Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”260 பாதிரியார்களால் ஆயிரக்கணக்கான பிஞ்சுக்குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்” ஒரு ஸ்பாட்லைட் ரிப்போர்ட்!

டடே! மேட் மேக்ஸ் படத்திற்கு ஆறு ஆஸ்கர்களா, ஆஸம் ஆஸம் என சிலாகித்துக் கொண்டும், அப்பாடா இந்த முறையாவது லியோனார்டோவுக்கு ஆஸ்கர் கிடைத்ததே என பெருமைப் பட்டுக்கொண்டும் இருக்கும் வேளையில் ஏன் சிறந்த படமாக ஸ்பாட்லைட் என கேட்கும் நல்லுள்ளங்களுக்காக இந்தக் கட்டுரை.

ஏன், சிலர் ‘ஸ்பாட்லைட்டுக்கு சிறந்த பட விருதா.. ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை’ எனக் கூறும்போது நமக்கு ஏற்பட்ட சிறுகோபமும் தான் இந்தப் பதிவு எனலாம்.

ஊடகத்தின் பலம், ஊடகத்தின் தர்மம், ஒரு சமுதாய அவலத்தைத் தட்டிக்கேட்டதற்காகக் கிடைத்த அங்கீகாரம் தான் இந்த ஆஸ்கர் விருது. உண்மையச் சொன்னால் இந்தப் படத்திற்கு ஏன் ஆஸ்கர் என்னும் கேள்வியே படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கொள்ளலாம்.

சரி உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த இந்த ஸ்பாட் லைட் படம் பற்றி பார்ப்போம், அமெரிக்காவின் ஒரு சின்ன நகரமான போஸ்டன் நகரிலிருந்து வெளியாகும் தினசரி பத்திரிகைதான் தி போஸ்டன் க்ளோப். அந்தப் பத்திரிகையின் இன்வெஸ்டிகேஷன் குழுவான ஸ்பாட்லைட் டீமுக்கு புது பொறுப்பாசிரியர் ஒருவர் வருகிறார்.

வழக்கமான கான்ஃபெரன்ஸ் மீட்டிங், அறிமுகங்கள் முடிந்து , அவர் கேட்கும் முதல் கேள்வி கத்தோலிக்க தேவாலங்கள் குறித்த கட்டுரை என்ன நிலையில் உள்ளது என்பதே. அதற்குக் குழுவில் ஒருவர் ஆம், அது ஒரு பத்திதானே என்றதும். அதைத் தீர விசாரித்து எழுதினால் கண்டிப்பாக பெரிய அளவிலான கவர் ஸ்டோரியாக்கலாம் எனக் கூறக் குழுவும் உயரதிகாரி பேச்சைத் தட்ட முடியாதே என நினைத்து களத்தில் இறங்குகிறார்கள்.

ஒவ்வொன்றாகத் தோண்டித் துருவினால் திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன. கத்தோலிக்க மதப் பாதிரியார்கள் சிலர் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்கள் என்பது புரிகிறது. இன்னும் இன்வெஸ்டிகேஷன் தீவிரம் அடைய , அதிர்ச்சிகரமாக 13 பாதிரியார்கள் எனத் தெரியவர குழு விழித்துக்கொள்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் மனநிலை, என்ன நடந்தது என தேடினால் கடைசியில் ஒரு 87 பாதிரியார்களின் கோடூரச் செயல்கள் அம்பலமாகிறது . சாட்சிகள், வக்கீல்கள் கொடுத்த மறைமுக தகவல்கள், காவல்துறை அளித்த சின்னச் சின்ன குறிப்புகள் என அனைத்தும் உருவாகி கட்டுரை எழுதி வெளியிடலாம் என்றபோது, ஒரு பாதிக்கப்பட்டவரின் கடிதமும் அதிகாரப்பூர்வமாகக் கிடைக்க சீனியர் எடிட்டர் இப்போது வேண்டாம் என்கிறார்.

இது எவ்வளவு பெரிய பிரச்னை தெரியுமா, எத்தனைப் பிஞ்சுக் குழந்தைகள் தெரியுமா? என்ன வெங்காயத்திற்காக நிறுத்த வேண்டும் என இரண்டாம் நிலை ஜர்னலிஸ்ட் கத்துகிறார். ஆனால் எதையும் சரியாக உறுதி செய்யாமல் வெளியிடக் கூடாது என்பதே சீனியர் எடிட்டரின் குறிக்கோள், முக்கியஸ்தர் ஒருவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறார்கள், அதுவும் கிடைத்துவிட, செய்திக் கட்டுரை தயார்.

சனிக்கிழமை இரவு கட்டுரையை அச்சுக்கு அனுப்பிவிட்டு, பொறுப்பாசிரியர் திங்கட்கிழமை சந்திக்கலாம் எனச் சொல்லிவிட்டு செல்கிறார்.  அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை செய்தித் தாள்கள் வெளியாகிறது. விடுமுறை தானே வாசகர்கள், எதிர்ப்பாளர்கள் தாமதமாகத் தான் வருவார்கள் என நினைத்துக் கொண்டே கொஞ்சம் சீக்கிரமாகவே திங்கட்கிழமை சந்திக்கலாம் என்று சொல்லிய குழு ஆர்வம் மிகுதியால் அலுவலகம் வந்து சேர்கிறது. வந்தால் அதிர்ச்சிகள் வேறு விதமாக வருகின்றன.

எதிர்ப்புகளோ, அல்லது மக்களின் கருத்துக்கான கால்களோ வரவில்லை. அவர்களுக்கு வரும் அத்தனைப் போன் கால்களும் ஏதேதோ ஒரு மூலையில் இருந்து பாதிக்கப்பட்டு தப்பித்தவர்களின் கால்கள். அதிர்ச்சியில் பரபரப்பாக குறித்துக்கொள்ள வேண்டி போன் கால்களை எடுத்து “ஹெல்லோ திஸ் ஈஸ் ஸ்பாட்லைட்” என்றவுடம் படம் முடிகிறது.

முடிவில் பாஸ்டன் நகரில் மட்டும் 260 பாதிரியார்களால், 1000கணக்கான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தப்பிப் பிழைத்துள்ளனர். இந்த லிஸ்டில் உள்ளவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என ஒரு லிஸ்ட் விரிய அதில், அமெரிக்க மட்டுமல்ல பல நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் சிறுவயதில் நசுக்கப்பட்டு உயிர்ப் பிழைக்க முடியாது இருந்துள்ளது நம்மை அதிர்ச்சியாக்குகிறது.

படம் முடிந்தபின், படம் ஆரம்பித்த போது போடப்பட்ட ”இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது” என்ற எழுத்துகள் கண்முன் சென்று மறைகையில் ஒரு சக மனிதராக நம் மனதை உலுக்கிவிடும்.

இந்த சம்பவத்தையொட்டி சுமார் 600 கட்டுரைகளை வெளியிட்டுள்ளது தி போஸ்டன் க்ளோப் பத்திரிக்கை. இதனால் போஸ்டனின் கத்தோலிக்க தேவாலயங்களின் சட்டங்கள் திருத்தப்படுகிறது. அதன் முக்கியஸ்தர்கள் நீக்கப்படுகின்றனர்.

இதில் சரியான பாடம் என்னவென்றால் மதம் சார்ந்த விஷயமானாலும் சமுதாய அவலம் எனில் மக்களாலும், சட்டங்களாலும் ஆதரிக்கபட்டுள்ளதேயன்றி, எதிர்ப்புகளும், மதம் சார்ந்த கண்டனங்களும் எழவில்லை என்பதே உண்மை.

ஒரு ஊடகத்தின் வேலை என்ன, ஒரு செய்திக்காக எப்படியெல்லாம் யாரிடமெல்லாம் நின்று திட்டு வாங்க வேண்டும், இதையெல்லாம் தாண்டி ஒரு உண்மையை உரக்கச் சொல்ல எத்தனைப் பாடுபட வேண்டும் எனக் காட்டிய பாங்கு கண்டிப்பாக ஊடகங்களுக்குக் கொடுத்த மரியாதைதான் இந்த ஸ்பாட்லைட் படத்திற்குக் கொடுத்த ஆஸ்கர்.

இப்படத்தின் கதை 2013லேயே முடித்து வைத்து தயாரிக்க யாரும் முன்வராததாலேயே தாமதமாகியிருப்பது இன்னொரு சோகக் கதை.

இது குறித்து இயக்குநர் டாம் மெக்கர்த்தி கூறுகையில் ‘ சிங்கர் ஜீன் 2013 ல் ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சிட்டாங்க.. ஆனா இந்த ஸ்கிரிப்ட்டை யாரும் தயாரிக்க முன்வரவில்லை. சிங்கர் ஸ்கிர்ப்ட் எழுதும்போது அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது (highlight the power of journalism)...பத்திரிகைத் துறையின் சக்தியை முன்நிறுத்த வேண்டும் என்பதே. இந்தக் கதை கத்தோலிக்க சர்ச்சில் நடந்ததை அம்பலப்படுத்துவது கிடையாது’ என்கிறார். ‘டாம் கூட கத்தோலிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர், கதையோட முக்கிய நோக்கமே நியூஸ் ரூமின் பவரை காட்டுவதுதான் . இன்றைக்கு அது இல்லாமல் இருப்பதையும் சொல்வதுதான். இந்தக் கதை முக்கியமானது. ஜர்னலிசம் முக்கியமானது. இதுதான் இந்தக் கதையோட மெசேஜ்’ என்று சிங்கர் சொல்கிறார் . ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மை.

ஒவ்வொரு ஊடகமும் கூட உண்மையை உரக்கச் சொல்ல போராடி சில வேளைகளில் அரசியலாலும், சக்திவாய்ந்த அதிகாரத்தாலும் தோல்வியடையும் போது அதற்குப் பின்னால் முதல் நிலையிலிருந்து கடை நிலை ஊழியர்கள் வரை பலரின் போராட்டமும் உழைப்பும் கூட தோல்வியடைகின்றன என்பதை பொது மக்களுக்குக் காட்ட வேண்டிய நிலையும் தற்போது உருவாகியுள்ளது.

- ஷாலினி நியூட்டன் - 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்