Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திரையை மிரட்டிய ஃப்யூரியஸ் 7... உலகின் டாப் 10 கார்கள் ஒரே படத்தில்!

சட்டவிரோத செயல்கள் செய்துவந்த வின் டீசலின் டீம் திருந்தி வாழ நினைத்தாலும் அவர்களின் கர்மபலன் அவர்களைத் தொடர்கிறது. அதில் இருந்து தப்பித்து கொடியவர்களின் கையில் இருந்து உலகத்தைக் காப்பாற்றும் மசாலா ஆக்ஷன் கதையே ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7.

காஞ்ஜூரிங், இன்சிடியஸ், சா போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வின் டீசல், பால் வாக்கர், டுவைனி ஜான்சன், ஜேசன் ஸ்டேர்தன், டோனி ஜா உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் வெளியாகியுள்ளது ஃப்யூரியஸ் 7.

இந்த உலகத்தில் யார் எங்கே இருந்தாலும் அவரை எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய, அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரித்த ட்ராக்கிங் டிவைஸை திருடப்பார்க்கிறார்கள் எதிரிகள். கடவுளின் கண் (God's Eye) என்ற அந்த டிவைஸைக்  கண்டுபிடித்த ஹாக்கர் ராம்சியை கடத்திவிடுகின்றனர் எதிரிகள். இந்த மெஷின் எதிரிகள் கையில் கிடைத்தால், உலகத்தில் எது நடந்தாலும் எளிதில் கண்டுபிடிக்கலாம். யாரை வேண்டுமானாலும் கண்டுபிடித்து கொன்றுவிடலாம் என்பதால், தவறானவர்கள் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என்று அஞ்சுகிறது அமெரிக்கா. இதனால், யாருக்கும் தெரியாமல் ரகசிய நிறுவன உதவியுடன் கண்டுபிடிக்கச் சொல்கிறது அமெரிக்கா அரசு.

முந்தைய பாகத்தில் டெக்கர்ட் ஷாவின் சகோதரனைக் கொன்றுவிடுகிறான் டாமினிக் (வின் டீசல்). அதனால், அவனையும் அவனுடைய கூட்டத்தையும் கொல்வதற்காகத் திட்டமிட்டு வருகிறான் டெக்கர்ட் ஷா. அந்த நேரத்தில் அமெரிக்க ரகசிய நிறுவனம் டாமினிக் (வின் டீசல்) உதவியை நாடுகின்றனர். ராம்சியையும் அந்த மெஷினையும் காப்பாற்றித் தந்தால் டெக்கர் ஷாவைக் கொல்வதற்கு உதவுகிறோம் என்று டீல் பேசுகிறார்கள். டாமினிக், பால் வாக்கர் மற்றும் அவர்களின் டீம் ஒன்றிணைந்து ராம்சியைக் கண்டுபிடித்து அந்த மெஷினைக் காப்பாற்றி, இறுதியில் டெக்கட் ஷாவை கொன்றார்களா இல்லையா என்பதே கதை!

அதிநவீன டெக்னாலஜி, அபுதாபியின்  உயரமான கட்டடமான  இதியட் டவரில் கட்டடம் விட்டு கட்டடம் தாண்டும் கார்கள், வேகமாக நகரும் சேஸிங் காட்சிகள், அச்சத்தையும் மீறிய அசாத்திய ஆச்சர்யம் என்று தொழில்நுட்பத்தால் படத்தில் பார்ப்பவர்களை கட்டிப்போடுகிறது ஃப்யூரியஸ்.

பழைய வின் டீசலின் காதலியான லெட்டி, சென்ற பாகத்தின் முடிவில் ஒரு விபத்தில் பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார். வின் டீசலுடனான காதல், மீண்டும் கடந்த கால நினைவுகள் லெட்டிக்குத் திரும்புவது, வழக்கம்போல ஜிப்சனின் காமெடி கலாட்டா, நடுநடுவே சென்டிமென்ட் மற்றும் வழக்கம்போல கார்களின் சாகசம் என்று நல்ல கதை நகர்வுடன் முடிகிறது படம். போலீஸ் அதிகாரியாக வரும் ராக் (டுவைனி ஜான்சன்) மெஷின் துப்பாக்கியைத் தூக்கி விமானத்தை வீழ்த்துவது போன்ற அவரின் ஸ்டைல் இந்தப் படத்திலும் அப்படியே இருப்பது சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால் அர்னால்டை சற்றே ஞாபகப்படுத்தும் விதம்தான்.

250 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகி முதல் நான்கு நாட்களில் மட்டும் 384 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 50 கோடி வரை வசூலித்து வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இதுவரை வெளிவந்த ஃப்யூரியஸ் பாகங்களிலேயே அதிகம் வசூலித்த படமும் இதுவே.

உலகின் தலைச்சிறந்த 10 ஸ்போட்ர்ஸ் கார்களை இந்தப் படத்தில் உபயோகித்து இருக்கின்றனர். அஸ்டன் மார்டின், ஆடி ஆர் 8, புகாட்டி வேரான், டாட்ஜ் வைப்பர் எஸ்ஆர்டி - 10, ஃபெராரி 458 இட்டாலியா, மஸராட்டி கிப்ளி, மெக்லாரன் எம்பி- 4 12சி, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ், நிசான் ஜிடி ஆர் மற்றும் அரபின் தலைசிறந்த காரான லைகன் ஹைப்பர்ஸ்போர்ட் போன்ற கார்களை ஆக்ஷன் காட்சிகளில் ஓட்டி, ரேஸ் பிரியர்களுக்கும் விருந்துகளை அள்ளித் தெளிக்கிறது.

எனினும், அடுத்து வரும் காட்சிகளை முன்கூட்டியே யூகிக்கும் வகையில் இருப்பது சிறிய குறை. காரில் இருந்து இப்போது மலையில் தவ்வப்போகிறார்கள் என்றால், அப்படியே நடக்கிறது. அதேபோல் ஒரு காரில் ஜிப்சன் மட்டும் அந்தரத்தில் தொங்குவார் என நினைப்பதற்குள், அப்படியே நடக்கிறது. இதனை சற்றே குறைத்திருக்கலாம்.

படப்பிடிப்பின்போதே பால் வாக்கர் கார் விபத்தில் நவம்பர் 30-ல் இறந்துவிட, படமும் பாதியில் நின்றுவிடும் என்று பலராலும் பேசப்பட்டது. ஏனெனில் 7 பாகத்திலும் நடித்தவர், மேலும் வின் டீசலின் நெருக்கத்திற்குரிய நண்பரான பால்வாக்கரின் மரணம் ஃப்யூரியஸ் டீமையுமே துயரத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், பால் வாக்கரின் சகோதரரான கோடி வாக்கரை வைத்து மீதி கதையையும் எடுத்து படத்தினையும் ரிலீஸ் செய்துவிட்டது சிறப்பு. இந்தப் படத்தை பால் வாக்கருக்காகவே சமர்ப்பணம் செய்துவிட்டார் தயாரிப்பாளரும் படத்தின் நாயகனுமான வின் டீசல். RIP PAUL.

கடைசி  காட்சிகளில் பாலை எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்பதை ஒரு அழகான காட்சியாகவும் முடித்துள்ளது, ஆக்ஷன் படத்தில் நம்மையும் மீறி கண்களைக் கலங்க வைத்துவிடுகிறது. இதுவரை பால் வாக்கர் நடித்த 7 பாகத்தின் காட்சிகளையும் திரையில் ஓடவிட்டு, 'நீ மறைந்தாலும் என்னுடன்தான் இருக்கிறாய்' என்று வின் டீசல் படத்தின் முடிவில் பேசும்போது திரையரங்கே அதிர்ந்தது. மொத்தத்தில் ரேஸ் பிரியர்களையும், ஆக்ஷன் விரும்பிகளையும் விசில் போடச் செய்துள்ளது ஃப்யூரியஸ் 7.

இதன் எட்டாவது பாகமும் ஆன் தி வே...

பி.எஸ்.முத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்