா. படம் முடிகிறது.

இந்தியர்களான நமக்கு இந்த அளவிற்கு உள்ள எடிட்டட் வெர்ஷனே சற்று ஓவர் டோஸ்தான். மேலும் இந்திய மொழிகளில் இதை ரீமேக் செய்ய எண்ணினால்கூட படம் தடைபடும் அளவிற்கு வலிமையான கதைக்கரு. சில இடங்களில் சற்றே தடுமாறினால் கூட படத்தில் நாவல் சாரம் கெட்டுவிடும். சரியான அளவில் ரொமான்ஸ் காட்சிகளை அடுக்கி, சற்றே பார்ப்பவர்களை சூடேற்றியிருக்கிறார் இயக்குநர் சாம் டெய்லர்.

டகோடா ஜான்சன் , ஜேமி டோர்னன் இருவரும் உண்மையான காதலர்கள் போல் அவ்வளவு நெருக்கம், அவ்வளவு உணர்வுகள் என கொட்டி தீர்த்திருக்கிறார்கள். இன்னமும் இந்தியாவிற்குள் பல மால்களில் கூட டிவிடி வரவில்லை. இணையத்திலும் பணம் கட்டி மட்டுமே பார்க்க இயலும் என்ற ரீதியில் யாம் பார்த்ததை உங்களுக்கு கதையாக கொடுத்தாயிற்று...!

- ஷாலினி நியூட்டன் - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!