Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாயகன் ரேசில் யார் யார்? ஆஸ்கார் ஃபீவர்!

இந்த மாத 28- ம் தேதி இரவு  நடக்கும் ஆஸ்கார் விருதுகளைப்  (இந்திய நேரப்படி 29-ம் தேதி காலை ) பார்க்க பலர் இணையம் /தொலைக்காட்சி முன் அமர்ந்து இருப்பர் . நடிகர்களில், கடந்த ஆண்டின் டாப் பெர்பாமன்ஸ்களை இனி பார்ப்போம்.

மேட் டேமன் (தி மார்ஷியன் ) Matt Damon, The Martian

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக செல்கிறார்கள் விண்வெளி வீரர்கள். கடுமையான காற்று அடிக்க, மார்க் வாட்னி (மேட் டேமன் )இறந்துவிட்டதாக எண்ணி அங்கிருந்து கிளம்பி செல்கிறார்கள் . ஆனால் , டேமன் இறக்கவில்லை. தனியாக செவ்வாயில் மாட்டிக் கொள்கிறார். இனி அடுத்த குழுவை செவ்வாய்க்கு நாசா அனுப்ப, சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதை விட, தான் உயிரோடு இருப்பதை பூமியில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.அங்கு இருக்கும் உணவு பத்தாது என்பதால், தாவரவியலாளரான டேமன் உணவு தயாரிக்கிறார்.அவர் பூமிக்கு திரும்பினாரா என்பது தான் கதை.

2014-ம் ஆண்டு இன்டெர்ஸ்டெல்லார் படத்தில் விண்வெளிக்கு செல்லும் டேமன் ,2015-ல் மார்ஷியன் படத்தின் மூலம் பயணித்து இருப்பார். 2011-ம் ஆண்டு வெளிவந்து தெறி ஹிட் அடித்த தி மார்ஷியன் நாவலின் அடிப்படையாக எடுக்கப்பட்ட படம் தான் தி மார்ஷியன். படம் காமெடி வகைமை என்பதால் நாவலிலும் சரி ,படத்திலும் சரி  ஹீரோ இறந்துவிடுவார் என்ற எண்ணம் எப்போதுமே வராது. எத்தனை காலம் செவ்வாயில் இருக்க வேண்டும் என்பது தான் பிரச்சனை. பல நாட்கள் செவ்வாயில் இருப்பதால், இறுதியாக உடல் மெலிந்து காணப்படுவார் டேமன். அதற்கான எந்தவொரு மெனக்கெடலும் இல்லாமல் VFX மூலம் உடலை குறைத்து இருப்பார்கள்.ஆஸ்காருக்கு முன் நடக்கும் கோல்டன் குளோப் விருதுகளில் இசை/நகைச்சுவை பிரிவுகளில் சிறந்த நடிகர் பட்டத்தை மார்ஷியன் படத்திற்காக தட்டிச் சென்று இருந்தாலும், ஆஸ்காரில் டேமனுக்கு வாய்ப்பு குறைவு தான்.

பிரயன் கிரேன்ஸ்டன் (ட்ரம்போ ) Bryan Cranston, Trumbo

திரைக்கதை ஆசிரியர் டால்டன் ட்ரம்போவின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ட்ரம்போ. 1947-ல் அமெரிக்காவின் வெற்றிகரமான திரைக்கதையாளர் ட்ரம்போ கம்யூனிஸத்தை ஆதரித்ததால், அங்கு இருந்த காங்கிரஸ் அரசால் சிறைவைக்கப்படுகிறார். சுமார் 10 மாதங்கள் கழித்து விடுவிக்கப்படும் அவருக்கு வாய்ப்புக்களை தர மறுக்கிறது ஹாலிவுட்.

தொலைக்காட்சி தொடரான பிரேக்கிங் பேடின் நாயகன் பிரயன் கிரேன்ஸ்டன் தான் படத்தில் ட்ரம்போவாக நடித்து இருப்பது. தன் திரைக்கதையான ரோமன் ஹாலிடேவை நண்பரிடம் கொடுத்துவிட்டு, அப்படம் ஆஸ்கார் வெல்லும் மகிழ்வதாகட்டும்;ராபர்ட் ரிச் என்ற புனைப்பெயரில் எழுதிய தி பிரேவ் ஒன் ஆஸ்கார் வெல்லும் போது சிரிப்பதாகட்டும் கலக்கி இருக்கிறார் பிரயன்.நண்பர்களுக்காகப் போராடுவது, கதைகள் எழுதும் போது தனக்கென ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்ளுவது என பல காட்சிகளில் அட்டகாசப்படுத்தி இருக்கிறார் பிரய்ன். பல ஆண்டுகளுக்குப் பின் , ஸ்பார்டகஸ் படத்திற்காக முதல் முறையாக இவரது பெயர் திரையில் தோன்றுகிறது, இவரின் மீதான தடையை நீக்குகிறது அமெரிக்க அரசு.

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் பல சரித்திரத் தகவல்களில் பிழை இருப்பதால், படம் பெரிதாக பாக்ஸ் ஆஃபீஸில் சோபிக்கவில்லை.சிறந்த திரைக்கதை ஆசிரியரான ட்ரம்போவின் படத்தின் திரைக்கதை இவ்வளவு கொடுமையாகவா இருக்க வேண்டும் என நக்கல் அடித்தனர் விமர்சகர்கள். இந்த ஆண்டிற்கான ஆஸ்காரில் ட்ரம்போவின் பிரயன் கிரேன்ஸ்டன் ஆஸ்கார் வென்றால், ஆச்சர்யத்தில் ட்ரம்போ குழுவினர் மயங்கிவிடுவர்.

எட்டி ரெட்மெய்ன் (தி டேனிஷ் கேர்ள்) Eddie Redmayne, The Danish Girl

ஆஸ்கார் விருதுகளில் தொடர்ச்சியாக இரு முறை சிறந்த நடிகர் வாங்கியவர்கள், ஜேசன் ரோபார்ட்ஸ் (1976,1977),டாம்  ஹாங்க்ஸ் (1993,1994). இருபது ஆண்டுகளுக்குப் பின் அந்த வாய்ப்பு எட்டிக்கு eddie எட்டியிருக்கிறது.கடந்த ஆஸ்காரில் தி தியரி ஆஃப் எவெரிதிங்க் படத்திற்காக ஆஸ்கார் வென்ர எட்டியின் இந்த ஆஸ்காருக்கான நுழைவுச் சீட்டு தான் தி டேனிஷ் கேர்ள். மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக முதன்முதலாக ஆணில் இருந்து பெண்ணாக மாறிய லில்லி எல்பியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான் தி டேனிஷ் கேர்ள்.

தன் கணவர் எட்டியை ஒரு பெண் மாடலாக நிற்க சொல்லி படம் வரைகிறாள் அலிசியா. லில்லி எல்பி என்கிற பெயரில் பெண்ணாகவே பலரிடம் அறிமுகப்படுத்தப்படுகிறான் எட்டி. கண்ணாடி முன்னாஅல், நிர்வாணமாக தன்னை ஒரு பெண்ணாக கற்பனை செய்து பார்க்கிறான் எட்டி.சின்ன சின்ன அசைவுகளில் கூட ஒரு பெண் மாதிரியான நடிப்பில் பின்னி இருக்கிறார் எட்டி.  பலத்த கருத்து மோதலுக்குப் பின் , தன் ஆணுறுப்பை சிகிச்சை மூலம் அகற்றுகிறான் எட்டி.அடுத்த அறுவை சிகிச்சை செய்வதற்கு, உடல் ஒத்துக்கொள்ளாதலால், இறந்து போகிறான்.

ஆணில் இருந்து பெண்ணாக மாறும் கதாப்பாத்திரம் என்பதால், பல்வேறு விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும், இந்த முறை ஒரு விருது கூட எட்டியால் பெறமுடியவில்லை.படத்தில் வரும் கதாப்பாத்திரத்தைப் போலவே, எட்டிக்கும் இந்த ஆண்டு வெற்றிக் கதவுகள் திறக்கப்படவில்லை.

மைக்கல் ஃபாஸ்பெண்டெர் (ஸ்டீவ் ஜாப்ஸ்) MICHAEL FASSBENDER Steve jobs

ஆப்பிள் நிறுவனத் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கைப் பதிவு தான் ஸ்டீவ் ஜாப்ஸ்.படத்தின்  முதல் ஹீரோவே திரைக்கதை ஆசிரியர் ஆரோன் சார்கின் தான்.அவரால் தான் ஒரு சுயசரிதைப் படத்தைக் கூட சலிப்பில்லாமல் ரசிகர்களால் பார்க்கமுடிகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸை ஒரு வெற்றிபெற்ற மனிதன், சிறந்த மார்க்கெட்டிங் மூளைக்காரர், பல இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் என்று அறிந்தாலும், அவருக்குள்ளேயும் சாதாரண மனிதர்களின் குணாதிசயங்கள் உண்டென்று காண்பித்திருக்கின்றனர். பிடிவாதம், குடும்பப் பொறுப்பை எதிர்கொள்ள தயக்கம், சக ஊழியர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்காமை, சிம்பதி எம்பதியெல்லாம் கிலோ என்ன விலை என கேட்பது, இப்படி பல.

இந்தப் படத்தில் ஸ்டீவ் ஜாப்ஸாக நடிக்கும்  மைக்கேல் ஃபாஸ்பெண்டர் சொல்வது போல் "ஒவ்வொரு ஈவண்ட் லாஞ்ச் ஆரம்பிப்பதற்கு முன்பும் யாராச்சும் தண்ணிய போட்டுட்டு என் கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடுறானுக". 

மேகிந்தோஷ் லாஞ்ச்சின்போது அவருடைய டிசைனருடன் சண்டை; மனைவியிடம் தகராறு; இன்னொரு நிகழ்வுக்கு முன் சக ஊழியர் வோஸ்னியாக்கியிடம் கருத்து வேறுபாடு; நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் லாஞ்ச்சின்  போது ஆப்பிள் சி.ஈஓ ஸ்கல்லியுடன் பேச்சுவார்த்தை. இந்தக் காட்சிகள், ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். ஒரு தியேட்டர் ட்ராமாவை சினிமாவில் ரீக்ரியேட் செய்வது போல் இருந்தது படம். ஒவ்வொரு உரையாடலிலும் இவருடைய குணாதிசயத்தை நேரடியாக சொல்லாமல் காட்சி மூலமாக வெளிப்படுத்தியது க்ளாஸ். இந்த ஆண்டு ஆஸ்காரில் டாப் 3 சண்டையில் நிச்சயம் ஃபாஸ்பெண்டருக்கு ஓர் இடம் உண்டு.

லியானர்டோ டி காப்ரியோ (தி ரெவெனன்ட் ) Leonardo DiCaprio, The Revenant

இந்த ஆண்டு பலரது ஆஸ்கார் சாய்ஸ் டி காப்ரியோ தான்.தி ரெவெனன்ட் படத்தின் மூலம் ஆஸ்காருக்கு ஆறாவது முறையாக பரிந்துரைக்கப்படுகிறார் டிகாப்ரியோ(ஐந்து முறை நடிப்பிற்காக, ஒரு முறை சிறந்த படம்).

கேப்டன் ஹென்ரியை குழுவை அங்கிருக்கும் அரிகர பழங்குடியினர் தாக்குகிறார்கள்.அங்கு இருக்கும் ஹக் கிளாஸின் (டிகாப்ரியோ) உதவியோடு தப்பிச் செல்கிறார்கள்.டிகாப்ரியோவை ஒரு கரடி கொடூரமாக தாக்குகிறது. கரடியைக் கொன்றுவிட்டாலும், டிகாப்ரியோ தொண்டைக்குழாய்கள் பழுதாகி பேச வழியின்றி, மரணப்படுக்கையில் தள்ளப்படுகிறான். டிகாப்ரியோவை பார்த்துக்கொள்ள டிகாப்ரியோவின் மகன், ஃபிட்ஸ்ஜெரால்ட் (டாம் ஹார்டி), ஜிம் ப்ரிஜ்சர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். டிகாப்ரியோ எப்படியும் பிழைக்கமாட்டான் என முடிவு செய்யும் ஹார்டி, டிகாப்ரியோவின் அனுமதியோடு அவனைக் கருணைக்கொலை செய்ய முடிவு செய்கிறான்.தடுக்கவரும் டிகாப்ரியோவின் மகனை வேறு வழியின்றி கொலை செய்துவிட்டு அங்கு இருந்து தப்பிக்கிறான் டாம் ஹார்டி.

கரடியுடன் சண்டை போடுவது, பைசனின் உடலின் பகுதியை பச்சையாய் சாப்பிடுவது,குளிர் தாங்கமுடியாமல், குதிரை உடம்பிற்குள் படுத்துக்கொள்வது என அதகளப்படுத்தி இருக்கிறார் டிகாப்ரியோ.இந்த முறையும் டிகாப்ரியோவிற்கு ஆஸ்கார் தரவில்லையெனில், நடிகர் பீட்டர் ஓ டூலியைப் (8 முறை ஆஸ்கார் பரிந்துரை), ரிச்சர்ட் பர்ட்டன் (7 முறை ) போல் இறுதிவரை ஆஸ்கார் பரிந்துரைப் பட்டியலோடு டிகாப்ரியோவின் ஆஸ்கார் கனவுகள் இருக்கும்.

கோல்டன் குளோப் வெல்லும் நடிகர்கள், 80 % ஆஸ்கார் வெல்வார்கள்.இதில் மீதம் இருக்கும் 20 % தான் டிகாப்ரியோ எப்போதும் இருக்கிறார் .கோல்டன் குளோப் விருதுகளை இதுவரை தி ஏவியேட்டர், வுல்ப் ஆப் வால்  ஸ்ட்ரீட் படங்களுக்காக வாங்கி இருக்கிறார் டிகாப்ரியோ.அனால் இந்த படங்கள் ஆஸ்காரின் பரிந்துரைப் பட்டியலில் இருந்தாலும் ,விருதின் வாசலை எட்டவில்லை. கோல்டன் குளோப் (சிறந்த நடிகர் டிராமா), க்ரிட்டிக் சாய்ஸ் சிறந்த நடிகர் என பல விருதுகளை  டிகாப்ரியோவிற்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறது தி ரெவெனென்ட். தி ரெவெனென்ட் டி காப்ரியோவை ஆஸ்காரின் வெற்றிப் படிகளுக்கு அழைத்துச் செல்லுமா, இல்லை.. பீட்டர் ஓ டூலே , ரிச்சர்ட் பர்ட்டன் வரிசையில் சேர்த்துவிடுமா என்பதை தெரிந்துகொள்ள பிப்ரவரி 29 தேதி அதிகாலை வரை காத்து இருக்க வேண்டும்.

-கார்த்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்