பெரியவர்கள் பார்க்க வேண்டிய கார்ட்டூன் படம் - ’இன்ஸைட் அவுட்’ படம் ஓரு அலசல்! | Inside Out - Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (09/07/2015)

கடைசி தொடர்பு:18:25 (09/07/2015)

பெரியவர்கள் பார்க்க வேண்டிய கார்ட்டூன் படம் - ’இன்ஸைட் அவுட்’ படம் ஓரு அலசல்!

னிமேஷன் படமா அட போப்பா நாம சின்னப் பசங்களா இதுதான்  அனிமேஷன் படங்களுக்கு பலர் சொல்லும் பதில். ஆனால் டிஸ்னியின் படைப்பாக வெளியாகியிருக்கும் ‘இன்சைட் அவுட்’ படத்தை அப்படிச் சொல்லி விடமுடியாது.

சிறுபிள்ளைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்தப் படம் மிக முக்கியமான படம். உணர்வுகள் மனித வாழ்வை எப்படி நகர்த்துகிறது என கற்பனை செய்வதே கடினமான ஒன்று.ஆனால் அந்த உணர்வுகளுக்கு ஒரு உருவம் கொடுத்து உலவவிட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ததோடு தலைக்குள் ஒரு தொழிற்சாலையே நடப்பது போல் காட்சிகளை உருவாக்கி அதைப்படமாக எடுப்பது என முடிவெடுத்த இயக்குநர் பீட் டாக்டருக்கு  தைரியமும் மூளையும் அதிகம் என்றே சொல்ல வேண்டும். 

மினசோட்டா மாநிலத்தில் ஓர் அழகான பெண் குழந்தை பிறக்கிறாள். அவள் பெயர் ரைலி. அவள் தலைக்குள்  சந்தோஷம், சோகம், பயம், கோபம், வெறுப்பு ஆகிய ஐந்தும் ஐந்து பாத்திரங்களாக இருக்கின்றன. இவை தான் கதையின் நாயகர்கள். இவர்கள் ஒன்று சேர்ந்து ரைலியின் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் நகர்த்துகிறார்கள். சந்தோஷம் , துக்கம், கோபம், என நினைவுகள் அப்படியே ஒரு பந்துவடிவமாக மூளைக்குள் சேமிக்கப்படுகிறது. அதீத சந்தோஷத் தருணங்கள், ரைலியின் நேர்மையான குணங்கள், நட்பு என அந்தந்தப் பிரிவிற்கென  தனி தீவுகள்  மூளையில் உருவாகிவிடுகிறது.

சந்தோஷமாகச் சென்று கொண்டிருக்கும் ரைலி வாழ்வில் ஒரு சிக்கல்.  சொந்த வீட்டை விற்றுவிட்டு , மினசோட்டா மாநிலத்தை விட்டு ரைலியின் குடும்பம் வேறு இடத்திற்கு செல்கிறார்கள். புதிய வீட்டை ரைலியின் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தனது நண்பர்கள், ஹாக்கி டீம் என அனைத்தையும் விட்டு விட்டு இருப்பது ரைலியால் தாங்கிக் கொள்ள இயலாமல் தவிக்கிறாள்.

அந்நேரம், மூளைக்குள் ஒரு ஃபேக்டரி பாணியில் இயங்கும் நினைவுகளின் கூடத்தில் நடக்கும் ஒரு சிறு தவறால் சந்தோஷமும், சோகமும் தலைமைச் செயலகத்திலிருந்து தவறுதலாக தொலைந்து போய் விடுகிறார்கள். அடுத்து என்ன நடக்கிறது. சந்தோஷமும், சோகமும் இல்லாமல் ரைலி தன் வாழ்வில் உண்டான ஏமாற்றத்தால் விபரீத மூடிவை எடுத்து விடுகிறாள். முடிவில் ரைலிக்கு சந்தோஷம் கிடைத்ததா, அவள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறாளா என்பது மீதிக்கதை. 

ஒவ்வொரு மனிதனின் எண்ணம் எப்படியோ அப்படியே அவனும் என நாம் கேள்விப் பட்டிருப்போம் அதை அப்படியே அனிமேஷனில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒருவேளை நாம் தலைக்கு கலர் அடித்து, ஸ்டைலாக இருப்போம் எனில் நம் எண்ணங்களும் அதே போல் தான் இருக்கும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இந்த 5 அடிப்படை உணர்வுகளும் தான் முக்கியக் காரணம் என்பதைப் படம் உணர்த்துகிறது.

அதே போல் சந்தோஷம், வெறுப்பு, கோபம், பயம் இவையனைத்திலும் அழுகை இருக்கும் என்பதையும் உணர்த்தத் தவறவில்லை இயக்குநர் பீட். கொஞ்சம் தப்பினாலும் கேலியாகவோ, அல்லது கதை விடுறாங்க பாஸ் என மாட்டிக் கொள்ளும் அளவிற்கு மிக சிக்கலான கதை. அதை மிக லாவகமாகவும் , காமெடியாகவும் சொன்ன விதம் அற்புதம்.

குழந்தையாக இருக்கும் தருவாயில் எத்தனையோ கதைகள், கற்பனைகள், கற்பனைப் பாத்திரங்கள், என சந்தோஷ நாட்களாக இருக்கும். கால ஓட்டத்தில் அந்தக் கற்பனைப் பாத்திரங்கள், தொலைந்து போவது என ஒவ்வொரு இடத்திலும் நம்மை சிறுவயதிற்கு இழுத்துச் செல்கிறது திரைக்கதை. சின்னச் சின்ன உணர்வுகள் நிறைந்த காட்சிகளை பின்னணி இசை இன்னும் மெருகேற்றி நம் மனதுக்கு அருகில் கொண்டு வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேல் அப்பா, அம்மா, உறவு குடும்பம் ஆகியன ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வளவு அற்புதமான உறவு என்பதை ஆனந்தக் கண்ணீருடன் சொல்லி முடித்து நம்மைச் சிறுபிள்ளைகளாக மாற்றி கைதட்ட வைக்கிறது இந்த ‘இன்ஸைட் அவுட்’. 

- ஷாலினி நியூட்டன் - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்