ஒரு இசைக்கலைஞனின் தலைமுடி விலை ரூ. 24 லட்சம்!

'தங்களது இசையால் உலகத்தையே கட்டிப் போட்டவர்கள்' என்ற வார்த்தை இன்று பழங்கதையாகி இருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் முதல் முதலாக பீட்டில்ஸ் இசைக் குழுவுக்காக எழுதப்பட்டதாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு ரசிகர்களை அவர்களுடைய காலத்திலும் சரி, இன்றும் சரி,  ஆச்சர்யமடைய வைப்பவர்கள். இந்தக் குழுவினர் பயன்படுத்திய கிட்டார், ட்ரம்ஸ் என்று பல பொருட்களை இன்றும் பல கோடிகளில் ஏலம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் பீட்டில்ஸ் குழுவோடு சம்பந்தப்பட்ட ஒரு பொருள் பெரும் தொகைக்கு ஏலத்துக்குப் போய் இருக்கிறது.

பீட்டில்ஸ் இசைக்குழு,  இசையில் மட்டுமல்லாமல் எல்லாவிதமான கேளிக்கை ஆட்டங்களிலும் செமை ரகளை புரிந்தவர்கள். இன்று 'யோ யோ பாய்ஸ்' ஆட்காட்டி விரலையும் சுண்டு விரலையும் நீட்டிக்கொண்டு, மற்ற விரல்களை மடித்துக்கொண்டு போஸ் கொடுப்பார்களே... அதையும் முதலில் செய்தவர்கள் இவர்கள்தான். இன்றைய ராக் ஸ்டார் வரை எல்லோரும் முடியை நீட்டாக வளர்த்து நம்ம டிஆரைப் போல தலையை சிலுப்பிக் கொண்டு இருக்கிறார்களே... அதேப்போல அந்தக் காலத்தில் முடிவளர்த்து ஆட்டம் போட்டவர்கள் பீட்டில்ஸ் குழுவினர்.

'சண்டை எல்லாம் வேணாம் வாங்க காதல் பண்ணுவோம்'னு ரகளை செய்த பீட்டில்ஸ் குழுவை ஆரம்பித்தவர்களுள் ஒருவரான ஜான் லென்னானும்,  அது போல நீண்ட முடியும் தாடியுமாகத் திரிந்தவர்தான்.  

“எல்லாம் சரி. ஆனா, இவங்க தலைமுடியை வெட்ட மறந்துட்டாங்களோ?” என்று ஒரு முறை அப்போதைய அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், இங்கிலாந்து பிரதமர் சர் அலெக் டக்ளஸை (Sir Alec Douglas) பார்த்து கேட்டார்.

அவர் அப்படி சொன்னதற்காக இல்லாமல், 1966-ம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரது முடியில் பத்து சென்டி மீட்டரை வெட்டி இருக்கிறார் ஜெர்மன் முடி திருத்துபவர் க்ளாஸ் ப்ராக். வெட்டிய பிறகு அந்த முடியை அவர் பத்திரப்படுத்தி இருக்கிறார். அப்போது வெட்டப்பட்ட அந்த முடியை இப்போது ஏலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். பத்து சென்டிமீட்டர் நீளமுடைய இந்த முடிகளை நம்மூர் மதிப்பில் 24 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார், பீட்டில்ஸ் பயன்படுத்தியப் பொருட்களைச் சேகரிக்கும் பால் ஃப்ரேஸர் என்பவர்.

எதிர்பார்த்த தொகையை விட மூன்று மடங்குத் தொகைக்கு ஏலம் போயிருக்கிறது. இவ்வளவு தொகைக்கு முடி ஏலம் போவது பெரிய சாதனைதான். "இந்த அளவு தொகைக்கு அந்த முடி ஏலம் போனதற்கான காரணம், அது ஜான் லென்னானுடைய வாழ்க்கையின் முக்கிய காலக்கட்டத்தோடு தொடர்புடையது” என்பதால்தான் என்று ஹெரிட்டேஜ் ஆக்சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கேரி ஷ்ரம் தெரிவித்திருக்கிறார். 

நம்ம ஏ.ஆர். ரஹ்மான் கூந்தலை வெட்டினப்போ யாரும் எடுத்து வச்சிருக்கீங்களா மக்களே...?!

- சுப தமிழினியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!