மீண்டும் அமெரிக்காவைக் காப்பாற்றுவாரா டாம் க்ரூஸ்? | மிஷன் இம்பாசிபிள், டாம்க்ரூஸ், mission impossible, tomcruise

வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (26/03/2015)

கடைசி தொடர்பு:15:36 (08/04/2015)

மீண்டும் அமெரிக்காவைக் காப்பாற்றுவாரா டாம் க்ரூஸ்?

சீரிஸ் படங்கள, இன்று வரை ஹாலிவுட்டின் மாறாத ஒரு ட்ரெண்ட்! ஒரு படம் வெளியாகி ஹிட் அடித்துவிட்டது என்றால், அதற்கான அடுத்தடுத்த பாகங்கள் வர ஆரம்பித்துவிடும். இன்று வரை அதன் சிறப்பும், அதற்கான ரசிகர்களும் குறையவே இல்லை. ஹாலிவுட் சீரிஸ் படங்களில் மிக முக்கியமான படம் “மிஷன் இம்பாஸிபிள்'.

டாம் க்ரூஸ் என்ற நடிகர் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்ததற்கு, 'மிஷன் இம்பாஸிபிள்' படத்துக்கு தனி இடம் உண்டு. 60-களில் தொலைக்காட்சியில் தொடராக ஆரம்பிப்பதற்காக, இந்தக் கதையை ப்ரூஸ் ஜெல்லர் எழுதியிருந்தார். அது டி.வி. தொடர் செம ஹிட் அடித்தது. பின்னர் அந்தக் கதையை படமாக்கலாம் என்று முடிவு செய்து, 1996-ல் முதல் பாகம் வெளியானது. இதுவரை நான்கு பாகமாக வெளியாகி, உலகம் முழுவதும் வசூலில் சாதனைப் படைத்துள்ளது. இதன் ஐந்தாவது பாகமாக 'மிஷன் இம்பாசிபிள் ரஃப் நேஷன்' வருகிற ஜூலை 31-ல் வெளியாகவிருக்கிறது.

ஜேம்ஸ்பாண்ட் பாணியிலேயே, சீக்ரெட் ஏஜென்டாக வேலை செய்யும் ஹீரோவாக டாம் க்ரூஸ். நான்கு பாகங்களிலுமே சிஸ்டம் ஹாக்கிங், பாம், அணு ஆயுதம், சண்டைக்காட்சிகள், யாருமே பார்க்காத டெக்னாலஜி... என கதை செல்லும். கடைசியில் எதிரிகளிடம் டாம் க்ரூஸ் மாட்டிக்கொள்வார். இல்லை என்றால், அவர் மீது குற்றம் திரும்பும். அதில் இருந்து தப்பித்து அமெரிக்காவைக் காப்பாற்றுவதே மீதி கதையாக இருக்கும். எதிர்கள் யாராக இருக்க முடியும்? வழக்கம்போல ரஷ்ய தீவிரவாதிகளே! இதுவே மிஷன் இம்பாஸிபிளின் ஒன்லைன் ஸ்டோரி.

மிஷன் இம்பாஸிபிள் படத்தின் முதல் பாகம் 1996-ல் ப்ரையன் டி பால்மா என்ற இயக்குநரின் படைப்பில் வெளியானது. அன்றில் இருந்து இன்று வரை டாம் க்ரூஸின் கதாபாத்திரத்தின் பெயர் ஏதன் ஹண்ட். முதல் பாகம் வெளியாகி 452 மில்லியன் டாலர் வசூலித்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இரண்டாம் பாகத்தினை ஜான் வூ இயக்க, ஏதன் ஹண்ட் கதாபாத்திரத்தில் டாம் க்ரூஸ் நடிக்க, 2000-ல் படம் வெளியானது. எதிர்பார்த்ததைவிட படம் மெஹா ஹிட் அடித்தது. இரண்டாம் பாகத்தின்போதுதான் படம் உலகளவில் பேசப்பட்டது. அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படமாக 545 மில்லியன் டாலர் வசூலித்தது.

தொடர்ந்து 2006-ல் ஜெ.ஜெ.ஆப்ராம்ஸ் இயக்கத்தில் மிஷன் இம்பாஸிபில் பாகத்தின் மூன்றாம் பாகம் வெளிவந்தது. எதிர்பார்த்த அளவுக்கு வசூல் சாதனை பெறவில்லை. 395 மில்லியன் டாலர் மட்டுமே வசூலித்தது. இதுவரை வெளிவந்த நான்கு பாகத்திலுமே மிகக்குறைவான வசூல் பெற்ற படம் இதுவே. மிஷன் இம்பாஸிபிளின் நான்காம் பாகமான கோஸ்ட் ப்ரோட்டோகால் 2011-ல் வெளிவந்தது. அது 694 மில்லியன் டாலர் வசூல் சாதனையைப் படைத்தது. இந்தப் பாகத்தில் ஹிந்தி நடிகர் அனில் கபூர் துணை நடிகராக நடித்திருப்பார். மேலும், இந்தியாவிலும் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.

மிஷன் இம்பாஸிபிள் - கோஸ்ட் ப்ரோட்டோகால் கதை இதுதான்... சீக்ரெட் ஏஜென்டாக ஈதன் ஹண்ட் (டாம் க்ரூஸ்) தன் குழுவுடன், தீவரவாதியான ஹண்ட்ரிக்கை தேடியலைகிறான். ஹண்ட்ரிக் ரஷ்யாவின் நியூக்ளியர் லாஞ்சிங் கோர்ட்டை திருடி, அமெரிக்காவை அழிக்க நினைக்கிறான். இவனைப் பிடிப்பதற்குள் க்ரெம்ளின் மாளிகையைத் தாக்க ஏவுகணை அனுப்பிவிடுவான். இதற்கெல்லாம் காரணம் ஏதனின் டீம்தான் என்று திசைமாற்றி விடுகிறான். பழி ஏதன் மீது விழுகிறது. அதில் இருந்து தப்பித்து அமெரிக்கா மீதான ஏவுகணையை சமாளிப்பதே மீதி கதை.

ஒவ்வொரு பாகத்திலுமே உயரமான கட்டிடம், மலைகளில் ஏறி டாம் க்ரூஸ் செய்யும் சாகசங்கள் தான் படத்தின் ஹைலைட்ஸ். நான்காவது பாகத்தில் கூட உலகின் உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிஃபாவில் நடக்கும் சண்டைக் காட்சிகள் அதிரி புதிரி மாஸ் சீன்.

இந்தக் கதையையே எல்லா பாகத்துக்கும் நாம் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். படத்தின் வெற்றிக்குக் கதைதான் காரணம் என்று கூறவே முடியாது. வழக்கம்போல் ஒரே கதைதான். அமெரிக்காவைக் காப்பாற்றுவதே உச்சபட்ச க்ளைமாக்ஸாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு பாகத்திலும் உள்ள கதை நகர்வு, டெக்னாலஜி, இடையிடையே சொருகப்பட்ட காமெடி, படத்தின் டைட்டில் மற்றும் டாம் க்ரூஸ் நடிப்பு ஆகியவை வித்தியாசப்பட்டிருக்கும். 'மிஷன் இம்பாசிபிள் ரஃப் நேஷன்' என்ன வித்தியாசத்தைத் தருகிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்!

- பி.எஸ்.முத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்