ஐமேக்ஸில் படம் பார்த்தாச்சு..! - என்ன விசேஷம்?

அப்பாடா... ஒருவழியா சென்னை ஐமேக்ஸில் படம் பார்த்தாச்சு. அஃப்கோர்ஸ் ஆஃபிஸ் செலவுலதான். இல்லேன்னா, லோன் வாங்கித்தான் அந்த தியேட்டருக்குப் போக முடியும் போல! சரி... ஐமாக்ஸில் என்ன ஸ்பெஷல்?

டிக்கெட் பெற்றுவிட்டு திரையரங்கின் உள் நுழையும்போதே, படிக்கட்டுகளில் தொடங்கி, இருக்கையைச் சுற்றியும் கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள், ஐமேக்ஸ் திரையின் மேல் இன்னும் அதிக எதிர்பார்ப்பைக் கூட்டியது.

  வழக்கமான திரையைவிட மூன்று மடங்கு பெரியது. இப்போது ஒரு தியேட்டரில் ஸ்க்ரீன் பொருத்தப்பட்டிருக்கும், ஆனால் சுவர் முழுக்கவுமே ஸ்க்ரீனாக இருந்தால் எவ்வளவு பெருசு இருக்கும்? அதுதான் ஐமேக்ஸ் திரை!

  தரையில் தொடங்கி, சுவரின் மேல் கூரையை இடிக்கும் அளவிற்கு முழுவதும் திரை என்பதால், ஓரத்து இருக்கையில் இருப்பவர்களுக்கும், திரை அருகில் இருப்பவருக்கும் ஐமேஸ் அனுபவம் கிடைக்குமா என்று பயந்துகொண்டே சென்றால், அனைத்தையும் பொய்யாக்கியது. முன் சீட்டில் இருந்தாலும் சரி, கடைசி சீட்டில் ஓரத்தில் இருந்தாலும் சரி முழு திரையையும் பார்க்கும் அளவிற்கு வடிவமைக்கட்டிருக்கிறது.  

  ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஸ்பெஷலே கார் சேசிங் காட்சிகள் தான். அதை இன்னும் ஸ்பெஷலாக பார்த்த அனுபவம் ஐமேக்ஸில். பரபர கார் பறக்கும் காட்சிகளில் ஸ்பீக்கரிலிருந்து அதிரடிக்கிறது ஒலி.

  துப்பாக்கியால் வில்லனை ஜேம்ஸ்பாண்ட் சுடும் போது, லைட்டாக நமக்கும் பயத்தைக் காட்டிச் சென்றது. குறிப்பாக, மெக்ஸிகோவில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்... அதகளம்!  

(சென்னை ஐ-மேக்ஸ் திரையரங்க புகைப்படம்)

  பெரிய திரை என்பதால் நிச்சயம் கழுத்து வலிக்கும் என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது, திரைக்கும், முன் சீட்டிற்கும் இடையே குறைந்தது 20 அடிக்கும் மேல் இடைவெளியிருக்கும் என்பதால், மற்ற திரைகளில் இருப்பது போல, அண்ணாந்து பார்த்து கழுத்து வலிக்கும் என்ற கவலையில்லை.

  புரொஜெக்டர் அறையிலிருந்து இரண்டு ஒளிக்கற்றைகள் திரையைத் தீண்டுகிறது. என்னவாம்? ஒரே சமயத்தில் இரண்டு 4கே புரொஜெக்டரிலிருந்து ஒளிபரப்புகிறார்கள். அதுதான் அந்த பிரமிப்பு உணர்வை உண்டாக்குகிறது!

ஆனால், இத்தனை அம்சங்கள் இருந்தும்... ஜேம்ஸ் பாண்ட் போரடித்தது எனக்கு மட்டும்தானா?! 

- பி.எஸ். முத்து

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!