அந்தப் புத்தகத்தைத் திறக்காதே....கூஸ்பம்ப்ஸ் திரை அலசல் | GooseBumps Hollywood Movie Review

வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (31/10/2015)

கடைசி தொடர்பு:12:25 (31/10/2015)

அந்தப் புத்தகத்தைத் திறக்காதே....கூஸ்பம்ப்ஸ் திரை அலசல்

திறக்கக் கூடாத ஒரு புத்தகத்தைத் திறந்ததால் என்ன நடக்கிறது...- இதுதான் ’கூஸ்பம்ப்ஸ்’ படம்!

         பள்ளி மாணவன் ஸாக் கூப்பர் தன் அம்மாவுடன் நியூயார்க் நகருக்கு வருகிறான்.அப்பா இல்லாத ஸாக் தனிமையில் தவிக்க, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பழக முயல்கிறான். ஆனால், கடுகடுவென திட்டி விரட்டுகிறார் பக்கத்து வீட்டில் வசிக்கும் எழுத்தாளர் ஷிவர்ஸ். ஷிவர்ஸின் மகள் ஹென்னா அழகும், அமைதியுமாக ஈர்க்க, அவளுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான் ஸாக். அவளுடன் பழகுகிறான். தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஸாக்கையும் ஹென்னாவையும் திட்டும் ஷிவர், ஹென்னாவை வீட்டுக்குள் போகும்படி சொல்கிறார். வீட்டுக்குள் ஹென்னாவை ஷிவர் அடிப்பதும், திட்டிக் கத்துவதும் கேட்கிறது. மனம் வருந்துகிறான் ஸாக். ஷிவர்ஸ் வெளியில் கிளம்பும் தருணம் பார்த்து ஸாக்கும் அவனது நண்பனும் ஷிவர் வீட்டுக்குச் செல்கிறார்கள்.

        வீட்டுக்குள் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களிலிருந்து வித்தியாசமான ஓசைகள் கேட்கின்றன. அதீத ஆர்வத்தில் அவர்கள் அந்தப் புத்தகங்களைத் திறக்க பிரச்னை ஆரம்பம். நாவல்கள், கதைகளில் உருவான பேய், பூதங்கள், விநோத தீய ஜந்துகள் புத்தகத்திலிருந்து தப்பிக்கின்றன. பிறகென்ன நடந்தது என்பது... பரபர 3டி ட்ரீட்!

      படத்தின் நாலு முக்கிய கதாபாத்திரங்கள் தவிர்த்து ஐந்தாவது கதாபாத்திரம்... ஒரு ஹாரர் பொம்மை ஸ்லேப்பி. ஸ்லேப்பியாக வரும் பாத்திரம் பொம்மை என்பதையும் மீறி காட்சிகளில் அத்தனை வில்லத்தனத்தையும், வசனங்களையும் சேர்த்து பேய்களின் தலைவனுக்கே உரிய அத்தனை அம்சங்களையும் சேர்த்த அழகான படைப்பு. ஆரம்ப, இறுதிக் காட்சிகள் தவிர்த்து மற்ற அனைத்தும் ஒரே இரவில் நடந்து முடிகிறது.பேய்கள், தீய ஜந்துகள், விசித்திர பிராணிகள் ஆகியவை 3டியில் மிரளச் செய்யும் அனுபவம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஒரு த்ரில் அனுபவமாக இருக்கும்!

      முக்கியமாக ஹீரோவின் நண்பன் பாத்திரம்.. முதல் நாள் பள்ளி சந்திப்பில் பிரின்சிபல் பேசுவதை கேட்டுக்கொண்டே ஹ்ம்...கடைசியா பேசினதுதான் நல்லாவே இல்ல, என்றதும் ஹீரோ... அவங்க என்னோட அம்மா எனக் கூற..ஓ அப்படியா....அவங்க கடைசியா பேசினதுதான் சூப்பர் என அப்படியே பல்டி அடிப்பதும் சிரிப்பு வெடி.

       ஹாக்கி ஆடையில் ஓநாய் மனிதன், பிரம்மாண்ட ஐஸ் ஏஜ் மனிதன், கல்லரையில் மண்ணுக்குள்ளிருந்து திடீரென எழுந்து நடக்கும் ஸோம்பிகள், குட்டிக் குட்டி பீங்கான் பொம்மைகள் என படம் முழுக்க கிராபிக்ஸ் நம் கண்களைக் கட்டிப் போடுகின்றன. இரண்டு விரல் அளவு பீங்கான் பொம்மைகளைப் பார்த்தவுடன் அட...இது ஃப்ரண்ட்லி என சொல்லி முடிக்கும் முன் கத்தியை ஓங்கி எறிந்து கலவரப்படுத்தி அலற வைக்கும் காட்சிகள் அருமை. எல்லாவற்றிருக்கும் மேல் பறக்கும் மிகப் பெரிய ஹாரர் பூச்சி செய்யும் களேபரங்கள் மற்றுமொரு சிறப்பு.

      என்ன நடக்குமோ என்ற ரீதியில் செல்லும் படத்திற்கு ஏற்ற பின்னணி இசையும் மிரட்டுகிறது. சேஸிங் காட்சிகளிலும், சூப்பர் மார்கெட் ஓநாய் மனிதனின் விரட்டும் காட்சியிலும், ஒளிப்பதிவு பரபர வேகத்தை நம் உடலில் கொண்டு வந்துவிடுகின்றன. ஒரு குழந்தையின் கற்பனையே இப்படிப் பல பயங்கர கேரக்டர்களை உருவாக்கும் எனில் உண்மையில் நம் வீட்டு குட்டிச் செல்லங்கள் எப்படியெல்லாம் யோசிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

     ஒரே ஒரு காட்சியில் கார் மீது ஏறி விளையாடி , நண்பனின் கன்னத்தில் அறைந்து விளையாடும் இன்விசிபிள் சிறுவன் என்ன அவ்வளவுதானா என்பதற்குள், படத்தின் மிகப்பெரிய திருப்பமாக மாற்றி அடுத்த பார்ட்டுக்கு லீட் கொடுத்து, எப்போ அடுத்த பாகம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

     42 புத்தகங்கள், 10க்கும் மேற்பட்ட நாவல்கள் என உலகளவில் அதிகம் விற்பனையான குழந்தைகள் ஹாரர் புத்தகங்களின் கதைக் கருக்களை கொஞ்சம் கூடத் தொடாமல் புது கதையமைத்த விதம் அருமை. எனினும், புத்தகங்கள் தந்த அனுபவ, பரவசம் சினிமாவில் கொஞ்சம் குறைவுதான் என்கிறார்கள் வாசிப்புப் பிரியர்கள். அது இயல்புதானே! கிராபிக்ஸ் காட்சிகளும், கதாபாத்திரங்களும் படத்துக்குப் பெரும் பலம். வார இறுதியில் குழந்தைகளுக்கு 3டியில் ஒரு ஹாரர் படம் காட்ட.... கூஸ்பம்ப்ஸ் குட் சாய்ஸ்!

-ஷாலினி நியூட்டன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close