பத்து இயக்குநர்களின் காதலும் காமமும்! எக்ஸ்: பாஸ்ட் ஈஸ் ப்ரெசென்ட் திரை அலசல்!

ஒரு இயக்குநர் தன் வாழ்வில் அவர் சந்தித்த பத்து பெண்களின் கதை தான் பதினொரு இயக்குநர்கள் இயக்கியுள்ள “எக்ஸ்: பாஸ்ட் ஈஸ் ப்ரெசென்ட்” படத்தின் கதை.

ஒவ்வொரு பெண்ணின் கதையையும் 10  நபர்கள் எழுதி, இயக்கி இருக்கிறார்கள். ஆக , படம் பல்வேறு நபர்களின் ஒரு கூட்டுப்பார்வை. இப்படி ஒரு விசித்திரமான ஐடியாவிற்கு உரிமையாளர், விமர்சகரும், இயக்குனருமான சுதிஷ் கமாத். 

திரைப்பட திருவிழா ஒன்றில் இயக்குநர் கே என்கிற கிஷனை சந்திக்கிறார் ஒரு பெண். இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து காலை பத்து மணி வரை அந்தப்பெண்ணுடன் கிஷன் பேசும் உரையாடல் தான் படம். காதல், காமெடி, காமம், ஹாரர், ஃபேன்டசி என சினிமாவின் பல வகைகளை கலந்து எடுக்கப்பட்டு இருக்கிறது எக்ஸ்.

சிறுவயதில் கே தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் சந்திக்கும் பெண்ணில் இருந்து, அவரது முதல் படத்திற்கு உதவும் பெண், பள்ளிப்பருவ காதலி, மனைவி என பலரது வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்து இருக்கிறார்கள் இந்தியாவின் நியூ-ஜென் இயக்குநர்கள்.

கல்கத்தாவில் இருக்கும் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்க செல்கிறான் கே. அங்கு இருக்கும் ஒரு ஸ்டூடியோவில் இரவு முழுவதும் வேலை பார்ப்பதால், அவனுக்கு பகலில் மட்டும் வீடு தேவைப்படுகிறது. காலையில் அலுவலகத்திற்கு செல்லும் ஒரு பெண் இரவு எட்டு மணிக்குத் தான் வீடு திரும்புகிறாள். இருவருக்கும் அந்த  ஒரே வீட்டை வாடகைக்கு விடுகிறார் வீட்டின் உரிமையாளரான பாடகி உஷா உதுப். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே ஆறு மாதம் அந்த வீட்டில் தங்குகிறார்கள். திடீரென ஒருநாள், கிஷன் ஏதோ அவசர நிகழ்விற்காக கல்கத்தாவை விட்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. அந்தப்பெண் கதறி அழுவதோடு அந்தக்கதை முடிகிறது. இப்படி படம் முழுக்க காதலும், காமமும் கலந்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் வரும் காட்சிகளை இயக்கி இருப்பவர் சூது கவ்வும் நலன் குமாரசாமி. அந்தக்காட்சிகளை எழுதியது ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. அவர் வேறு சில காரணங்களால் இயக்கமுடியாமல் போக, பின் நலன் இயக்கி இருக்கிறார். படத்தின் இந்தக் காட்சிகளுக்கு திரை அரங்கில் பலத்த சிரிப்பலை.

தனித்தனி படம் என்பதால் சான் ஃப்ரானிஸ்சோவில் ஒரு பெண்ணின் கதை, லண்டனில் ஒரு பெண்ணின் கதை என ஒவ்வொரு இயக்குநரும் கலர்ஃபுல்லாக எடுத்து இருக்கிறார்கள். முழுப்படமும் இரண்டு நாட்களில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் படத்தை எடிட் செய்து ஒரு கோர்வையாக மாற்ற மட்டும் ஒரு ஆண்டு காலம் ஆகி இருக்கிறது. முழுப்படத்தையும் ஸ்ரீகர் பிரசாத்தும், விஜய் பிரபாகரனும் எடிட் செய்து இருக்கிறார்கள்.

பல கதைகள் பின்னிப்பிணைந்து இருப்பதால், படம் சற்றே தலை சுற்ற வைக்கும். சினிமா ஆர்வலர்கள், வித்தியாச சினிமா பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!