" புரிஞ்சாத்தான் படமா? "

லகின் நீ...ளமான சினிமாவாக உருவாகிக்கொண்டிருக்கும் படம் ‘ஆம்பியன்ஸ்’. 720 மணி நேரம். அதாவது தொடர்ச்சியாக 30 நாட்கள் ஓடும் இந்தத் திரைப்படத்தை ஸ்வீடனைச் சேர்ந்த இயக்குநர் ஆண்டர்ஸ் வெபெர்க் என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கிக்கொண்டிருக்கிறார். ‘ஆம்பியன்ஸ்’ படத்தின் மணிக்கணக்கில் ஓடும் சில டீஸர்கள் இதுவரை ரிலீஸாகியிருக்கின்றன. படம் 2020-ல் ரிலீஸாகுமாம்.

டீஸர்களைப் பார்த்தாலே மெர்சல் ஆகுது. இயங்கிக்கொண்டிருக்கும் காரின் வைப்பரை சில நிமிடங்கள் காட்டுகிறார்கள். லாங் ஷாட்டில் காத்தாடி ஒன்று ஆடிக்கொண்டிருக்கிறது. அப்படியே குளோஸ் அப் ஷாட்டில் காத்தாடியின் றெக்கைகள் காட்டப்படுகின்றன. திடீரென திரையில் அழுக்குத் தண்ணீரில் கண்களைத் திறந்து பார்த்தால் என்ன எஃபெக்ட் கிடைக்குமோ, அப்படி ஏதோ ஒரு காட்சி தெரிகிறது. காலுக்கும் ஷாட் வைக்காமல், தலைக்கும் ஷாட் வைக்காமல் நடந்துசென்றுகொண்டிருக்கும் ஒருவரின் இடுப்பும், தொடையும் இணையும் இடத்தைச் சில நொடிகள் காட்டுகிறார்கள். திடீரென வண்டு ஒன்று ஆசுவாசமாக நகர்ந்து போகிறது. ஆனால், பின்னணியில் நகர்வது வண்டுதான் என்பதைக் கண்டுபிடிக்க கொஞ்ச நேரம் கண்களைக் கசக்கி அந்தக் காட்சிகளைப் பார்க்கவேண்டியிருக்கிறது. கருப்பு, வெள்ளை, அடர் பழுப்பு, இளம் பச்சை, அனைத்து வண்ணங்களின் கலவை என திரையில் தெரியும் உருவங்களைத் தெளிவற்றதாகவே காட்டும் வகையில் வண்ணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. விளக்கமாகச் சொன்னால், எப்போதாவது ஒருநாள் பகலில் தூக்கம் போடுபவர்கள் மாலை எழுந்ததும் , இது காலையா மாலையா என்று தெரியாமல் ‘இன்னும் பால் பாக்கெட் வரலையா’ என மசமச ரியாக்‌ஷன் கொடுப்பார்களே... அப்படித்தான் இருக்கின்றனு அத்தனை டீஸர்களும். சரி வாங்க, படத்தோட இயக்குநர் ஆண்டர்ஸ் வெபெர்க் கொடுத்த ஸ்பெஷல் பேட்டியைப் பார்க்கலாம்.

‘‘என் படத்தை யாராவது ஒருவர் டவுண்லோடு செய்துவிட்டால் போதும். படத்தின் ஒரிஜினலை அழித்துவிடுவேன். பிறகு, டவுண்லோடு செய்தவர் மூலமாக மட்டுமே மற்றவர்களுக்குப் பரவும். இதுவரை நான் இயக்கிய எந்தப் படத்தின் ஒரிஜினல் காப்பியும் என்னிடம் கிடையாது. ‘ஆம்பியன்ஸ்’ படத்தை ஜனவரி 1, 2020 அன்று உலகம் முழுக்க, ஒரே நேரத்தில் திரையிட்டுக் காட்டிவிட்டு, ஒரிஜினலை அழித்துவிடுவேன். யாராவது என்னுடைய படத்தைப் பகிர்ந்தால், அது வாழும். இல்லையென்றால் ‘இப்படி ஒரு படம் வந்தது’ என்ற தகவலோடு, என் படைப்பு பறிபோகும்.” 

‘‘இரண்டு மணி நேரம் ஓடும் படங்களையே பொறுமையாகப் பார்க்க முடியவில்லை. உங்களுடைய 720 மணி நேர சினிமாவை யாருங்க பார்ப்பாங்க?”

‘‘இது ரசிகர்களிடம் கைதட்டல் பெற எடுக்கும் படம் கிடையாது. தவிர, இதை திரையரங்கில் வெளியிடுகிற எண்ணமும் எனக்கு இல்லை. இது கதையுடன் நகரும் படம் அல்ல. உணர்வுகளின் தொகுப்பு. மியூஸியம், கேலரி, கலை அரங்கங்கள் போன்ற இடங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய படமாக ‘ஆம்பியன்ஸ்’ இருக்கும்.”

‘‘இதுவரை வெளிவந்த படத்தின் டீஸர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. மொத்தப் படமும் இப்படித்தானா?”

“எல்லா விஷயங்களை்யும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உலகில் நடக்கிற அத்தனை நிகழ்வுகளையும், உணர்வுகளையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதா? இல்லையே. அதுபோலத்தான் இந்தப் படமும். ‘ஆம்பியன்ஸ்’ ஓர் உணர்வு. மனதைத் தொடும்படி ஏதோ ஒன்றை உணரலாம்.”

 

‘‘அப்படினா, இந்தப் படத்தின் கருவை சில வரிகளில் விவரிக்க முடியாதா?’’

‘‘முடியவே முடியாது.”

 ‘‘தொடர்ந்து 24 மணி நேரமும் படத்தைப் பார்த்தால் மட்டுமே ‘ஆம்பியன்ஸ்’ படத்தை 30 நாட்களில் பார்த்து முடிக்க முடியும். பார்க்கிறவங்களோட பார்வை என்னாவது?”

“உங்க இந்தியாவைச் சேர்ந்த ஆஷிஷ் வர்மா என்பவர், 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் 16ம் தேதி வரை, கிட்டத்தட்ட 50 படங்களைத் தொடர்ந்து 6 நாட்கள் பார்த்திருக்கிறார். ஒரு படம் முடிந்து அடுத்த படத்துக்கு அவர் எடுத்துக்கொண்ட இடைவெளி 10 நிமிடங்கள்தான். ‘ஆம்பியன்ஸ்’ படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசிக்கும்படியே படமாக்கிக்கொண்டிருக்கிறேன். 30 நாட்களும் மெய் மறந்து பார்க்க பல அற்புதமான விஷயங்கள் இருக்கு.”

‘‘இந்தப் படம்தான் உங்க கடைசி படம்னு அறிவிச்சிருக்கீங்க. ஏன்?’’

“சுருக்கமா சொல்லணும்னா, நேரம் இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக ‘ஆம்பியன்ஸ்’ படத்துக்காக அறிவியல், தத்துவம், மதம்னு அத்தனை விஷயங்களையும் ஆராய்ச்சிசெய்து, அதை எளிமையாகப் புரியும்படி படத்துல பதிவுபண்ண வேண்டி இருந்தது. ஃபிரேம் அசைவுகளில் கதை சொல்ற சினிமா மேல எனக்கு ஈர்ப்பு குறைஞ்சுபோச்சு. ஒரு விஷயத்தைப் படமாகச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், அதற்கான நேரம் என்னுடைய கையில் இல்லை. ஒரு படத்தை எவ்வளவு அதிக நேரத்தில் சொல்கிறோமா, அதுதான் சிறந்த படமாக இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. இதுக்கு முன்னாடி ‘090909’ என்ற பெயரில் ஒன்பது நிமிடங்கள், ஒன்பது மணி, ஒன்பது நிமிடம், ஒன்பது நொடிகள், ஒன்பது ஃப்ரேமில் ஓடும் ஒரு படத்தை இயக்கியிருக்கேன். இந்தப் படத்தை 09-09-2009-ம் ஆண்டில் ரிலீஸ் பண்ணினேன். அதனால, நீளமான படம் எடுக்கிறது எனக்குப் பிடிச்ச விஷயம்தான். அதிக நேரம் ஓடக்கூடிய படத்தை என்று எடுக்கிறேனோ, அதுதான் என்னுடைய சிறந்த படமாகவும் இருக்கும், கடைசிப் படமாகவும் இருக்கணும் என்பது நான் ஏற்கெனவே எடுத்திருந்த முடிவுதான். இப்போது இந்த 720 மணி நேர ‘ஆம்பியன்ஸ்’ திரைப்படம் என் 20 வருட சினிமா வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர இருக்கிறது. இதில் வருத்தம் துளியும் கிடையாது. சந்தோஷம்தான்.’’
 

 - கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!