துரத்தும் பேய்கள் மிரளும் நாயகி – க்ரிம்சன் பீக் திரை அலசல் | Crimson Peak Hollywood Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (17/10/2015)

கடைசி தொடர்பு:14:21 (17/10/2015)

துரத்தும் பேய்கள் மிரளும் நாயகி – க்ரிம்சன் பீக் திரை அலசல்

சிவப்பு முகடு’(Crimson Peak) ஜாக்கிரதை என அம்மா இல்லாத சிறுவயதுக்  குழந்தையிடம் ஒரு கொடூரமான பேய் பயமுறுத்திச் செல்ல 19ம் நூற்றாண்டில் நடக்கும் கதையாகப் படம் ஆரம்பிக்கிறது.

இளம்எழுத்தாளரான மியா வாசிகோஸ்கா ஆர்வமாக தனக்கு நடந்த அமானுஷ்ய நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு நாவல்கள் எழுத, அதை மூத்த எழுத்தாளர் பாராட்டிவிட்டு அப்படியே நிராகரித்தும் விடுகிறார். மியாவின் வயதுக்கேற்ப காதல், ரொமான்ஸ் பின்னணியில் கதை எழுதும்படி நிர்பந்திக்கிறார். சோகத்துடன் கதை எழுதும் மியாவின் பேய்க்கதைகளை படித்துப் பார்த்துவிட்டு, பாராட்டிக்கொண்டே அறிமுகமாகும் டாம் ஹிடில்ஸ்டனைப் பார்த்தவுடன் மியா காதலில் விழுகிறார். ஆனால் மிகப்பெரிய செல்வந்தரும், தொழிலதிபருமான மியாவின் தந்தை டாமையும், அவரது அக்கா ஜெஸிக்கா சஸ்டெய்னையும் பணம் கொடுத்து மிரட்ட இருவரும் வேறு வழியின்றி ஊரை விட்டுச் செல்ல ஒப்புக்கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட வேளையில் தான் மியாவின் தந்தை கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். அமானுஷ்யங்களின் தொந்தரவுகள், தனிமை என ஆட்கொள்ள விரும்பியவரைக் கரம் பிடித்து டாமுடன் அவரது ஊருக்கு வந்திறங்கும் மியாவுக்கு அதிர்ச்சிகளும், ஆபத்துகளும் காத்திருக்கின்றன. கனவுகளுடன் கணவன் வீட்டிற்கும் வரும் மியாவை மீண்டும் துரத்தும் கொடூரப் பேய்கள், வீட்டில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள் என அவள் வாழ்க்கை இன்னும் நரகம் ஆகிறது. இதெல்லாம் எதனால்?, அதிலிருந்து மியா தப்பித்தாரா இல்லையா என்பதே க்ரிம்ஸன் பீக் படத்தின் மீதிக் கதை.

அப்பாவிப் பெண்ணாக காதல் கணவன் வீட்டில் என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம், இடையில் துரத்தும் பேய்கள், மிரட்சி என நடிப்பில் அசத்துகிறார் ஹீரோயின் மியா வாசிகோஸ்கா. காதல், ரொமான்ஸ், ஒரு பார்வையிலேயே நாயகியை வீழ்த்தும் டாம் ஹிடில்ஸ்டன் வில்லன்- ஹீரோ பாத்திரத்திற்கு சரியான சாய்ஸ். எல்லாவற்றிற்கும் மேல் அளவான வசனங்கள், பார்வையிலேயே குரோதம், வக்கிரம் என நடிப்பில் ஆச்சர்யப்படுத்துகிறார் அக்காவாக வரும் ஜெஸிக்கா சஸ்டெய்ன். ஒரு காட்சியில் அரைகுறை ஆடையைக் கையில் பிடித்துக்கொண்டு எதிர்பாராவிதமாக மியாவின் சிறு வயது நண்பனைக் கத்தியில் குத்தி விட்டுச் சிரிக்கும்போது அப்ளாஸ் அடிக்கவே தோன்றுகிறது.

படத்திற்கு மிகப்பெரிய சிறப்பு ஆர்ட் டைரக்‌ஷனும், காஸ்டியூம் டிசைனும் தான். 19ம் நூற்றாண்டிற்கான களத்தை மிகக் கச்சிதமாக அமைத்துள்ளார் பிராண்ட் கோர்டன். பழங்கால டைப் மெஷின், டேப்ரிக்கார்டர், டீ கோப்பைகள், என காட்சிக்குக் காட்சி 19ம் நூற்றாண்டின் துவக்கக் காலத்தை அப்படியே படம் பிடித்துள்ளது.  ஒவ்வொரு உடையையும் அவ்வளவு நேர்த்தியாக, பார்த்துப் பார்த்து வடிவமைத்துள்ளார் காஸ்டியூம்டிசைனர் கேட் ஹாலே. பெரிய பெரிய குடை கவுன்கள், வெல்வெட் கோட்டுகள் ஆகியன படத்தின் மிகப்பெரிய சிறப்பு எனலாம்.

கதைக்கேற்ற டான் லாஸ்ட்ஸெனின் ஒளிப்பதிவு பீரியட் கதைக்களத்திற்கு இன்னும் பலம். இசையையும் சில இடங்களில் அளவாகப் பயன்படுத்தி, சில இடங்களில் மௌனமும், பனி பொழியும் ஓசையும் என அமைத்திருப்பது இசையமைப்பாளர் ஃபெர்னாண்டோ விலாஸ்க்வெஸின் புத்திசாலித்தனத்தைக்   காட்டுகிறது.

எல்லாம் நன்றாக அமைந்தும் கதையில் பயமுறுத்துவதற்கான காட்சிகளை ஆங்காங்கே வைத்துக் கொஞ்சம் ஏமாற்றி விட்டார் இயக்குநர் கியுல்லெர் டெல் டோரோ. படம் முழுக்க டீ கோப்பையும், பேச்சு வார்த்தைகளுமே நிறைந்துள்ளன. பயமுறுத்தும் பேய்கள் என்றால் ஓரிரு காட்சிகளில் வந்துவிட்டு சென்று விடுகின்றன. அவ்வளவு நல்ல பின்னணி, பயமுறுத்தும் வாய்ப்ப்புகள் இருந்தும் கூட இயக்குநர் தவறவிட்டுள்ளார்.

பேய்ப் படமென நினைத்து பயத்தில் உறைய எண்ணிச் செல்லும் ரசிகர்களுக்கு இந்தப்படம் கொஞ்சம் ஏமாற்றமே. அதே சமயம் காதலும், காமமும் எதையெல்லாம் செய்யும் என திருப்பங்கள் நிறைந்த ஒரு பீரியாடிக் படம் பார்க்க நினைப்போருக்கு கிரிம்சன் பீக் நல்லதேர்வு.

- ஷாலினி நியூட்டன் - 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்