13வது முறையும் ஆஸ்கர் கிடைக்கவில்லை - ரோஜரை தொடரும் சோகம்

திரை உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஹாலிவுட் நகரத்தின் டால்பி தியேட்டரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலகின் உட்ச நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள இவ்விழாவில் யார் விருதுகளை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் 13 முறை இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 13வது முறையாகவும் ஏமாற்றமடைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரோஜர் டீகின்ஸ்.

இங்கிலாந்தைச் சார்ந்த முன்னணி ஒளிப்பதிவாளரான ரோஜர் டீகின்ஸ்(66). புகழ்பெற்ற ஜேம்ஸ்பான்ட் படமான ‘ஸ்கைஃபால்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களின் காட்சிகளை அழகாக்கியது இவர் சிந்தைதான். கடந்த 1994ம் ஆண்டு ‘சஷான்க் ரிடம்ப்ஷன்’ படத்துக்காக ஆஸ்கர் விருதுக்கு முதன்முதலாய் பரிந்துரைக்கப்பட்டார் டீகின்ஸ். அதன்பின் கடந்த 20 ஆண்டுகளில் 11 முறை இவரது பெயர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் ஒருமுறை கூட அவரால் வெல்ல முடியவில்லை.

இவ்வாண்டு ‘சிசாரியோ’ திரைப்படத்திற்காக 13வது முறையாக பரிந்துரைக்கப்பட்ட டீகின்சுக்கு அந்த உயரிய விருதைப்பெரும் வாய்ப்பு இன்னும் கைகூடவில்லை போல. 13வது முறையாகவும் அதை அவருக்கு தோல்விதான் மிஞ்சியுள்ளது. இறுதிப்பட்டியல் வெளியான போது, “13வது முறையாவது உங்கள் முதல் ஆஸ்கரை வெல்வீர்களா” என்று பத்திரிகையாளர்கள் கேட்க, “நான் அப்படி நினைக்கவில்லை. எம்மானுவேல் லுபெஸ்கி (தி ரெவனன்ட் படத்தின் ஒளிப்பதிவாளர்) தான் இம்முறை வெல்வார் என்று நினைக்கிறேன். எனக்குப் பிடித்த படங்களில் பணியாற்றுவது தான் எனக்கு மகிழ்ச்சி. அது விருதுக்கெல்லாம் அப்பாற்பட்டது” என்றார்.

இதில் என்ன சிறப்பென்றால் அவர் சொல்லியது போலவே லுபெஸ்கி தான் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கரை வென்றுள்ளார். 13வது முறையாக ஒரு ஜாம்பவான் ஒளிப்பதிவாளர் ஏமாற்றமடைந்திருப்பது ஹாலிவுட்டில் பெரும் பரிதாப அலைகளை எழச்செய்துள்ளது. இவரது அடுத்த படம் 2018ம் ஆண்டு தான் வெளிவருகிறது. அப்போதாவது இவருக்கு ஆஸ்கர் கிடைக்குமா? 

-மு.பிரதீப் கிருஷ்ணா 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!