Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செவ்வாய் கிரகத்தில் சமைத்து தூங்கும் மார்க் - மார்ஸியான் திரை அலசல்!

ஜாலியாய் செல்லும் பயணத்தில் யாரேனும் ஒருவரை விட்டுவிட்டு வந்தால் என்ன நடக்கும்? திரும்பி அவரை மீட்டு வரச் செல்லவேண்டுமென்றால் குறைந்தது 55 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும் என்றால்? நாம் அவரை மீண்டும் சந்திக்க நான்கு ஆண்டு காலம் ஆகும் எனச் சொன்னால்? இவை எல்லாம் உலகத்தின் ஒரு மூலையில் அல்ல, பக்கத்துக்  கிரகமான மார்ஸில் நடக்கும் கதையே மார்ஸியன்.

2011ல் ஏண்டி வெய்ர் (andy weir) எழுதி ஹிட் அடித்த கலக்கல் நாவலான தி மார்ஸியனை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் கிலேடியட்டர் புகழ் ரிட்லி ஸ்காட். கடந்த செப்டம்பர் மாதம் நாசாவும் மார்ஸில் தண்ணீர் இருப்பதாக அறிவித்துவிட, படத்திற்கு எகிறி அடித்தது பப்ளிசிட்டி.
ares III என்கிற விண்கலம் மூலம் மெலீஸா லீவிஸ் தலைமையில் மார்ஸிற்கு செல்லும் குழு, அங்கு பலமாகப் புயல் அடிக்க, மார்க் வாட்னி இறந்துவிட்டதாகக் கருதி திரும்பிவிடுகிறார்கள்.

அடுத்ததாக மார்ஸிற்கு செல்ல நான்கு ஆண்டுகள் கழித்து, ares IV என்ற விண்கலம் மூலம் செல்ல வேலைகள் நடந்துவருகிறது. இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டுகள் எப்படி மார்க் தப்பிப்பிழைத்தார் என செல்கிறது கதை.

படத்தின் உண்மைத்தன்மைக்காகப் பெரிதும் உதவி இருக்கிறது நாசா. மார்ஸின் ஒரு நாள் என்பது ஏறக்குறைய பூமியைப் போலத்தான். ஆனால் ஓராண்டு என்பது சுமார் 687 நாட்கள். 

சிவப்பு பாலைவனம் போல் தெரியும் மார்ஸின் குறைந்த பட்ச வானிலை -242 ஃபாரென்ஹீட்.  மார்ஸில் அவரிடம் இருக்கும் உணவு போதாது என்பதால், செயற்கையாகத் தண்ணீர் உருவாக்கி, உருளைக்கிழங்குகள் பயிரிடுகிறார்.

மார்க்கின் உணவுத் தேவைக்காக நாசா அவசரகதியில் ராக்கெட் அனுப்ப, அது தன் பாதையில் வெடித்துச் சிதறுகிறது. சைனாவும் அதன் பங்கிற்கு உதவ முயல்கிறது. மார்க்கின் தங்கும் இடத்திலும் விதி விளையாட, அவர் பயிரிட்டிருந்த செடிகளும் நாசமாகிறது.  இறுதியாக மார்க்கை எப்படி செவ்வாய்கிரகத்திலிருந்து மீட்டனர் என்பதே கதை,

மார்ஸியன் படம் பற்றிய சில தகவல்கள்,

ஏண்டி வெயரின் புத்தகத்தை பதிப்பகங்கள் வாங்கத் தயங்கின, அதனால், தன் வலைதளத்திலேயே ஒவ்வொரு அத்தியாயமாக இலவசமாக வெளியிடுகிறார். பலர் முழுப்புத்தகமாகக் கேட்க , அமேசானில் குறைந்த பட்ச தொகையான 0.99 டாலருக்கு விற்பனை என அறிவிக்க, புக் வைரல் சேல்ஸ்.

மார்ஸ் மாதிரியான சிவப்பு நிற மண் படர்ந்த பூமிக்காக படத்தின் மார்ஸ் பகுதிகள் மத்திய கிழக்கு தேசமான ஜோர்டானில் எடுத்து இருக்கிறார்கள். ஏழு மாதங்கள் கழித்து, மார்க் காப்பாற்றப்படுவதாக படம் எடுக்கப்பட்டு இருக்கும். அதற்காக உடல் குறைப்பு முயற்சியில் இறங்கினார் மாட் டாமன். ரிட்லி ஸ்காட் அதெல்லாம் கணினி கவனித்துக்கொள்ளும் என்றாராம் சிரித்தபடி.

கிராவிட்டி , இண்ட்டெர்ஸ்டெலார் , மார்ஸியன் என வருடத்திற்கு ஒரு முறை விண்வெளி சம்பந்தமான படம் எடுத்துவிடுகிறார்கள். ஹாலிவுட் படத்தைப் பற்றி ரிட்லி ஸ்காட் சொன்னது ஒன்று தான். “ இந்த உலகத்தில் யாரும் தனி இல்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் யாரேனும் சிக்கிக் கொண்டால், எல்லோரும் அவரைக் காப்பாற்ற தம்மால் இயன்றதைச் செய்வார்கள்” அது தான் நிஜம். 

கே.ஜி.கார்த்திகேயன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்