ஆஸ்கரில் ஹாட்-டிரிக்: அசத்திய ஒளிப்பதிவாளர்

தற்போது நடைபெற்றுவரும் 88வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை எம்மானுவேல் லுபெஸ்கி வென்றுள்ளார். கடந்த 2013 முதல் இவர்தான் இவ்விருதை வென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ நடித்த ‘தி ரெவனன்ட்’ படத்திற்காக இவ்விருதைப் பெற்றதன் மூலம்,ஹாட்-டிரிக் விருது வென்ற முதல் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

மெக்சிகோவைச் சார்ந்தவரான லுபெஸ்கிக்கு (52) இப்பெருமை ஒன்றும் எளிதில் கிடைத்துவிடவில்லை. 1995,1999,2005,2006,2011 என ஐந்து முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இவர், அனைத்திலுமே தோல்வியையே தழுவினார். ஸ்கிரீனில் ஜாலங்கள் செய்த இவரால், ஆஸ்கர் மேடையில் எதுவும் செய்யமுடியவில்லை.

ஆனால் அதையெல்லாம் மாற்றியது ‘கிராவிட்டி’. 2013ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமான கிராவிட்டியில் இவரது ஒளிப்பதிவை உலகமே மெச்சியது. இவர் வான்வெளியை நம் கண்முன்னே கொண்டுவர, மாற்றுக்கருத்தேயில்லாமல் அவ்வாண்டு, தனது முதல் ஆஸ்கரைக் கைப்பற்றினார். அடுத்த வருடமும் இவரது காட்டில் மழை தான்.மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப் படம்.மீண்டும் ஒரு ஆஸ்கர். இம்முறை ‘பேர்ட் மேன்’ திரைப்படத்திற்காக.

இவ்வாண்டுக்கான விருதுப்பட்டியலில் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பலரும் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், பலரும் லுபெஸ்கியே வெல்வார் என்று கருதினர். அந்தக் கருத்தைப் பொய்யாக்காமல் ஹாட்-டிரிக் விருது வென்று அசத்தியுள்ளார் லுபெஸ்கி.

தொடர்ந்து மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள ஒரே ஒளிப்பதிவாளர் லுபெஸ்கி தான். இப்படத்திற்காக லுபெஸ்கி, பாப்டா, ஏ.எஸ்.சி உள்ளிட்ட உலகின் பல முன்னணி விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இவர் ஒளிப்பதிவு செய்த ‘வெயிட்லெஸ்’ திரைப்படம் திரைக்குவர இருக்கிறது. யாருக்குத் தெரியும் நான்காவது முறையாகவும் லுபெஸ்கியே ஆஸ்கரை வெல்லலாம். கங்க்ராட்ஸ் ஜி!

 -மு.பிரதீப் கிருஷ்ணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!