'சினிமா நம்மை கவனிக்கிறது!' ரோஜரைப் பின்தொடரும் விமர்சகர்கள்...

ஹாலிவுட்டில் எந்தப் படம் வந்தாலும் விடாமல் பார்க்கும் சினிமா பிரியர்கள் உலகமெங்கும் இருப்பார்கள். அதிலும் சில படங்கள் நம்ம ஊரு சாம் ஆண்டர்சன் படங்களைப்போல நம்மையே மொக்கையாக்கிவிடும். ஹாலிவுட் பிரியர்களையே வெறுக்க வைக்கும் சில அறுவைப் படங்களும் உண்டு. ரசிகர்களைக் காப்பாற்றுவதற்காகவே பொதுநலத்துடன் சினிமா விமர்சனங்களைத் துல்லியமாகத் தருகிறார் ரோஜர் எபர்ட். அவர் தொடங்கிய இணைய பக்கமே ஹாலிவுட்டின் டாப் விமர்சன இணைய பக்கங்களில் ஒன்று.

ஜூன் 18-ல் அமெரிக்காவின் அர்பெனா என்னும் இடத்தில் பிறந்து, பத்திரிகைத் துறையின் மீது உள்ள ஈர்ப்பால் நியூயார்க் டைம் நாளிதழில் பணியாற்றினார் ரோஜர். 1937-ல் மார்க்ஸ் சகோதரர்களின் இயக்கத்தில் வெளியான  'டே அட் த ரேஸ்' என்ற படத்தைப் பற்றி பத்திரிகையில் தன் முதல் விமர்சனம் எழுதினார். அந்தக் காலகட்டத்தில் வித்தியாசமான பார்வையில் அவர் எழுதிய விமர்சனம் அவரை பிரபலமாக்கியது.

1967-களில் இருந்து அவர் இறக்கும் வரை 'சிக்காகோ சன் டைம்ஸ்' பத்திரிகையில் உலகம் அறியும் சிறந்த சினிமா விமர்சகராக 46 வருடங்கள் தன் சினிமா பாதையை தனக்கென வகுத்தவர். சினிமாவைப் பற்றிய ஒரு தனி பார்வையை ரசிகர்களுக்கு தந்ததில் இவரின் பங்கு அளப்பரியது.

1980-களில் ரோஜர் தன் விமர்சனத்தில் கட்டை விரலை உயர்த்தியிருந்தால் படம் சூப்பர் என்றும், கட்டை விரல் கீழ் நோக்கி இருந்தால் படம் படு மொக்கை என்றும் சிம்பல்ஸ் மூலம் வந்த விமர்சனம், அந்த காலகட்டத்தில் ரோஜரைப் பிரபலமாக்கியது.

1975-ல் பத்திரிகை துறைக்கு என்று கொடுக்கப்பட்ட புலிட்சர் விருதைப் பெற்றார். முதன்முதலாக சினிமா விமர்சகருக்கு இந்த விருது அவருக்குக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சினிமா சார்ந்து 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2003-ல் அதை அறுவைசிகிச்சை செய்து மரணத்தை எதிர்த்து வாழ்ந்தவர். ஏப்ரல் 4, 2013-ல் தன் 70-வது வயதில் மறைந்தார்.

சினிமாவைப் பற்றி ரோஜர் பேசிய டாப் 7 கருத்துகள் இதோ,

1. ஒரு வித்தியாசமான ஆச்சரியத்தையும் புது அனுபவத்தையும் திரைப்படங்கள் நமக்குத் தரும். அதுவே நாம் நினைத்த, நமக்கான படமாக அமையும். ஆனால், அது ஒவ்வொருவரின் பார்வைக்கும் மாறுபடும்.

2. ஒரு படத்தில் நடித்த நடிகர்களைப் பாராட்ட வேண்டும் என்றால், அதற்கு அந்தப் படம் நல்ல படமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாருக்கும் பிடிக்காத கதையம்சமுள்ள படமாகக்கூட இருக்கலாம். ஆனால், கதாபாத்திரத்தில் நடிப்பவரின் நடிப்பு தனியாக தெரிய வேண்டும். அதுவே நடிக, நடிகைகளின் சிறப்பு.

3. ஒரு படம் எனக்குப் பிடிக்கவில்லை என்றால், அந்தப் படம் இன்னொருவருக்கும் பிடிக்கும். அதனால், எனக்குப் பிடிக்கும் திரைப்படங்கள் மற்றவருக்குப் பிடிக்க வேண்டும் என்றில்லை.

4. ஒரு திரைப்படம் ஒருவனை மனதளவில் மாற்றுகிறது என்றால், அந்தப் படம் வெற்றி பெற்றுவிட்டது என்று அர்த்தம். ஆனால், அந்தப் படம் எதைச் சார்ந்தது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

5. தனிப்பட்ட வாழ்க்கையில் முத்தம் முக்கியமானது. அதுவே படத்தில் வரும்போது என்ன பிரச்னை வந்துவிடப்போகிறது? நடப்பதை அப்படியோ பதிவுசெய்வதே சிறந்த சினிமாவுக்கான ஒரு பாதை. சினிமா 20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான கலை.

6. சினிமா விமர்சனம் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால், சினிமா முக்கியம்.

7. நாம்தான் சினிமா பார்க்கிறதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சினிமா நம்மை கவனிக்கிறது.இவரின் இணைய தள (http://www.rogerebert.com) பக்கத்தில் நேற்று வெளியான ஹாலிவுட் படமாக இருந்தாலும், பக்காவாக ஆராய்ந்து விமர்சித்துவிடுவார்கள். அவர் விட்டுச் சென்ற பாதையை அந்தத் தளத்தில் பல விமர்சகர்கள் சீராக செய்துவருவது குறிப்பிடத்தக்கது. இன்றும் அவரின் இணைய பக்கம் பழைய வேகத்துடன் இயங்கி வருவது கூடுதல் சிறப்பு. சினிமா காதலர்களுக்கும், ஹாலிவுட் பிரியர்களுக்கும் இந்த இணைய தளம் ஒரு வரப்பிரசாதம். “சினிமாவைப் பற்றிய இவரின் விமர்சனமே, சினிமாவைப் புரிந்துகொள்வதற்கும், என்னை எழுத்தாளனாக மாற்றியதற்கும் மிக முக்கிய காரணம்” என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் இன்றைய இளம் விமர்சகர்கள்!

பி.எஸ்.முத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!