வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (18/09/2015)

கடைசி தொடர்பு:15:00 (18/09/2015)

எவரெஸ்ட் : ஹாலிவுட் படம் ஓர் அலசல்!

வரெஸ்ட் உலகம் முழுக்க வாழும் துணிச்சலான மனிதர்களுக்கு கம்பீர சவால். அதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் தற்போது வெளியாகியிருக்கும் எவரெஸ்ட்

1996 மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் நடந்த பெரும் பனிப்புயலில் தப்பிய மற்றும் உயிரிழந்தவர்களின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம். ஜேசன் க்லார்கே நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மலையேறும் குழுவின் தலைவர், அடுத்து பொதுவான இன்னொரு மலையேறும் குழுவின் தலைவராக ஜேக் ஜில்லென்ஹால். இரண்டு குழுக்களும் எவரெஸ்ட் சிகரத்தை துணிச்சலாக தொட நினைத்து பயணத்தைத்  துவங்குகிறார்கள்.

ஒவ்வொரு கேம்ப்களாக தங்கித் தங்கி ஏறும் குழுக்களுக்கு மருத்துவசோதனைகள், உடல் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் என அனைத்தும் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து உயிரைப்பணயம் வைத்து குழுவின் நபர்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இடையில் உருவாகும் பனிப்புயல் மொத்தப் பயணிகளையும் புரட்டிப் போடுகிறது. பிறகென்ன நடந்தது என்பதை கொஞ்சம் கண்களை குளமாக்கி 3டியில் ஒரு சில்லென்ற அனுபவத்தைத் தருகிறது இந்த எவரெஸ்ட்.

குழுவின் தலைவனாக தன்னை மட்டுமின்றி தன்னுடன் உள்ளவர்களையும் காப்பாற்ற போராடும் ஜேசன் க்ளார்கே மனதில் தனி இடம் பிடிக்கிறார். தான் தொட்டு விட்டாலும் தன் குழுவின் இன்னொரு மனிதர் தொட வேண்டும் என்றவுடன் நடக்கவிருக்கும் ஆபத்து தெரிந்தும் மீண்டும் பயணிக்கும் இடம் அருமை. ஜோஷ் ப்ரோலின், எப்படியேனும் சிகரத்தை தொட்டுவிட வேண்டும் என நினைக்க அவரது பார்வை திடீரென அவருக்கு கைகொடுக்காமல் போய் விடவே பாதியில் செய்வதறியாது நிற்கும் போதும் தன் மனைவி, குழந்தைகளை எண்ணித் தவிப்பதும் டச்.

இரு குழுக்களும் என்னதான் முயன்றும் ஒரு சிலர் மட்டுமே பிழைத்து வருகிறார்கள். தன் கணவன் எப்படியேனும் பிழைத்து மீண்டும் வரவேண்டும் என வேண்டிக்கொண்டே வயிற்றில் குழந்தையுடன், தவித்து அழும் கண்களுடன் ஒவ்வொரு நிமிடமும் தொலைபேசியில் பேசி ஊக்குவிப்பது என கீரா நைட்லீக்கு சவாலான பாத்திரம். மிக அருமையாக தனது கதாப்பாத்திரத்தை கயாண்டிருக்கிறார்.

ஏதோ மலையேறுகிறார்கள், வருடா வருடம் ஏப்ரல் மே மாதங்களில் செல்கிறார்கள் இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான் எனினும் அதில் எவ்வளவு கஷ்டம் உள்ளது, மேலே ஏறும் போது நடத்தப்படும் அக்னி பூஜைகள், துறவிகளின் வாழ்த்துகள் என நமக்கு தெரிந்திராத இன்னொரு வித்யாச உலகையும் பிரதிபலித்திருக்கிறது இந்த எவரெஸ்ட். மலையேறியவர்களில் இறந்தவர்களின் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை , மேலும் இதைத் தாண்டி அந்த சிகரத்தின் உச்சியைத் தொட்டு விட்டு ஒரு நிமிடம் சாதித்த துடிப்புடன் அமர்ந்து அழுவதும், கொடிகளைக் குத்துவதும், என ஒவ்வொரு நிமிடமும் பனிக்குவியலுக்குள் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களாகவே விரிகின்றன காட்சிகள்.

இயக்குநர் பால்டாசர் கோர்மக்கூரின் சவாலான கதைக்களத்திற்கும் கதாபாத்திரத்திற்கும், திரைக்கதையை மிக நுணுக்கமாக எழுதியுள்ளனர் வில்லியம் நிக்கோல்சனும், சைமன் பியூஃபாயும்.என் மனைவி வேண்டாம்னு சொன்னா அவளையே விவாகரத்து பண்ணிவிடுவேன், எந்த இலக்கும் இல்லை ஆனா தொடணும் அதுதான் என் வாழ்க்கை லட்சியம் என பேசும் இரவுக் காட்சிகளில் மலையேறுபர்வர்களின் மனநிலையைப் பதிவு செய்துள்ளனர்.படத்தின் காட்சிகள் கேமராமேன் சல்வடோர் டோடினோவுக்குத் தான் மிகவும் சவாலான ஒன்று. ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்துப் பதிவு செய்துள்ளார் போலும், 3டியில் நம்மையே எவரெஸ்டில் ஏற்றி விடுகிறார்.

வெற்றி அவ்வளவு சுலபமல்ல போராடினால் மட்டுமே கிடைக்கும் என்பதையும் அதற்கு விலையாகச் சில நேரங்களில் நம்மையே கூட கொடுக்க நேரும் என்பதற்கு மிகச் சரியான ஆதாரம் இந்த  எவரெஸ்ட் சிகரம் என்பதைச் சொல்லி, உண்மையாக அந்தச் சீற்றத்தில் சிக்கிய குடும்பங்களின் காட்சிகளுடன் அவர்களுக்கு சமர்ப்பித்து படம் முடிவதும் இன்னொரு சிறப்பு. 

- ஷாலினி நியூட்டன் - 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்