நீங்கள் யார் பக்கம் ? சூப்பர்மேனா? பேட்மேனா ? - பேட்மேன் Vs சூப்பர்மேன் திரை அலசல்

சாதாரண மனிதனில் இருந்து சூப்பர் ஹீரோவான பேட்மேனுக்கும், க்ரிப்டன் கோளில் இருந்து வந்த ஏலியன் சூப்பர்மேனுக்கும் நடக்கும் சண்டையும், அதற்குப் பின்னான காட்சிகளுமே Batman v Superman: Dawn of Justice திரைப்படம். மேன் ஆஃப் ஸ்டீல் படத்தின் இறுதியில் சூப்பர்மேன் மெட்ரொபோலீஸ் நகரத்தை காப்பாற்றியிருந்தாலும் , நகரம் குத்துயிரும்,கொலை உயிருமாய் இருக்கும். சூப்பர்மேனால் நகரம் சீர்குழைந்து இருப்பதைப் பார்த்து கடுப்பாகிறார் பேட்மேன்.

அதன் பின் 18 மாதங்கள் கழித்து இந்தப்படம் ஆரம்பிக்கிறது . சூப்பர்மேனை ஒழிக்க வேண்டும் என நினைக்கிறார் ப்ரூஸ் வெய்ன் என்ற பேட்மேன். பத்திரிக்கையாளராக பணிபுரியும் சூப்பர்மேன் , பேட்மேன் முகத்திரையை கிழித்து, அவர் யார் என்பதை உலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்.அமெரிக்க அரசு சூப்பர்மேனால் நிகழ்ந்த பாதிப்புகளுக்கு சூப்பர்மேன் விளக்கம் அளிக்கவேண்டும் என அறிவிப்பு வெளியிடுகிறது. சூப்பர்மேன் விளக்கம் அளிக்க வர, வில்லன் லெக்ஸ் லூதரின் சதியால் கட்டிடம் வெடித்து சிதறுகிறது. சூப்பர்மேன் மீது பேட்மேனுக்கும்,மக்களுக்கும் கோபம் இன்னும் அதிகரிக்கிறது. சூப்பர்மேனைக்கொல்ல பேட்மேன் க்ரிப்டோனைட் ஈட்டி தயார் செய்கிறார்.

சூப்பர்மேனின் தாயார் மார்த்தாவைக் கடத்தும் லெக்ஸ் லூதர், பேட்மேனைக் கொன்றால் தாயாரை விடுவதாக சொல்கிறான். இங்கிருந்து பேட்மேன் , சூப்பர்மேன் சண்டை ; டூம்ஸ்டே மெகா வில்லனை பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர்வுமன் சண்டை அதிரடியில் இறங்குகிறது. பேட்மேனின் பெற்றோர்கள் கொலை செய்யப்படுவது, பேட்மேன் வவ்வால் குழிக்குள் விழுவது,மாதிரியான பார்த்துப்புளித்துப்போன காட்சிகள் மட்டும் 30 நிமிடங்களுக்கு மேல் வருகிறது. போதும் பாஸ். ஆனால், மெட்டா ஹ்யூமன்களான தி ஃபிளாஷ், அக்வாமேன், சைபார்க் போன்ற மெட்டாஹூயூமன்களை (metahuman) ஒரு காட்சியில் அறிமுகப்படுத்துகிறார்கள். திரையரங்கில் தெறி அப்லாஸ் வாங்கிய காட்சிகளில் இதுவும் ஒன்று .(இவையனைத்தும் தனிப்படங்களாக வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது).

சூப்பர்மேனும் பேட்மேனும் சண்டையிடும் காட்சி தான் தெறி என்றால், இறுதியில் வரும் நால்வர் சண்டைக் காட்சி வேற லெவல். இறுதியில் சூப்பர்மேன் தன் உயிரை தியாகம் செய்து, டூம்ஸ்டே வில்லனை கொன்றதும் படம் முடிந்துவிடுகிறது. சூப்பர்மேனின் இறுதி ஊர்வலக் காட்சிகள் எல்லாம் ரொம்பவே ஓவர் பாஸ்.

எப்படியும் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் ஜஸ்டிஸ் லீக் படத்தில் சூப்பர்மேனும் வருவார் என்பதால், சூப்பர்மேன் இறுதி ஊர்வலக் காட்சிகள் பெரிதாய் ஒட்டவில்லை. படம் சுமார் 150 நிமிடங்கள் ஓடினாலும், ரசிகர்கள் சில்லறையை சிதறவிட்டு கை தட்டும் காட்சிகள் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு மேல் வருவதால், தாராளமாய் சூப்பர் ஹீரோ ரசிகர்கள் பார்க்கலாம்.

இயக்குநர் நோலனின் பேட்மேன் சீரிஸ் பார்த்த ரசிகர்களுக்கு படம் சற்று போர் அடிக்கலாம். ஆனால், மற்றவர்களை நிச்சயம் கவர்கிறார் இயக்குநர் ஜேக் ஸ்னைடர். மார்வெல்லின் ஹிட் படங்களின் வசூலை டிசியின் பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் முறியடிக்குமா என்பது ரசிகர்களின் கையில் இருக்கிறது. டிசியின் இந்தப்படம் பிடிக்காத ரசிகர்கள் , மார்வெல்லின் கேப்டென் சிவில் வார் படத்திற்காக இன்னும் இரு மாதம் காத்துக்கிடக்க வேண்டியிருக்கும்.

இதோ அடுத்து வெளிவர இருக்கும் டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோ படங்கள்

சூசைட் ஸ்குவாட்

August 5, 2016

வொண்டர் வுமன்

June 23, 2017

ஜஸ்டிஸ் லீக் . பாகம் 1

November 17, 2017

தி ஃபிளாஷ்

March 16, 2018

அக்வாமேன்

July 27, 2018

ஷாஷம்

April 5, 2019

ஜஸ்டிஸ் லீக் பாகம் 2

June 14, 2019

சைபார்க்

April 3, 2020

க்ரீன் லேன்டர்ன்

June 19, 2020

இதற்கு போட்டியாய் மார்வெல்லும் 2020 வரை படங்களை தயாரிக்க இருக்கிறது. ஆக, 2020 வரை சுப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு செம தீனி இருக்கிறது.

-கார்த்தி-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!